Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 54)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் இரண்டு பகுதிகளும் சேர்ந்து அளிக்கும் பொருள்
மூலம் – பூர்வோத்தர கண்டங்கள் இரண்டுக்கும் திரண்ட பொருள் நிஷ்கர்ஷிக்குமிடத்தில், அகிஞ்சநனான எனக்கு நீ உபாயாந்தர ஸ்தாநத்திலே நின்று, பலவிசேஷத்தைத் தருகைக்காக யதோக்தமான ஆத்மரக்ஷாபரநிக்ஷேபம் பண்ணுகிறேனென்று ஒரு விசிஷ்ட ப்ரார்த்தநாந்வித பரஸமர்ப்பணமாம். இஸ்ஸமர்ப்பணமும், அத்யவஸாய சப்தார்த்தமாம். இப்படி ஸபரிகரமான பரஸமர்ப்பணமே ப்ரபத்தி சாஸ்த்ரார்த்தமென்னுமிடம் ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே பலவிடத்திலும் ஸமர்த்தித்தோம். “அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் | மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருதக்ருத்யோ பவிஷ்யதி” என்று ப்ரபத்தி மந்த்ராந்தரத்திற் சொன்ன கர்த்தவ்ய நிக்ஷேப ப்ராதாந்யம் இங்கும் துல்யம்.
– த்வயத்தின் முதற்பகுதி மற்றும் இரண்டாம் பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து, த்வயத்தின் பொருளை உறுதி செய்யும்போது, “நான் எந்தவிதமான உபாயமும் அற்றவன். ஆகவே நீ அந்த உபாயங்களில் இடத்தில் நின்று, எனக்கு விருப்பமான பலனை அளிப்பாயாக. இதனை வெளிப்படுத்தும்விதமாக, என்னைக் காப்பாற்றும் பொறுப்பை, நான் உன்னிடம் சமர்ப்பணம் செய்கிறேன்”, என்று கூறுதலே ஆகும். ஆகவே த்வயம் என்பது நம்மைக் காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தல் என்பதுடன் கூடிய ஒரு சிறப்பான ப்ரார்த்தனை ஆகும். இத்தகைய சமர்ப்பணம் என்பதும், “ப்ரபத்யே” என்பதான உறுதிமொழியின் பொருளாகும். இவ்விதம் அனைத்து அங்கங்களுடன் கூடியதான சமர்ப்பணம் என்பதே ப்ரபத்தி ஆகும் என்று பல ப்ரமாணங்களாலும், பழக்க வழக்கங்களாலும் நாம் பலமுறை நிரூபித்துள்ளோம். ஸாத்யகி தந்த்ரத்தில் - அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருதக்ருத்யோ பவிஷ்யதி – இந்த மந்த்ரம் கொண்டு ஒருவன் தனது ஆத்மாவை என்னிடம் ஸமர்ப்பணம் செய்யவேண்டும்; இப்படிச் செய்யவேண்டியதை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியதைச் செய்தவன் ஆகிறான் – என்னும்படி, ப்ரபத்திக்காகச் சொல்லப்படும் மந்த்ரங்களில் கூறப்படும் பரஸமர்ப்பணமே த்வயத்திலும் உள்ளது.