Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 33)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் இரண்டாம் வரியில் உள்ள “நாராயண” என்னும் பதம் மூலம் உணர்த்தப்படும் முக்கிய குணங்கள்
மூலம் – உபாயாநுஷ்டாந தசையில் அவ்வோ வித்யைகளுக்கு அடைத்து கதிபய குணவிசிஷ்டன் அநுஸந்தேயனாய், ப்ராப்தி தசையில் ஸமஸ்த குண விபூதி விசிஷ்டன் அநுபாவ்யனானாலும், இங்கு உத்தரகண்டத்தில் நாராயண சப்தத்துக்கு ஸ்வரூப க்ருதமாயும் குணக்ருதமாயும் வரும் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்திலே நோக்கானபடியாலே, அதுக்கு உபயுக்தங்களான சேஷித்வ நிரதிசய போக்யத்வாதிகள் ப்ரதாநங்கள். இங்கு ஸம்பந்த விசேஷாதி முகத்தாலே, ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ரதிகூல்ய வர்ஜநமும் ஸூசிதமானபடி அதிகாராந்தரத்திலே சொன்னோம்.
– (வேதங்களில் கூறப்பட்டுள்ள வித்யைகளைப் பின்பற்றி) உபாஸனம் செய்யும்போது, அந்தந்த வித்யைகளுக்கு ஏற்றபடி உள்ளதான ப்ரஹ்மத்தின் சில குணங்களை மட்டுமே எண்ணியபடியும், அந்த உபாஸனங்களுக்கான பலனை அனுபவிக்கும் நேரத்தில் ப்ரஹ்மத்தின் அனைத்து குணங்களையும் எண்ணியபடியும் இருப்பர். இதே போன்று இங்கும் கொள்ளவேண்டும். த்வயத்தின் இரண்டாவது வரியில் உள்ள “நாராயண” என்னும் சொல்லானது அனைத்து குணங்களையும் கூடியவனாகவே அவனைக் குறிக்கிறது; ஆனால் இங்கு அவனுடைய ஸ்வரூபம் மற்றும் குணங்களைக் காணும் நாம், அவனுக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொள்வதால், அந்தக் கைங்கர்யத்துக்கு ஏற்ற குணங்களையே இங்குள்ள “நாராயண” என்னும் சொல் மூலம் கொள்ளலாம். இதற்குத் தேவைப்படும் குணங்களானவை அவனுடைய எஜமானத்தன்மையும், நமக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கவல்ல தன்மையுமே ஆகும். இங்கு வெளிப்படும் எஜமானன் – அடிமை என்னும் ஸம்பந்தம் மூலம், அவனுக்கு எது ஏற்குமோ அதனை மட்டுமே நாம் செய்வோம் என்றும், அவனுக்கு விருப்பம் அல்லாதவற்றைக் கைவிடுவோம் என்றும் நாம் எடுக்கும் நிலைப்பாடு மறைமுகமாக வெளிப்படுகிறது என்பதை பரிகர விபாக அதிகாரத்தில் (அதிகாரம் – 11) கூறினோம்.