Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 40)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“சரணௌ” என்ற பதத்தில் உள்ள இருமை, உபாய நேரத்தில் பெரியபிராட்டியின் ஸம்பந்தம் உள்ளது என்பதை மறுக்காமல் உள்ளது
மூலம் – சரணாவிதி நிர்த்தேச: பத்நீ வைசிஷ்டய பாதக: இதி மந்தைரிதம் ப்ரோக்தம் ஸ்ரீமச்சப்த விரோதத: சப்தஸ்வரஸத: ப்ராப்தம் வைசிஷ்டயம் ப்ரதமச்ருதம் விசேஷ்ய சரணத்வித்வம் ந ஹி பாதிதுமர்ஹதி சரணாநிதி வக்தவ்ய இதி யச்ச ப்ரஸஞ்ஜிதம் க்ரந்தஜ்ஞைரபஹாஸ்யம் தத் ப்ரதிபாதாந்யத: அந்வயாத் ந ஸம்ராஜி ஸபத்நீகே ஸத்விதீயோக்தி ஸாஹஸம் தத: அத்ரேத்யபராம்ருச்ய தர்சிதம் குருஸாஹஸம்
– (மேலே உள்ள நான்கு ச்லோகங்களுக்கும் ஒன்றாக விளக்கம் தரப்படுகிறது) த்வய மந்த்ரத்தில் உள்ள “சரணௌ” என்னும் பதம் இருமையில் உள்ளதன் மூலம் [“சரண” என்பதன் இருமை “சரணௌ” ஆகும்], பகவான் “ஸ்ரீயை” தனது குணமாகவே கொண்டுள்ளான் [அல்லது உபாய நிலையிலும் பெரியபிராட்டியின் ஸம்பந்தம் உள்ளது] என்ற கருத்து மறுக்கப்பட்டது என்னும் இந்த வாதமானது, மந்தபுத்தி உள்ளவர்களால் கூறப்பட்டது [அவர்களுடைய கூற்றின்படி, பிராட்டிக்கும் ஸம்பந்தம் உண்டு என்றால், இருமைக்குப் பதிலாக நான்கை உணர்த்தும் பதமே வரவேண்டும் என்பதாகும். இருமையில் கூறுவதால், இங்கு பகவானின் திருவடிகள் மட்டுமே கூறப்பட்டது என்பது அவர்கள் கருத்து]. த்வயத்தின் தொடக்கத்திலேயே “ஸ்ரீமத்” என்னும் பதம் மூலம் “தனது குணங்களான ஸ்ரீயுடன்” என்று கூறப்படுவதால், இந்த வாதம் தள்ளப்படவேண்டியதே ஆகும். “ஸ்ரீ” என்று தொடக்கத்திலேயே அறியப்படுவதான பெரியபிராட்டியுடனான ஸம்பந்தத்தை, மந்த்ரத்தில் அடுத்து வருவதான திருவடிகளுடைய இரண்டாக உள்ள தன்மையைக் கூறும் “சரணௌ” என்பது தடுக்கவல்லது அல்ல. இங்கு “சரணங்களை” என்று பன்மையில் கூறியிருக்கவேண்டும் என்று கூறப்படும் அவர்களுடைய வாதம் இலக்கணத்தை அறிந்தவர்களால் பரிகாசம் செய்வதற்கு ஏற்றதாகும் [அதாவது இரண்டு ஜோடி திருவடிகள் = நான்கு திருவடிகள் என்று கூறியிருக்கவேண்டும் என்பது வாதம்]; காரணம் கணவன் முதன்மையானவன் என்பதாலும், அவனைப் பின்பற்றி உள்ளவள் மனைவி என்பதாலும், இருமையில் கூறுவதே போதுமானதாகும். அரசியுடன் கூடிய ஒரு அரசனைக் குறித்து, அவன் மற்றொருவளுடன் சேர்ந்தவன் என்று கூறுவது எவ்விதம் பொருந்தாதோ அது போன்றே இங்கும் ஆராயாமல் கூறப்பட்டது.