Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 50)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்திக்கான அங்கங்களை சரண சப்தத்துடன் ப்ரபத்யே என்னும் பதம் கூறுதல்
மூலம் – இம்மஹாவிச்வாஸம் உண்டானால் பின்பு விமர்ச காலத்தில் ஒருகாலும் ஸம்சயம் பிறவாது. ஆகையால் பின்பு ஒருகாலும் இவ்விஷயத்தில் ஸம்சயம் பிறவாதபடியான ப்ரதமக்ஷணத்தில் மஹாவிச்வாஸம் ப்ரபத்திக்கு அங்கம். இது மந்தமாயிருந்தாலும் விசேஷித்துக் கடாக்ஷிக்கத் தொடங்கின ஈச்வரன், சேஷபூரணம் பண்ணும். “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந” என்று சரண்யன் அருளிச்செய்தானிறே. அஞ்ஜல்யாதிகளும் அகப்பட “ந ஜாது ஹீயதே” என்னும்படியிறே இருப்பது. ஆகையால் மந்தவிச்வாஸமும் மஹாவிச்வாஸ பர்யந்தமாம்.
– இத்தகைய மஹாவிச்வாஸம் உண்டான பின்னர், பகவத் குணங்களைக் குறித்து ஆராய முற்பட்டாலும், அவற்றில் ஐயம் உண்டாகாது. ஆகவே பின்னர் எப்போதும் ஐயம் தோன்றாதவிதத்தில் உள்ள உறுதியான மஹாவிச்வாஸம் என்பதே ப்ரபத்தியின்போது அங்கமாக உள்ளது என்று அறியவேண்டும். சிலருக்கு இந்த மஹாவிச்வாஸம் குறைவாக இருந்தாலும், அவனைக் கடாக்ஷிக்கத் தொடங்கும் ஸர்வேச்வரன், அவனுடைய நம்பிக்கையைப் பரிபூர்ணமாக்குகிறான். இதனை, இராமாயணம் யுத்தகாண்டத்தி (18-3) - மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந – நண்பன் போன்று (வேடம் பூண்டு) வந்தாலும், அவனை நான் கைவிடமாட்டேன் – என்று அனைவருக்கும் சரணாகதி அளிக்கும் இராமன் உரைத்தான் அல்லவோ? ஓர் அஞ்ஜலி உள்பட உள்ளவையே போதுமானது என்பதை ஸ்தோத்ரரத்னத்தில் (28) - ந ஜாது ஹீயதே – அது எப்போதும் வீணாகாது – என்றது காண்க. ஆகவே ப்ரபத்தி செய்தவர்கள் விஷயத்தில் நம்பிக்கை குறைவாக இருந்தாலும் அது படிப்படியாக மஹாவிச்வாஸமாக மாறிவிடும்.