Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 32)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தில் “ஸ்ரீமத்” என்பதுடன் “நாராயண” என்பதும் உள்ளதன் பலன்

மூலம் – இவற்றில் (1) வாத்ஸல்யமாவது - “தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம்” என்கிறபடியே ஆச்ரிதனுடைய அபராதத்தைப் பாராதே, அங்கீகரிக்கைக்கு ஈடான இரக்கம். இது தன் தோஷங்களைப் பார்த்து அகலாமைக்கு உறுப்பாம். (2) ஸ்வாமித்வமாவது - ப்ரணவாதிகளில் சிக்ஷிதமான ஸம்பந்த விசேஷம். இது தன் பேறாக ரக்ஷிக்குமென்கிற தேற்றத்துக்கு உறுப்பாம். (3) ஸௌசீல்யமாவது – தான் ஸர்வாதிகனாய் வைத்துத் தண்ணியரான நிஷாத வாநர கோபாலாதிகளோடே நிரந்த்ர ஸம்ச்லேஷம் பண்ணுகை. இது “அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்” என்று அகலாதே, ஸாரத்ய தூத்யாதி பர்யந்தமாக அபேக்ஷிக்கும்படி விச்வஸநீயதைக்கு உறுப்பாம். (4) ஸௌலப்யமாவது – ஸநக ஸநந்தாதி மஹாயோகிகளுக்குங்கூட கிட்ட நிலமில்லாத தன்னை, “ஸகல மநுஜ நயன விஷயதாம் கத:” என்னும்படி பண்ணுகை. இது கிட்ட அரியனென்கிற நிஸ்ப்ருஹதை வாராமைக்கு உறுப்பாம். (5) ஸர்வஜ்ஞத்வமாவது – “அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித்”, “யோ வித்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத:” என்கிறபடியே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்கை. இது ஆச்ரிதர்க்குக் கொடுக்கவேண்டும் நன்மைகளிலும், கழிக்கவேண்டும் விரோதிகளிலும் இவன் அறியாதது இல்லையென்னும் அநுஸந்தானத்துக்கு உறுப்பாம். (6) ஸர்வசக்தித்வமாவது – அகடித கடநா ஸாமர்த்யம். இது ஸம்ஸாரிகளான நம்மை நினைத்தபோது நித்யஸூரி பரிஷத்திலே நிவேசிப்பிக்க வல்லன் என்கிற நிச்சயத்துக்கு உறுப்பாம். (7) ஸத்யஸங்கல்பத்வமாவது – தன் ஸங்கல்பத்துக்குத் தன்னாலும் ப்ரதிஹதி யின்றிக்கே யொழிகை. இது “அஹம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கிற பாசுரம் பழுதாகாது என்கிற விஸ்ரம்பதுக்கு உறுப்பாம். (8) பரமகாருணிகத்வமாவது – ஸ்வார்த்த நிரபேக்ஷையான பரதுக்க நிராகரணேச்சை. இது அநந்தாபராதங்களை யுடையவர்களையும், “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம்”, “யதி வா ராவண: ஸ்வயம்” என்கிறபடியே ஒரு வ்யாஜ மாத்ரத்தாலே க்ஷமிக்கும் என்கிற தெளிவுக்கு உறுப்பாம். (9) க்ருதஜ்ஞத்வமாவது – “ந ஸ்மரத்யபகாராணாம் சதமப்யாத்மவத்தயா கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி”, “ருணம் ப்ரவ்ருத்தமிவ ஹ்ருதயாந் நாபஸர்ப்பதி” என்கிறபடியே அத்யல்பாநுகூல வ்யாபாரத்தையும் பரமோபகாரம் பண்ணினாற்போலே மறவாதொழிகை. இது தன் பக்கலில் ஏதேனும் ஒரு வல்லகுறி கண்டால் இனி நம்மை ஒரு காலத்திலும் கைவிடான் என்றிருக்கைக்கு உறுப்பாம். (10) ஸ்திரத்வமாவது – ஆச்ரித ரக்ஷணத்தில் நிலையுடமை. இது அத்யந்தாந்தரங்கர் விலக்கிலும் “ந த்யஜேயம் கதஞ்சந” என்கிறபடியே நம்மை விடான் என்று நம்புகைக்கு உறுப்பாம். (11) பரிபூர்ணத்வமாவது – அவாப்த ஸமஸ்த காமத்வம். இது “அண்வப்யுபஹ்ருதம் பக்தை: ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத்”, “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி” இத்யாதிகளிற்படியே, பாவபந்தம் பார்க்குமத்தனையொழிய மற்றும் நாம் இடும் பிச்சையில் வரிசை பாரான் என்று வல்ல கிஞ்சித்காரத்திலே முயல்கைக்கு உறுப்பாம். (12) பரமோதாரத்வமாவது – உபாய லாகவமும் உபேய கௌரவமும் மாத்ராபகர்ஷமும் பாராதே, ஸர்வஸ்வதாநம் பண்ணியும் நாம் செய்தது போராது என்றிருக்கும் வதாந்யதை. இது, ததிபாண்டாதிகளைப் போலே ஹடாத்காரம் பண்ணியும், அநுபந்தி பர்யந்தமாகப் பரமபுருஷார்த்தத்தை அபேக்ஷிக்கைக்கு உறுப்பாம். இப்படி மற்றும் சரண்யதைக்கு உபயுக்தமான குணங்களையும் அவற்றினுடைய உபயோக விசேஷங்களையும் இங்கே அநுஸந்தித்துக் கொள்வது.

– (1) வாத்ஸல்யம் – இந்தக் குணமானது, இராமாயணம் யுத்தகாண்டம் (18-3) - தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம் – தோஷத்துடன் கூடியபடி இருந்தாலும் தோழன் போன்று வந்தவனை நான் (இராமன்) விடமாட்டேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, தன்னை அண்டியவனிடம் உள்ள தோஷங்களை ஆராயாமல், அவனை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யவல்லதாக ஸர்வேச்வரனிடம் உள்ள இரக்கம் ஆகும். இது, சேதநன் தன்னிடம் உள்ள தோஷங்களைக் கண்டு ஸர்வேச்வரனை நெருங்குவதற்கு அஞ்சி விலகாமல் இருப்பதற்குப் பயன்படுவதாகும். (2) ஸ்வாமித்வம் - ப்ரணவம் முதலானவற்றில் அறியப்படுவதான எஜமானன் – அடிமை என்னும் தொடர்பை உணர்த்துவதாகும். “நம்மைக் காப்பாற்றுவதைத் தன்னுடைய பேறாக எண்ணி ஸர்வேச்வரன் காப்பான்” என்னும் மஹாவிச்வாஸத்திற்கு இது பயன்படுவதாகும். (3) ஸௌசீல்யம் – ஸர்வேச்வரனாகிய தான் அனைத்திலும் மேம்பட்டவனாக உள்ளபோதிலும், தாழ்ந்தவராகிய வேடன் (குகன்), வானரங்கள், இடையர்கள் என்று எந்தவிதமான வேறுபாடும் ஆராயாமல் கலந்து நிற்பதாகும். இது, திருவாய்மொழி (5-1-7) - அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர் – சக்கரம் ஏந்திய அவன் இருப்பது எங்கே? நான் யார் அதனை அடைய? - என்று எண்ணி விலகாமல், பாண்டவர்கள் க்ருஷ்ணனைத் தங்களுக்காகத் தேர் ஓட்டவும், தூது செல்லவும் பணித்தது போன்று ஸர்வேச்வரனிடம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் விண்ணப்பிப்பதற்கு உதவும். (4) ஸௌலப்யம் – ஸநகர், ஸநந்தர் போன்ற மஹாயோகிகளாலும் எளிதில் அடைய இயலாத ஸர்வேச்வரனாகிய தன்னை, கீதாபாஷ்யம் (முதல் ச்லோக அவதாரிகை) - ஸகல மநுஜ நயன விஷயதாம் கத: - அனைத்து மனிதர்களுடைய கண்களுக்கு இலக்காக உள்ளவன் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள தன்மை. இது, “ஸர்வேச்வரன் நம்மால் அடைவதற்கு மிகவும் அரியவன்” என்ற ஆசையற்ற நிலை வராமல் இருத்தலுக்குப் பயன்படுவதாகும். (5) ஸர்வஜ்ஞத்வம் –இராமாயணம் யுத்தகாண்டம் (17-35) - அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் – (அனுமன் இராமனிடம்) மூன்று உலகங்களிலும் நீ அறியாதவை ஏதும் இல்லை – என்றும், ந்யாயதத்வம் - யோ வித்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: - எந்த ஸர்வேச்வரன் அனைத்தையும் குறித்து ஒரே நேரத்தில் நேரடியாகவே அறிகிறானோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்தையும் நேரடியாக அறியும் தன்மை. இது, சேதநன் தனது மனதில், “எனக்கு நன்மை எது என்றும், விலக்கவேண்டிய தீமை எது என்றும் ஸர்வேச்வரன் அறியாதது ஏதும் இல்லை”, என்று எண்ணுவதற்குப் பயன்படும். (6) ஸர்வசக்தித்வம் – மற்ற யாராலும் செய்ய இயலாதவற்றையும் தான் செய்து முடிக்கவல்ல தன்மை. இது, “ஸம்ஸாரத்தில் உள்ள நம்மை ஸர்வேச்வரன் நினைத்தால் சட்டென்று நிந்தஸூரிகளுக்கு ஒப்பான நிலையில் (மோக்ஷம்) புகச் செய்ய இயலும்” என்று உறுதியாக நம்புவதற்குப் பயன்படும். (7) ஸத்யஸங்கல்பம் – தான் ஒரு விஷயத்தை எண்ணிவிட்டால், அதனைத் தானே முயன்றாலும் தடுக்க இயலாத உறுதியான தன்மை. இது, கீதையில் (18-66) - அஹம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – நான் உன்னுடைய அனைத்து பாபங்களையும் விலக்கி மோக்ஷம் அளிக்கிறேன் – என்று கூறிய சொற்கள் பிசகாது என்று உறுதியாக நம்புவதற்குப் பயன்படும். (8) பரமகாருணிகத்வம் – தன்னுடைய பயனை எண்ணாமல், மற்றவர்களுடைய துன்பங்களைப் போக்குவதில் உள்ள விருப்பம் ஆகும். இது, எல்லையற்ற அபராதங்களை ஒருவன் செய்திருந்தாலும், இராமாயணம் யுத்தகாண்டம் (18-3) - மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் – (இராமன் கூறுவது) தோழன் போன்று வந்தவனை நான் விடமாட்டேன் – என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (18-35) - யதி வா ராவண: ஸ்வயம் – (சுக்ரீவனிடம் இராமன்) விபீஷணனோ அல்லது இராவணனோ, யாராக இருப்பினும் – என்றும் உரைத்து, அவர்களிடம் காணப்படும் ஒரு சிறிய நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு மன்னித்து ஏற்கிறான் என்று உறுதியாக நம்புவதற்குப் பயன்படும். (9) க்ருதஜ்ஞத்வம் – இராமாயணம் அயோத்யாகாண்டம் (1-11) - ந ஸ்மரத்யபகாராணாம் சதமப்யாத்மவத்தயா கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி – இராமன் மிகவும் பெருந்தன்மை கொண்டவன் என்பதால், ஒருவன் நூற்றுக்கணக்கான அபராதங்கள் செய்திருந்தாலும், அவற்றை எண்ணுவதில்லை; ஏதேனும் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் மகிழ்கிறான் – என்றும், மஹாபாரதம் உத்யோகபர்வம் (47-23) - ருணம் ப்ரவ்ருத்தமிவ ஹ்ருதயாந் நாபஸர்ப்பதி – (க்ருஷ்ணன் உரைப்பது) திரௌபதி என்னை “கோவிந்தா” என்று அழைத்தது கடன் போன்று எனது மனதை விட்டு அகலாமல் உள்ளது – என்றும் கூறுவதற்கு ஏற்ப மிகவும் சிறிய அளவே நல்லதைச் செய்தாலும், அதனைத் தனக்குச் செய்த பேருதவியாக எண்ணி மறக்காமல் உள்ள தன்மை. இது, நம்மிடம் ஏதேனும் ஒரு சிறிய நன்மைக்கான அடையாளத்தைக் கண்டால் கூட, நம்மை எப்போதும் அவன் கைவிடமாட்டான் என்று உறுதியுடன் இருப்பதற்குப் பயன்படும். (10) ஸ்திரத்வம் – தனது அடியார்களைக் காப்பாற்றுவதில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் தன்மை. இது, ஸர்வேச்வரனுக்கு மிகவும் அந்தரங்கமாக உள்ளவர்களான பெரியபிராட்டியார் போன்றவர்கள் தடுத்தாலும், இராமாயணம் யுத்தகாண்டம் (18-3) - ந த்யஜேயம் கதஞ்சந – (இராமன் உரைப்பது) ஒருபோதும் கைவிடமாட்டேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, நம்மைக் கைவிடமாட்டான் என்று உறுதியாக நம்புவதற்குப் பயன்படும். (11) பரிபூர்ணத்வம் – தான் விரும்பும் அனைத்தையும் பெறவல்ல தன்மை. இது, ஸ்ரீமத்பாகவதம் (10-81-3) - அண்வப்யுபஹ்ருதம் பக்தை: ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் – அடியார்கள் எனக்கு ஏதேனும் அணு அளவே கொண்டு வந்தாலும் அவர்களிடம் உள்ள ப்ரேமை காரணமாக அது எனக்கு மிகவும் பெரியதாகவே தோன்றும் – என்றும், கீதை (9-26) - பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி – இலை, புஷ்பம், பழம், நீர் என்று எதனை என்றாலும், எனக்குப் பக்தியுடன் அளித்தால் ஏற்கிறேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, நாம் அளிப்பதில் நம்முடைய ப்ரேமை வெளிப்படுவதைக் காண்கிறானே அல்லாமல், நாம் அளிக்கும் பொருளின் தரம் பார்ப்பதில்லை என்று எண்ணி நம்மால் இயன்றவற்றை அளிக்க முயலுவதற்குப் பயன்படும். (12) பரம உதாரத்வம் – சேதநன் கைக்கொள்கின்ற உபாயத்தின் சிறுமை, அதனால் அவன் பெறப்போகும் பலனின் மேன்மை, அந்தப் பலனைப் பெற உள்ளவனுடைய தாழ்மை போன்ற எதனையும் ஆராயாமல், “நாம் அந்த மனிதனுக்குச் செய்த நன்மைகள் போதாது” என்று எண்ணியிருக்கும் வள்ளல் தன்மை. இது, ததிபாண்டன் என்பவன் தனக்கும் தன்னுடைய வீட்டில் க்ருஷ்ணன் ஒளிந்திருந்த பானைக்கும் மோக்ஷம் வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பெற்றது போன்று, சேதநன் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மோக்ஷம் அளிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பெறுவதற்குப் பயன்படும். இப்படியாக ஸர்வேச்வரன் உபாயமாக ஆவதற்கு அவசியமான மற்ற குணங்களையும், அவற்றின் பயன்களையும் இங்கு எண்ணிக் கொள்ளலாம்.