Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 41)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

பெரியபிராட்டியும் உபாயமாக உள்ளதால் பகவான் அனைத்து சக்தியும் கொண்டவன் என்னும் தன்மைக்கு இழுக்கு இல்லாமை

மூலம் – ஸர்வசக்தியானவன் உபாயமாம்போது இவ் விசேஷணத்தால் அபேக்ஷை ஏன்? ஸாபேக்ஷனாகில் ஸர்வசக்தியன்றிக்கேயொழியானோ? என்னில், இச் சோத்யம் நாராயண சப்தத்தாலும், சரண சப்தத்தாலும் சொல்லப்பட்ட குணவிக்ரஹ யோகத்திலும் பண்ணலாம். அவை இவனுக்கு விசேஷணங்களாகையாலும், அவற்றுக்கு வஸ்த்வநுரூபமாக உபயோக விசேஷங்கள் உண்டாகையாலும், அவற்றால் ஸர்வசக்தித்வ விரோதமில்லையென்று யதாப்ரமாணம் கொள்ளில், இது பஹுப்ரமாண ப்ராப்தமாய் இங்கு ஸ்ரீமச்சப்தத்திலும் ஸ்வாரஸிக விசேஷண பாவமான பத்நீ ஸம்பந்தத்திலும் துல்யம். இப்படியிருக்க, “சரணௌ” என்கிற த்விவசன மாத்ரத்தைக் கொண்டு ஸ்ரீ ஸம்பந்தத்தை உபலக்ஷணமென்னில், குணாதி ஸம்பந்தத்தையும் இப்படிச் சொல்லப் ப்ரஸங்கிக்கும். சரண சப்தத்தில் உபாயவாசி சப்த ஸமபி வ்யாஹாரத்தாலே, உபயுக்த குணவிக்ரஹ விசிஷ்டன் உபாயமாகிறானென்று விலக்ஷிதம் என்னில், இது இங்கும் துல்யம்.

– இங்கு ஒரு கேள்வி எழலாம்; அனைத்து சக்திகளையும் கொண்ட ஸர்வேச்வரனே உபாயமாக உள்ளபோது, அவனுக்கு ஸ்ரீ போன்ற தன்மைகள் (அல்லது பெரியபிராட்டியின் ஸம்பந்தம்) போன்றவற்றின் அவசியம் என்ன? ஸ்ரீ அவனுக்கு அவசியம் என்றால், அவன் அனைத்து சக்திகளும் கொண்டவன் அல்லன் என்றாகிவிடும் அல்லவோ? (இதற்கு சமாதானம் உரைக்கிறார். இதற்கு ஒரு கேள்வியை தானே எழுப்பிக் கொண்டு, அதற்கு சமாதானம் உரைக்கும்விதத்தில், முதல் கேள்விக்கும் விடை அளிக்கிறார்) “நாராயண” என்னும் பதம், “சரண” என்னும் பதம் ஆகியவற்றால் வெளிப்படுகின்ற அவனுடைய திருக்கல்யாணகுணங்கள், திருமேனி போன்றவற்றிலும் இந்தக் கேள்வியை எழுப்பலாம் அல்லவோ? குணங்கள் மற்றும் திருமேனி ஆகிய இரண்டும் அவனுடைய தன்மைகளாக உள்ளதாலும், அவனுடன் ஸம்பந்தம் கொள்ளும் அந்தந்த வஸ்துக்களுக்கு ஏற்றபடி அவற்றுக்கு உபயோகம் உண்டாவதாலும், ப்ரமாணங்களால் உறுதியாக்கப்பட்ட அவற்றால், இவனுடைய “அனைத்து சக்தியும் கொண்டவன்” என்னும் தன்மைக்கு முரண்பாடு இல்லை என்று பதில் உரைக்கலாம்; இதே பதிலையே இங்கும் கொள்வோம்; பெரியபிராட்டியைக் குறிப்பதான “ஸ்ரீ” என்னும் பதமும் பலவிதமான ப்ரமாணங்களில் கூறப்பட்டுள்ளதாலும், ”ஸ்ரீ” என்னும் பதத்தின் மூலம் அவனுடைய தன்மையாக பெரியபிராட்டி உள்ளது புலப்படுவதாலும், இந்த “ஸ்ரீ” என்னும் தன்மை மூலம் இவனுடைய “அனைத்து சக்தியும் கொண்டவன்” என்னும் தன்மைக்கு முரண்பாடு இல்லை என்று உறுதியாகக் கூறலாம். மேலும் ஒரு கேள்வி எழலாம். “சரணௌ” என்னும் பதமானது ஸர்வேச்வரனுடைய திருவடிகளை மட்டுமே கூறுவதால், ஸ்ரீ என்பது அவனுடைய உபலக்ஷணமாக (ஒரு பொருளின் அடிப்படை தன்மையாக உள்ளது விசேஷணம் எனப்படும். அந்தப் பொருளுக்கு மற்ற பல தன்மைகளாக உள்ளவை உபலக்ஷணம் எனப்படும். உதாரணமாக – உப்பு என்பதன் அடிப்படைத் தன்மை கரிப்பு என்பதாகும்; ஆனால் துகள்களாக உள்ளது போன்றவை உபலக்ஷணங்கள் ஆகும் – காரணம் கட்டி உப்பு என்பதும் உண்டு அல்லவோ) மட்டுமே கூறப்படவேண்டும் அல்லவோ? (இதற்கு சமாதானம் கூறுகிறார்) அப்படி என்றால் அவனுடைய திருமேனி, குணங்கள் போன்றவற்றையும் உபலக்ஷணமாகக் கூறிவிடலாமே! “சரணௌ” என்னும் பதமானது “நாராயண” என்னும் பதத்துடன் இணைந்து கூறப்பட்டு அவை (திருவடிகள்) உபாயமாக உள்ளன என்றும், உபாயமாக இருப்பதற்குத் தேவையான குணங்கள் மற்றும் திருமேனி ஆகியவற்றைக் கொண்டவனே உபாயமாக இருக்கமுடியும் என்றும் கூறினால், அதே கருத்தை ஸ்ரீக்கும் கூறலாம்.