Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 48)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ப்ரபத்திக்கான அங்கங்களை சரண சப்தத்துடன் ப்ரபத்யே என்னும் பதம் கூறுதல்

மூலம் – ப்ரபத்யே என்கிறவிடத்தில் கதிவாசியான தாது கத்யர்த்தங்கள் புத்த்யர்த்தங்க ளாகையாலே, இங்கு அபேக்ஷித புத்திவிசேஷத்தைச் சொல்லுகிறது. புத்தியாவது – இவ்விடத்தில் “ரக்ஷிப்யதீதி விச்வாஸ:” என்கிற அத்யவஸாயம். அங்கங்களில் ஸாரமான விச்வாஸத்தை முன்னிட்டுக் கொண்டு ஸபரிகரமான ஸாத்யோபாயம் இங்கே தோற்றுகிறது. எங்ஙனேயென்னில், இங்கு “ப்ர” என்கிற உபஸர்க்கம் விச்வாஸத்தினுடைய ப்ரகர்ஷ ரூபமான மஹத்தையைக் காட்டும். இவ்விச்வாஸ ப்ரகர்ஷம், ஸ்ரீமச்சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் உள்ள புருஷகார ஸபந்த குணாதிகளை அநுஸந்தித்தவாறே வரும். இத்தாலே தன் அபசார ப்ராசுர்யாதிகளடியாக வரும் சங்கைகளெல்லாம் கழியும்.

– “கதி = செல்க, நகர்க” என்பதைக் கூறும் வினைச்சொற்கள் “அறிக” என்பதையும் உணர்த்துவதாகும்; ஆகவே “ப்ரபத்யே” என்பதில் உள்ள “பத்” என்னும் தாதுவானது ”செல்க” என்னும் பொருளைத் தருவதால் அதுவே “அறிக, புத்தி” என்பதையும் உணர்த்துவதாகிறது. இங்கு கூறப்படும் ஞானம் என்னவென்றால், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-29) - ரக்ஷிப்யதீதி விச்வாஸ: - பகவான் நம்மைக் காப்பான் என்னும் நம்பிக்கை – என்பதற்கு ஏற்ப உள்ள உறுதியான ஞானம் ஆகும். ப்ரபத்தியின் அங்கங்களில் மஹாவிச்வாஸம் என்பதே மிகவும் முக்கியமானது என்பதால், இங்கு ஸாத்யோபாயமான ப்ரபத்தி என்பதே அதன் அங்கங்களுடன் கூறப்பட்டதாகிறது. எப்படி? “ப்ரபத்யே” என்பதில் உள்ள “ப்ர” என்பது பெருமையைக் கூறுவதாகும். அது எதன் பெருமையைக் காட்டுகிறது என்றால், மஹாவிச்வாஸத்தின் மிகுதியைக் காட்டுகிறது. இத்தகைய மஹாவிச்வாஸ மிகுதி என்பது எப்போது உண்டாகும் என்றால் – “ஸ்ரீ” என்னும் பதத்தால் கூறப்படும் பெரியபிராட்டியின் புருஷகாரத்தன்மை மற்றும் “நாராயண” என்னும் பதத்தால் கூறப்படும் ஸர்வேச்வரனுடன் நமக்கு உள்ள பந்தம் ஆகியவற்றை அறிந்தால் மட்டுமே ஆகும். இதனால், மிகுதியான அபசாரம் செய்வதன் காரணமாக மஹாவிச்வாஸத்தில் ஏற்படும் சந்தேகங்கள் விலகுகின்றன (அல்லது மஹாவிச்வாசத்தின் மீது உள்ள சந்தேகம் என்னும் அபசாரம் விலகும்).