Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 51)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்திக்கான அங்கங்களை சரண சப்தத்துடன் ப்ரபத்யே என்னும் பதம் கூறுதல்
மூலம் – (ii) இப்படி உபாயமாக அத்யவஸிக்கிறேனென்று மஹாவிச்வாஸத்தைச் சொல்ல, “அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸ பூர்வகம் | ததேகோபாயதா யாச்சா ப்ரபத்தி: சரணாகதி:”, “த்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி: சரணாகதி: இத்யுக்தா”, “பவ சரணம்” இத்யாதி ப்ரமாணாநுஸாரத்தாலே உபாய ப்ரார்த்தனையும் இங்கே சொல்லிற்றாயிற்று. இவ்வுபாய ப்ரார்த்தனையிலே கோப்த்ருத்வவரணம் அந்தர்கதம்; ப்ருதக்பூதமன்று.
– இவ்விதம் “உன்னையே உபாயமாக ஏற்கிறேன்” என்று உறுதியான மஹாவிச்வாஸத்துடன் உரைத்த பின்னர், அவனை உபாயமாக ஏற்பது என்னும் ப்ரார்த்தனை செய்யப்பட்டதாகிறது. இது பின்வரும் ப்ரமாணங்களால் தேறுகிறது: அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸ பூர்வகம் ததேகோபாயதா யாச்சா ப்ரபத்தி: சரணாகதி: - தனக்குத் தேவையான பலனை வேறு யாராலும் நிறைவேற்றிக் கொடுக்க இயலாது என்னும்போது, மஹாவிச்வாஸத்தை முன்னிட்டுக் கொண்டு சாமர்த்யமாக உள்ள ஒருவனை அண்டி நின்று “நீயே எனக்கு உபாயமாக இருப்பாயாக” என்று விண்ணப்பிப்பதே சரணாகதி ஆகும் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-31) - த்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி: சரணாகதி: இத்யுக்தா – “நீயே எனக்கு உபாயமாக இருத்தல் வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் எண்ணமே சரணாகதி என்று கூறப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-7-33) - பவ சரணம் – நீயே எனக்கு அடைக்கலம் இந்த விண்ணப்பத்தில் “காப்பாற்றவேண்டும்” என்னும் ப்ரார்த்தனையும் அடங்கும்; அது தனியான ப்ரார்த்தனை அல்ல.