Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 35)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“சரண” என்னும் சொல்லில் விளக்கம்
மூலம் – சரணௌ என்கிற சப்தம் நித்யமான திவ்யமங்கள விக்ரஹத்துக்கு உபலக்ஷணம். ஸ்ரீய:பதியினுடைய ஸர்வஸ்மாத் பரத்வமும் நித்ய விக்ரஹ யோகமும் ஜ்ஞாதவ்யங்களில் ப்ரதாநதமாமென்னுமிடம், நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் இத்யாதிகளிலே ப்ரஸித்தம். ஆகையால் “ஸ்ரீமந்நாராயண” என்கிற இடத்திலே ஸௌலப்யாந்விதமான பரத்வமும், “சரணௌ” என்கிற இடத்திலே நித்ய விக்ரஹ யோகமும் அநுஸந்தேயம்.
– “சரணௌ” என்னும் பதமானது திருவடிகளை உணர்த்தினாலும், அது பகவானுடைய திவ்யமங்களை திருமேனி முழுவதற்கும் உதாரணம் ஆகும் (அதாவது முழுவதையுமே குறிக்கும்). மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய ஸர்வேச்வரன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பதும், அவன் திவ்யமங்கள திருமேனியுடன் கூடியுள்ளவன் என்பதும் அறியப்படவேண்டியவற்றில் முதன்மையானவை ஆகும். இதனை, பௌஷ்கர ஸம்ஹிதையில் - நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் – எப்போதும் உள்ளவனாகிய ஸர்வேச்வரனுடைய திருமேனியைக் குறித்தும், அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும் யார் ஒருவனுடைய மனதில் இவை இவ்விதம் உள்ளன என்னும் எண்ணம் உள்ளதோ அவர்களிடம் எம்பெருமான் வருவான் – என்பதனால் உணரலாம். ஆகவே த்வயத்தில் உள்ள “ஸ்ரீமந்நாராயண” என்பதன் மூலம் ஸௌலப்யத்துடன் (எளிதில் அண்டலாம் என்னும் தன்மை) கூடிய உயர்ந்த நிலையில் உள்ள தன்மையும், “சரணௌ” என்பதன் மூலம் அவன் திவ்யமங்கள திருமேனியுடன் கூடியுள்ளவன் என்பதும் எண்ணப்படவேண்டும்.