Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 42)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
பெரியபிராட்டியும் உபாயமாக உள்ளதால் பகவான் அனைத்து சக்தியும் கொண்டவன் என்னும் தன்மைக்கு இழுக்கு இல்லாமை
மூலம் – இப்படியிருக்க இவளை விசேஷணமாகக் கொள்ளில், ஸர்வசக்தித்வ விரோதம் வருமென்பார்க்கு இப்புருஷகாரபேக்ஷையிலும் ஸர்வசக்தித்வ விரோதம் ப்ரஸங்கிக்கும். “யுவத்வாதௌ துல்யே” என்கிற ச்லோகத்திற் சொன்ன குணவிபாகத்தின்படியே, பும்ஸ்த்வ பித்ருத்வ ப்ரசாஸித்ருத்வாதிகளாலே ப்ரதாபோத்தரனாய், தண்டகரனாய் நிற்கிற ஈச்வரனைப் பற்ற இழிவார்க்கு, ஸ்தீரித்வ மாத்ருத்வாதிகளாலே வந்த மார்தவ வாத்ஸல்யாதி குணாதிசயத்தாலே இவள் அவனைப் பற்ற நமக்குப் புருஷகாரமாகையும் ஈச்வர ஸ்வாதந்த்ர்ய நியதமென்று சொல்லில், இப்படியே ஸஹதர்மசாரிணியான இவளாலே விசிஷ்டனாய்க் கொண்டு சரண்யனாகையும் ஈச்வர ஸ்வாதந்த்ர்ய நியதமென்று கொண்டால், ஒரு ப்ரமாணத்துக்கும் விரோதமில்லை.
– இப்படி உள்ளபோது, பெரியபிராட்டியை ஸர்வேச்வரனுடைய விசேஷணமாகக் கொண்டால், இவனுடைய “அனைத்து சக்தியும் கொண்டவன்” என்னும் தன்மைக்கு முரண்பாடு ஏற்படும் என்று கூறுபவர்கள், அவளுடைய சிபாரிசு செய்யும் தன்மையை (புருஷகாரத்தை) மற்றும் ஏற்றுக்கொண்டால், அவளுடைய சிபாரிசு என்பதை இவன் எதிர்பார்ப்பதால், இவனுடைய “அனைத்து சக்தியும் கொண்டவன்” என்னும் தன்மைக்கு முரண்பாடு ஏற்படும் அல்லவோ? இதற்கு விடையாக அவர்கள், ஸ்ரீகுணரத்னகோசம் (14) - யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந, ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்; த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதிபாரார்த்த்ய கருணா, க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா - ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன - மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது - இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் - இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது – என்ற ச்லோகத்தில் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் தன்னிடம் உள்ள ஆண்மை, அனைத்திற்கும் தந்தையாக இருத்தல், ஆளுந்தன்மை போன்றவற்றால் கடினமானவனாகவும் தண்டிப்பவனாகவும் உள்ளதால், அவனைச் சேதநர்கள் அண்டும்போது,பெண்மை மற்றும் அனைத்திற்கும் தாயாக இருத்தல் போன்றவற்றால் வந்ததான மேன்மை, வாத்ஸல்யம் முதலான குணங்கள் ஆகியவை அவளிடம் அதிகமாக உள்ளதால் அவள் சிபாரிசு செய்யவேண்டும் என்று ஸர்வேச்வரன் தன்னுடைய சுதந்திரமான தன்மையால் அவளை நியமித்துள்ளான் என்று கூறலாம். அப்படியென்றால், ஸர்வேச்வரனாகிய தன்னுடன் இருந்து அனைத்து செயல்களையும் நடத்தும் அவளைத் தன்னுடைய விசேஷணமாகக் கொண்டு தான் உபாயமாக இருத்தல் என்பதும் ஸர்வேச்வரன் தன்னுடைய சுதந்திரம் காரணமாக இடும் கட்டளை என்று கொள்ளலாம்.