Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 56)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்யே என்பதன் தன்மை விகுதியினுடைய பொருள்
மூலம் – இதில் ஔசித்யத்தாலே “புகலொன்றில்லா அடியேன்”, “அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சநோ அகதி”, “ந தர்மநிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ” இத்யாதிகளிற்படியே அதிகாரி விசேஷமும், கார்ப்பண்யமாகிற பரிகரமும் ஸூசிதம். இது கத்யத்தில் “அநந்யசரண:” என்கிற பதத்திலும், சிறு கத்யத்தில் “ஸ்வாத்ம நித்ய நியாம்ய” என்கிற சூர்ணிகையிலும், ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் “தத் ப்ராப்தயே ச தத்பாதாம்புஜ த்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந:” என்கிற சூர்ணிகையிலும் ப்ரபஞ்சிதமாயிற்று. அருளாளப்பெருமாளெம்பெருமானாரும், ஸ்வாபீஷ்டே பரஸம்பந்தே ஸ்வாசக்தத்யா ஹீநஸாதந: தத் ப்ராப்த்யுபாயம் க்ருத்வா விச்வாஸ பூர்வகம் என்று அருளிச்செய்தார். இப்படி அகிஞ்சநாதிகாரமாய், பர ஸமர்ப்பண ரூபமான உபாயத்தைச் சொல்லுகையாலே, துஷ்கர கர்மாந்தர நைரபேக்ஷ்யம் அர்த்த ஸித்தம். இப்படி சரண சப்தாந்விதமான “ப்ரபத்யே” என்கிற பதத்திலே, “ரக்ஷிஷ்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா | ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே” என்று நிர்திஷ்டமான நாலும் சொல்லிற்றாயிற்று.
– த்வயத்தின் முதற்பகுதியில், இதற்கான அதிகாரி இன்னவர் என்பதும், ப்ரபத்தியின் ஒரு அங்கமான “எந்தவிதமான கைம்முதலும் இல்லாமல் இருத்தல் (கார்ப்பண்யம்)” என்பதும் கீழே உள்ள வரிகளில் கூறுவது போன்று, வெளிப்படுகிறது: திருவாய்மொழி (6-10-10) - புகலொன்றில்லா அடியேன் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-30) - அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சநோ அகதி – நான் அபராதங்களுக்கு இருப்பிடமாகவும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி அற்றவனாகவும், உன்னை அல்லாமல் அடையவேண்டிய வஸ்து வேறு இல்லாமலும் உள்ளேன் ஸ்தோத்ரரத்னம் (22) - ந தர்மநிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ – நான் கர்மயோகம், ஜ்ஞாந யோகம், பதியோகம் போன்ற தர்மங்களை இயற்றியவன் அல்லன் இது சரணாகதி கத்யத்தில் - அநந்யசரண: - வேறு சரண் அற்ற – என்பதன் மூலமும்; சிறு கத்யமான ஸ்ரீரங்க கத்யத்தில் - ஸ்வாத்ம நித்ய நியாம்ய – என்னுடைய ஆத்மாவானது உன்னுடைய கட்டளைக்கு உட்பட்டது – என்னும் சூர்ணை மூலமும்; ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் - தத் ப்ராப்தயே ச தத்பாதாம்புஜ த்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந: - ஸர்வேச்வரனை அடைவதற்கு அவனுடைய இரண்டு திருவடித் தாமரைகளில் ப்ரபத்தி செய்வது அல்லாமல் மற்ற எந்தவிதமான உபாயமும், ஆயிரம் கோடி கல்பங்கள் கழிந்தாலும் எனக்கு இல்லை என்று எண்ணும் நான் – என்னும் சூர்ணை மூலமும் வெளிப்பட்டது. இதனை ஸ்வாமி அருளாளப்பெருமாளெம்பெருமானார், ஸ்வாபீஷ்டே பரஸம்பந்தே ஸ்வாசக்தத்யா ஹீநஸாதந: தத் ப்ராப்த்யுபாயம் க்ருத்வா விச்வாஸ பூர்வகம் – தான் விரும்புவதான மோக்ஷம் என்னும் பகவத் அனுபவத்திற்குத் தேவையான மற்ற எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ளச் சக்தி அற்றவனாக, மஹாவிச்வாஸத்துடன் பகவானுடைய திருவடிகளை மட்டுமே உபாயமாகக் கொண்டு – என்று அருளிச்செய்தார். இவ்விதம் ப்ரபத்தி என்பது, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி ஏதும் தன்னிடம் இல்லை என்றும், தன்னைக் காப்பாற்றும் பாரத்தை அவனிடம் ஒப்படைத்தல் என்றும் உள்ள உபாயத்தைக் கூறுவதால், இதனைக் கைக்கொள்ளும் அதிகாரி ஒருவன் தன்னால் இயற்றுவதற்குக் கடினமான எதனையும் கைக்கொள்ளவேண்டாம் என்பது தெளிவாகிறது. ஆக, “சரணம்” என்பதுடன் சேர்ந்ததான “ப்ரபத்யே” என்னும் சொல்லில், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-28) - ரக்ஷிஷ்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா | ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே – அவனுக்கு ஏற்ற முறையில் உள்ளேன் என்னும் எண்ணம், அவனுக்கு விருப்பம் அல்லாதவற்றை விடுதல், அவன் ரக்ஷிப்பான் என்னும் நம்பிக்கை, அவன் நம்மைக் காக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை, தனது ஆத்மஸ்வரூபத்தைச் சமர்ப்பணம் செய்தல், கார்ப்பண்யம் – என்பதான அங்கங்கள் கூறப்பட்டது.