Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 44)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸர்வேச்வரன் மற்ற உபாயமாக உள்ளதன் விசேஷம்
மூலம் – பரந்யாஸ பலாதேவ ஸ்வயத்ந விநிவ்ருத்தயே அத்ரோபாயாந்தர ஸ்தாநே ரக்ஷகோ விநிவேசித: ஸர்வாதிகாரிகளுக்கும் அவ்வோ சாஸ்த்ரார்த்தங்களாலே ஆராதிதனான ஸர்வேச்வரன் பலோபாயமாயிருக்க இங்கு விசேஷித்து உபாயமென்ன வேண்டிற்று – உபாயாந்தர ஸ்தாநத்திலே ஸஹஜகாருண்யாதி விசிஷ்டனான ஈச்வரனை நிறுத்துகிற ப்ரபத்தி ப்ரகாரம் தோற்றுகைக்காகவாமத்தனை. இங்கு பக்தியோக ஸ்தாநத்திலே ப்ரபத்தி நில்லாநிற்க, ஈச்வரன் உபாயாந்தர ஸ்தாநத்திலே நிற்கையாவது என் என்னில், அங்கமாகப் ப்ரபத்தியும் பண்ணி உபாயமாக உபாஸநமும் அநுஷ்டித்துப் பெறவேண்டும் பலத்தை, அவ்வுபாயமொழியவே ப்ரபத்திமாத்ரத்தாலே பெறுகைக்கு அடி, ஈச்வரனுடைய ஸஹஜகாருண்யாதி ஸ்வபாவ விசேஷமாகையாலே அகிஞ்சனனுக்கு ஈச்வரன் உபாயாந்தர ஸ்தாநத்திலே நின்றானென்கிறது.
– பரந்யாஸ பலாதேவ ஸ்வயத்ந விநிவ்ருத்தயே அத்ரோபாயாந்தர ஸ்தாநே ரக்ஷகோ விநிவேசித: - சேதநன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு தன்னிடமிருந்து விலகுவதற்காக பரந்யாஸம் செய்கிறான்; பரந்யாஸம் செய்த வலிமையால், ரக்ஷகனாக உள்ள ஸர்வேச்வரன், மற்ற உபாயங்களின் இடத்தில் அந்தச் சேதநனால் நிறுத்தப்படுகிறான். பலவிதமான பலன்களை அடையும் பொருட்டு அந்தந்த அதிகாரிகளுக்கு சாஸ்த்ரங்கள் பலவிதமான கர்மங்களை விதிக்கின்றன; அந்தக் கர்மங்களால் ஆராதிக்கப்படும் ஸர்வேச்வரன், அனைத்து அதிகாரிகளுக்கும் பலன் அளிப்பதால் அனைவருக்குமே உபாயமாக உள்ளான். இவ்விதம் உள்ளபோது த்வயத்தில், ப்ரபந்நனை மட்டும் கூறி ஸர்வேச்வரன் உபாயமாக உள்ளான் என்று கூறப்பட்டது ஏன்? இதற்கு விடை – இயல்பாக அமைந்துள்ள கருணை முதலான குணங்களைக் கொண்ட ஸர்வேச்வரன், ப்ரபந்நனால் இயற்ற இயலாத மற்ற உபாயங்களின் [ப்ரபத்தி அல்லாமல் உள்ள பக்தியோகம், கர்மயோகம் போன்றவை] இடத்தில் நின்று அவற்றின் பலன்களை அளிப்பதற்கு ப்ரபத்தி காரணமாக உள்ளது என்று உணர்த்துவதற்காகவே ஆகும். பக்தியோகம் என்பதற்குப் பதிலாகவே ப்ரபத்தி உபாயமாக உள்ளது; இவ்விதம் உள்ளபோது, “மற்ற உபாயங்களின் இடத்தில் ஸர்வேச்வரன் உள்ளான்” என்று கூறுவது ஏன்? உபாஸனம் (பக்தியோகம்) என்னும் உபாயத்தைக் கைக்கொண்டு, அதன் அங்கமாக ப்ரபத்தியும் செய்வதால், அந்த ப்ரபத்தி மூலம் பலன் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய உபாஸனம் இல்லை என்றால், ப்ரபத்தி மூலம் மட்டுமே பலன் கிட்டியாக வேண்டும். இது, ஸர்வேச்வரனுடைய இயல்பான கருணை முதலான குணங்கள் மூலமே கிட்டும். ஆகவேதான், உபாஸனம் முதலான உபாயங்கள் இல்லாத சேதநன் விஷயத்தில் ஸர்வேச்வரன் அத்தகைய உபாயங்களின் இடத்தில் உள்ளான் என்று கருத்து.