Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 36)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

எம்பெருமானுடைய திவ்யமங்கள திருமேனியின் மேன்மை

மூலம் – திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் கீழ்ச்சொன்ன குணாதிகளிலும் தெளிவில்லாதார்க்கும், சுத்த ஸத்த்வ த்ரவ்யமயமாய், ஸ்வவிஷய ஜ்ஞாநத்தாலே ஜ்நாந ஸங்கோசத்துக்கு நிவர்த்தகமாய், பரத்வ ஸௌலப்ய வ்யஞ்ஜகமான திவ்யமங்கள விக்ரஹமே இலக்காம். இப் ப்ராதாந்யத்தைப் பற்றி கத்யத்தில் குணங்களுக்கு முன்னே திவ்யமங்கள விக்ரஹத்தை அருளிச்செய்தார். திவ்யாத்ம ஸ்வரூபத்தில் தெளிவுடையராயிருக்கச் செய்தேயும், “மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்” என்னும்படி ஈச்வரன் தனக்கும் போக்யமான நித்ய விக்ரஹாநுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கையாழ்வார் தம்மை ஈச்வர விஷயத்தில் தேஹாத்மவாதிகளாக அருளிச்செய்வர்.

– ஸர்வேச்வரனுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் மற்றும் “நாராயண” என்பதன் மூலம் உணர்த்தப்பட்ட அவனுடைய குணங்கள் ஆகியவற்றைக் குறித்துத் தெளிவான அறிவு இல்லாதவர்களுக்கு, அவனுடைய திவ்யமங்கள திருமேனியே இலக்காகும். அவனுடைய அந்தத் திருமேனியானது சுத்தஸத்வமயமானதாகும். தன்னைக் குறித்து நன்றாக அறிந்தவனுடைய ஞானத்தின் சுருக்கங்களை விலக்கி, அந்த ஞானத்தை மலரச் செய்வதாகும். மேலும் அது அவனுடைய உயர்ந்த தன்மையையும் (பரத்வம்), எளிய தன்மையையும் (ஸௌலப்யம்) ஒருங்கே வெளிப்படுத்துவதாகும். இதன் முக்கியத்வம் காரணமாகவே எம்பெருமானார் கத்யத்தில், அவனுடைய குணங்களை வர்ணிப்பதற்கு முன்பாகவே இந்தத் திருமேனியை வர்ணித்தார். திருமங்கையாழ்வார் அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் குறித்து மிகவும் தெளிந்த ஞானம் உடையவர் ஆவார்; ஆனாலும், சதுச்லோகி (4) - மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம் – அவனுடைய திவ்யமங்கள விக்ரஹம் என்பது அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் அவனுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது – என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுக்குக் கூட இன்பமாக உள்ளதால், அந்தத் திருமேனியை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, அவனுடைய திவ்யமங்கள திருமேனி அல்லாமல் திவ்யாத்ம ஸ்வரூபம் என்று ஏதும் இல்லை, அவை ஒன்றே என அருளிச்செய்வார்.