Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 52)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தின் இரண்டு பகுதிகளாலும் ப்ரார்த்திக்கப்படுபவை

மூலம் – இஷ்டப்ராப்தி அநிஷ்டநிவ்ருத்தி ரூபமான பலத்தினுடைய ப்ரார்த்தனையை உத்தர கண்டத்திலே பண்ணாநிற்க, இங்கும் பலப்ரார்த்தனையைப் பண்ணினால் புநருக்தியுண்டாம்; ப்ரபத்திக்குப் பலமாக பக்திரூபோபாயத்தைப் ப்ரார்த்திக்குமாப்போலே ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு இங்கு ஸாத்யமாய்ப் ப்ரார்த்தநீயமாயிருப்பதோர் உபாயமில்லை. ஆன பின்பு இங்கும் ப்ரார்த்தனையைச் சொல்லுகிறபடி என்னென்னில், பலப்ரதாநம் பண்ணுகிறவிடம் ஸர்வாதிகாரி விஷயத்திலும் பொதுவாயிருக்க, அகிஞ்சநனாய் ஸர்வபரந்யாஸம் பண்ணுகிறவன் பக்கல் ப்ரபத்தி வேறோர் உபாயத்துக்கு அங்கமாக நில்லாதபடி சரண்யன் தான் உபாயாந்தர ஸ்தாநத்திலே நின்று, பலம் கொடுக்கிற அம்சம் ஏற்றமானபடியாலே அவ்வேற்றமான பரஸ்வீகாராம்சம் இங்கு ப்ரார்த்திக்கப்படுகிறது.

– விருப்பங்களை நிறைவேற்றித் தரவேண்டும், விருப்பம் அல்லாதவற்றை விலக்கித் தரவேண்டும் என்பதான ப்ரார்த்தனைகள் த்வயத்தின் இரண்டாவது பகுதியில் செய்யப்படுவதால், இதே விண்ணப்பங்கள் முதல் பகுதியிலும் உள்ளன என்றால், கூறியது கூறல் என்னும் புநருக்தி தோஷம் உண்டாகும் அல்லவோ? ப்ரபத்தியை ஓர் அங்கமாகக் கைக்கொண்டால், அதன் பலனாக பக்தி வடிவில் உள்ள உபாயத்தை அடையவேண்டும் என்பதை ப்ரார்த்தனையாகக் கொள்ளலாம். ஆனால் ப்ரபத்தியைத் தனியான (அல்லது நேரடியான) உபாயம் என்று கொண்டால், அதனைப் பெற வேறு ஓர் உபாயத்தைத் தரவேண்டும் என்னும் ப்ரார்த்தனைக்கு இடமில்லை. ஆனாலும் இங்கு ப்ரர்த்தனையைக் கூறுவது எப்படி (அதாவது த்வயத்தின் முதல் பகுதியின் மூலம் ப்ரார்த்திக்கப்படுவது என்ன)? இதற்கான விடை - த்வயத்தின் இரண்டாவது பகுதியில் உள்ள ப்ரார்த்தனை மூலம் பெறப்படும் பலன்கள் பக்தி அல்லது ப்ரபத்தி என்னும் இரண்டுவிதமான உபாயங்களைக் கைக்கொண்ட அனைத்துவிதமான அதிகாரிகளுக்கும் பொதுவாகவே உள்ளது. ஆனால் மற்ற எந்தவிதமான உபாயங்களும் இல்லாமல், தன்னுடைய ஸ்வரூபம் – பாரம் – பலன் ஆகிய அனைத்தையும் சமர்ப்பணம் செய்த ஒருவனுக்கு, ப்ரபத்தியானது வேறு ஓர் உபாயத்தின் அங்கம் அல்ல என்பதால், உபாயமாக ஸர்வேச்வரனே வந்து நின்று பலனை அளிக்கிறான்; இதனால் ப்ரபத்திக்கு மிகுந்த ஏற்றம் உண்டாகிறது. ஆகவே த்வயத்தின் முதல் பகுதியால், ஸர்வேச்வரன் நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதே ப்ரார்த்திக்கப்படுகிறது.