Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 45)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸர்வேச்வரன் மற்ற உபாயமாக உள்ளதன் விசேஷம்
மூலம் – அபிமத பலத்துக்கு உபாயமாக விஹிதமான பரம் சுமக்கமாட்டாத அகிஞ்சநன், கோப்தாவாய் நிற்கிற அவனை நீ எனக்கு உபாயமாகவேணுமென்று உபாயாந்தர ஸ்தாநத்திலே நிவேசிப்பிக்கையாவது – “என் தலையில் உபாயாந்தரத்தைச் சுமத்தாதே. அவற்றைச் சுமந்தால், மேல்வரும் அபிமதமெல்லாம் தருகை, ஸமர்த்த காருணிகனான உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணும்” – என்கை. இவ்வம்சத்தை நிஷ்கர்ஷித்து நிக்ஷேபத்தை அங்கியென்று சொல்லுகிறது. இது ஸ்வநிர்பரத்வ பர்யந்தரம். இந் நிஷ்கர்ஷத்தை நினைத்து “ஸாம்ப்ரதம் த்வேஷ உபாயார்த்தைக வாசக:” என்கிறது.
– சேதநன் ஒருவன் தான் விரும்பிய பலனை அடைவதற்காகச் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்களைச் செய்ய முயன்று, அதனை நிறைவேற்ற இயலாமல் நிற்கிறான்; அப்போது அவன் ரக்ஷகனாக நிற்கும் ஸர்வேச்வரனிடம், “நீ எனக்கு உபாயமாக வேண்டும்” என்று விண்ணப்பிக்கிறான் [அதாவது சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட உபாயங்களின் இடத்தில் ஸர்வேச்வரன் நிற்கும்படியாக]. ஆக மற்ற உபாயங்களின் இடத்தில் ஸர்வேச்வரனை நிற்கும்படியாகச் செய்தல் என்றால் என்ன? சேதநன் ஸர்வேச்வரனிடம், “மற்ற உபாயங்களையும் கர்மங்களையும் செய்யும் சுமையை என் தலையில் ஏற்றாமல் இருப்பாயாக. ஆனால் அவற்றைச் சுமப்பதன் மூலம் கிட்டவல்லதான பலன்கள் அனைத்தையும் தருதல் என்பதை, சக்தியும் கருணையும் நிறைந்த உனது பொறுப்பாக ஏற்றுக் கொள்வாயாக”, என்று ப்ரார்த்தித்தல் ஆகும். இத்தகைய தன்மையை உறுதியுடன் கூறும் பொருட்டே நிக்ஷேபம் அல்லது பரந்யாஸத்தை அங்கி என்பர். இந்த நிலையானது நம்முடைய பாரங்களை நம்மிடம் இல்லாமல் செய்த பின்னரே (அவற்றை அவனிடம் ஒப்படைத்த பின்னரே) உண்டாவதாகும். இத்தகைய உறுதியை எண்ணியே, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் (37-30) - ஸாம்ப்ரதம் த்வேஷ உபாயார்த்தைக வாசக: - “சரணம்” என்னும் சொல் உபாயம் என்னும் பொருளைத் தரும் – என்று கூறப்பட்டது.