Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 34)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“சரண” என்னும் சொல்லில் விளக்கம்

மூலம் – இவ்விடத்தில் “ஸ்ரீமந்நாராயணசரணௌ” என்று ஸமஸ்தமாகவும் யோஜிப்பார்கள். “கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத சங்கசக்ரபாணே பவ சரணம்” என்கிற ப்ரயோகத்தையும், “த்வமேவ உபாய பூதோ மே பவ” என்கிற வாக்யத்தையும், “அகலகில்லேன்” என்கிற பாட்டையும், “அகிஞ்சந: அநந்ய கதி: சரண்ய” என்கிற ஸ்தோத்ர வாக்யத்தையும், இத்யாதி மந்த்ராந்தரங்களையும், த்வய விவரணமான கத்யத்தையும் பார்த்து, “ஸ்ரீமந், நாராயண” என்று இரண்டு ஸம்புத்திகளாக்கி, “தவ” என்று ஒரு பதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பார்கள். இப்படி வ்யஸ்தமானாலும், ஸமஸ்தமானாலும் விசேஷண விசேஷயங்கள் நிற்கும் நிலைக்கு வைஷம்யமில்லை. இந்நிலை, பூர்வோத்தர கண்டங்களிலும் ஒக்கும்.

– இங்கு “ஸ்ரீமந் நாராயண சரணௌ” என்று ஒரே தொகுதியாகக் கொண்டு “ஸ்ரீமானாகிய நாராயணனின் திருவடிகளில்” என்று பொருள் வரும்படியாகவும் கொள்வர். அல்லது, விஷ்ணுபுராணம் (3-7-33) - கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத சங்கசக்ரபாணே பவ சரணமிதீரயந்தி யே வை த்யஜ பட தூரதரேண தாநபாபாந் – யமன் தனது கிங்கரனிடம், “தாமரை போன்ற கண்கள் கொண்டவனே! வாஸுதேவா! விஷ்ணுவே! அடியார்களை நழுவவிடாதவனே! சங்கு மற்றும் சக்கரங்களைத் திருக்கரங்களில் கொண்டவனே! நீயே எனக்கு அடைக்கலம் – இவ்விதமாகக் கூறுபவர்கள் எந்தவிதமான பாவங்களும் அற்றவர்கள் ஆவர். அவர்களை நீ அணுகாமல், அவர்களை விட்டு விலகிச் செல்வாயாக”, என்றான் – என்பதில் உள்ள “சரணம்” என்னும் சொல்லின் உபயோகம் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-3) - த்வமேவ உபாய பூதோ மே பவ – நீயே எனக்கு உபாயமாக உள்ளாய் – என்னும் வாக்கியம் திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லேன் – என்னும் பாசுரம் ஸ்தோத்ரரத்னம் (22) - அகிஞ்சந: அநந்ய கதி: சரண்ய – உன்னைத் தவிர வேறு உபாயமும் இலக்கும் இல்லாத நான் உன்னையே சரணம் அடைகிறேன் – என்னும் ச்லோகம் இது போன்றே உள்ள மற்றும் பல மந்த்ரங்கள், த்வயத்தினை விவரிப்பதாகவே உள்ள சரணாகதி கத்யம் ஆகிய பலவற்றையும் ஆராய்ந்து, “ஸ்ரீமந் நாராயண சரணௌ” என்பதை “ஸ்ரீமந்” மற்றும் “நாராயண” என்றும் பிரித்து, அவை இரண்டையும் அவனை அழைக்கும் சொற்களாக்கி, அங்கு “தவ = உன்னுடைய” என்னும் ஒரு சொல்லை உண்டாக்கிக் கொண்டு, “ஸ்ரீமந் நாராயணா! உன்னுடைய திருவடிகளே சரணம்” என்று கொள்வர். இப்படியாக இங்கு பிரிக்கப்பட்டாலும், சேர்ந்து கொள்ளப்பட்டாலும், “ஸ்ரீ” என்னும் அடைமொழி மற்றும் அந்த அடைமொழியால் உணர்த்தப்படும் “நாராயண” என்னும் வஸ்து ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள ஸம்பந்தத்துக்கு எந்த வேறுபாடும் இல்லை. இந்த நிலையானது, த்வயத்தின் முதல் வரி மற்றும் இரண்டாம் வரி ஆகிய இரண்டிற்கும் ஒரே போன்று பொருந்தும்.