Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 37)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
எம்பெருமானுடைய திவ்யமங்கள திருமேனியின் மேன்மை
மூலம் – ஸர்வேச்வரனுடைய திவ்யமங்கள விக்ரஹத்துக்கு பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் ஸங்கல்பமநாமயம் தத் புண்டரீக நயநம் விஷ்ணோர் த்ரக்ஷ்யாம்யஹம் முகம் ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சிதாபஹாரிணம் இத்யாதிகளிற்படியே சுபத்வமும், ஆச்ரயத்வமுமுண்டு. பத்தருக்கு ஆச்ரயத்வ முண்டாகிலும் சுபத்வமில்லை. பகவத் ஸ்வரூபத்துக்கு சுபத்வமுண்டேயாகிலும், ஆச்ரயத்வமில்லை. ஸம்ஸாரபந்த ரஹிதமான பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு ஸம்ஸாரிக்கைக்கு ஸஹகாரி யோக்யதை இல்லையேயாகிலும், பரதந்த்ர சேதநதையாலே ஸம்ஸரிக்கைக்கு ஸ்வரூப யோக்ய வஸ்துவாகையாலே அதுக்கு ஹேய ப்ரத்யநீகத்வரூப சுபத்வமுமில்லை, ஆச்ரயத்வமுமில்லை. முக்தருடைய விக்ரஹ பரிக்ரஹ தசையிலும் நித்ய விக்ரஹரான நித்யருக்கும் ஆச்ரயத்வமுண்டேயாகிலும், ஸம்ஸார நிவர்த்தந க்ஷமமான, சுபத்வமில்லை. ஆகையால், திவ்யமங்கள விக்ரஹத்துக்கே முமுக்ஷூபயுக்தமான சுபத்வமும், ஆச்ரயத்வமும் உள்ளது. பராவர ஸுகக்ராஹ்யம் ப்ரமபோத ப்ரஸாவகம் ஸ்வரூபாத் ஸ்வாமிநோ ரூபமுபாதேயதமம் விது: சரணாகதிவிதாயக வாக்யத்திலும், “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று விக்ரஹ விசிஷ்டன் இலக்காய்த் தோற்றினான். இத் திவ்ய விக்ரஹ பர வ்யூஹாத்யவஸ்தா பஞ்சகத்திலும் சுபாச்ரயமென்னுமிடம் சாஸ்த்ர ஸித்தம்.
– ஸர்வேச்வரனுடைய திவ்யமங்கள விக்ரஹத்துக்கு, கீழே உள்ள வரிகளின்படி, த்யானிப்பவர்களுடைய பாபங்களை நீக்கும் தன்மை (சுபத்வம்) மற்றும் அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதியும் தன்மை (ஆச்ரயத்வம்) ஆகிய இரண்டும் உண்டு: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-17-4) - பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் ஸங்கல்பமநாமயம் தத் புண்டரீக நயநம் விஷ்ணோர் த்ரக்ஷ்யாம்யஹம் முகம் – ஸர்வேச்வரன் தனது ஸங்கல்பத்தால் எடுத்துக் கொண்ட திருமேனியின் அழகான திருமுகமானது, அதனை நினைத்த நொடியிலேயே அனைத்து பாபங்களையும் போக்கவல்லது; அப்படிப்பட்ட தாமரைக்கண்கள் கொண்ட திருமுகத்தை நான் எப்போது காண்பேன்? இராமாயணம் அயோத்யாகாண்டம் (3-39) - ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சிதாபஹாரிணம் – தனது அழகால் மனிதர்களின் கண்களையும், தாராள குணத்தால் அவர்களுடைய மனதையும் கவரவல்ல இராமன் ஸம்ஸாரத்தில் பந்தப்பட்டுள்ள ஜீவாத்மாக்களுடைய சரீரத்திற்கு மற்றவர்களுடைய மனத்தால் நினைக்கப்படக்கூடிய தகுதி உள்ளது என்றாலும், அவ்விதம் நினைப்பவர்களுடைய பாபங்களைப் போக்கும் திறன் அதற்கு இல்லை. ஸர்வேச்வரனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்திற்கு பாபங்களைப் போக்கும் வல்லமை இருந்தாலும், த்யானிக்கப்படக்கூடியதாக அது இல்லை. ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைந்த ஜீவாத்ம ஸ்வரூபத்துக்கு, மீண்டும் ஸம்ஸாரத்தில் வந்து சிக்கிக் கொள்வதற்கான கர்மபந்தம் என்னும் துணைத்தகுதி (ஸஹகாரி காரணம்) இல்லை; ஆனாலும் அவன் இயல்பாகவே மற்றவர்களுடைய வசப்பட்டுள்ளதால் (ஸர்வேச்வரனுடைய விருப்பத்திற்கு ஏற்ப நடக்கும் நிலை), மீண்டும் ஸம்ஸாரத்தில் வந்து சிக்கிக் கொள்ளும் தகுதி உள்ளது; ஆகவே அந்த ஆத்மஸ்வரூபத்திற்கும் (முக்தி பெற்ற ஆத்மா), தோஷங்களுக்கு எதிர்த்தட்டாக உள்ளதான பாபங்களைப் போக்கும் திறன் மற்றும் மனதில் ஆழமாகப் பதியும் தன்மை ஆகிய இரண்டுமே இல்லை. முக்தி அடைந்த ஜீவாத்மா மோக்ஷத்தில் அடையும் வேறு சரீரம், நித்யஸூரிகளுடைய சரீரம் ஆகியவை த்யானிக்கவல்லதாக உள்ளபோதிலும், ஸம்ஸாரத்திற்குக் காரணமாக உள்ள பாபங்களை நீக்கும் திறன் அவற்றுக்கு இல்லை. ஆகவே எம்பெருமானுடைய திவ்யமங்கள திருமேனிக்கு மட்டுமே, மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுக்களுக்குப் பயன்படுவதான பாபங்களைப் போக்கும் திறன் மற்றும் மனதில் ஆழமாகப் பதியும் தன்மை ஆகிய இரண்டுமே உள்ளது. பராவர ஸுகக்ராஹ்யம் ப்ரமபோத ப்ரஸாவகம் ஸ்வரூபாத் ஸ்வாமிநோ ரூபமுபாதேயதமம் விது: - உயர்ந்த நான்முகன் முதலான தேவர்களும், தாழ்ந்த மற்ற சேதநர்களும் எளிதாக த்யானிக்க ஏற்றதாகவும், பக்தி மற்றும் ஞானம் ஆகியவற்றை வளர்க்கவல்லதும் ஆகிய எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹமே அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் நமக்கு ஏற்கத் தகுந்தது என்று முன்னோர் உரைத்தனர். சரணாகதியை விதிப்பதான கீதை (18-66) - மாமேகம் சரணம் வ்ரஜ – என்னை மட்டுமே சரணம் அடைவாயாக – வாக்கியத்திலும், பகவான் தனது திருமேனியையே உணர்த்தினான். பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளில் உள்ள ஸர்வேச்வரனுடைய திருமேனிக்கு இந்த இரண்டு தன்மைகளுமே உண்டு என்பதால், அவற்றை “சுபாச்ரயம்” என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.