Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 46)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

உபாயமாக இருக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை மற்றும் சரணாகதி ஆகிய இரண்டையும் கூறும் இடங்களில் “கூறியது கூறல்” என்பதற்கான சமாதானம்

மூலம் – உபாய ப்ரார்த்தனையையும் நிக்ஷேபத்தையும் ஓரிடத்திலே பிரியச் சொல்லுமிடங்களில் உபாய சப்தத்தில் இவ்விவக்ஷையைத் தவிருதல், பரஸமர்ப்பணாதிகள் ஸுவ்யக்தங்களாகைக்காகப் பிரியச் சொல்கிறதாதல், இங்கு ஸ்வரூபமும் பரமும் பலமும் ஸமர்ப்பணீயமாகையாலே அநேகாம்ச விசிஷ்டமான ஸமர்ப்பணத்தில் அம்சாந்தர பரமாதல் ஆகக்கடவது. இவை மூன்று ப்ரகாரத்துக்கும் புநருக்தி தோஷமில்லை.

– ஒரு சில இடங்களில் பகவானை உபாயமாக இருப்பதற்கான ப்ரார்த்தனை மற்றும் பரந்யாஸம் (சரணாகதி) ஆகிய இரண்டும் தனித்தனியே கூறப்படுவதைக் காணலாம். இதற்கான காரணம் கீழே உள்ளவற்றால் ஆகும்: அது போன்று இரண்டும் கூறப்பட்ட இடங்களில் உள்ள உபாயம் என்னும் சொல்லானது “காப்பாற்றவேண்டும்” என்னும் பொருளில் வந்தது அல்லாமல், மேலே கூறப்பட்டபடி மற்ற உபாயமாக இருத்தல் வேண்டும் என்னும் ப்ரார்த்தனையைக் குறிக்கவில்லை. உபாயமாக இருத்தல் வேண்டும் என்னும் ப்ரார்த்தனை மற்றும் நம்மைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்தல் ஆகிய இரண்டையும் வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக ஆகும். ஸமர்ப்பணம் என்பது ஸ்வரூபம், பரம் (நம்முடைய பொறுப்புகள்), பலன் ஆகிய மூன்றையுமே கொண்டுள்ளதால், பல பகுதிகளுடன் கூடியதான ஸமர்ப்பணத்தில், இவை ஒவ்வொரொன்றையும் மற்ற இரண்டிலிருந்தும் வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக ஆகும். ஆகவே இவற்றில் புநருக்தி தோஷம் என்பதான “கூறியது கூறல்” என்னும் குற்றம் இல்லை.