Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 28)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸர்வேச்வரனுடன் பிராட்டி உள்ள நித்யயோகம் குறித்த வாதங்களுக்குச் சமாதானமும் காரணமும்
மூலம் – இங்கு உபாயதசையிலும் பலதசையிலும் ப்ரமாணங்கள் நித்யயோகத்தைச் சொல்லுகையாலும், இம்மந்த்ரத்தில் இவ்வர்த்தம் ப்ரகாசிப்பிக்கை அபேக்ஷித மாகையாலும் பூர்வோத்தர கண்டங்களில் மதுப்பாலே “ஸ ப்ராதுச்சரணௌ காடம்”, “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா” என்கிறபடியே பிரிவற்றபடி சொல்லிற்றாயிற்று. நம்மாழ்வாரும் “அகலகில்லேன் இறையும் என்றும் அலர்மேல்மங்கை உறை மார்பா” என்றும், “ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப” என்றும், “இங்குமங்கும் திருமாலன்றி இன்மை கண்டு” என்றும் உபாயதசையிலும் பலதசையிலும் ஸ்ரீமச்சப்ததிற் சொன்ன நித்யயோகத்தை அநுஸந்தித்தார். இவ் வநுஸந்தாநம் ஸாபராதர்க்கு அணியிடாதே நினைத்தபோதே ஆச்ரயிக்கைக்கு உறுப்பாம்.
– பெரியபிராட்டியார் ஸர்வேச்வரனுடன் எப்போதும் இணைந்துள்ளதான இந்தத் தொடர்பு என்பது, இவர்கள் இருவருமாகச் சேர்ந்து உபாயமாக நிற்கும்போதும், உபாயத்தைக் கைக்கொண்டவுடன் பலன் அளிக்கும்போதும் உள்ளது என்று பல ப்ரமாணங்களும் கூறுவதாலும், த்வய மந்த்ரத்தில் இப்படிப்பட்ட பொருள் வெளிப்படவேண்டும் என்பதாலும், த்வய மந்த்ரத்தின் முதல் வரி மற்றும் இரண்டாம் வரியில் உள்ள “மதுப்” என்னும் விகுதி மூலம் இவர்கள் இருவரும் பிரிவற்றபடி உள்ள நிலை கூறப்பட்டது. இதனை இராமாயணம் (2-31-2) - ஸ ப்ராதுச்சரணௌ காடம் – இராமனுடைய இரண்டு திருவடிகளையும் சீதையின் முன்னிலையில் பற்றியபடி லக்ஷ்மணன் உரைத்தான் – என்றும், இராமாயணம் (2-31-27) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா – (இராமனிடம் லக்ஷ்மணன்) நீ வைதேகியுடன் சேர்ந்து – என்றும் கூறுவதன் மூலமும் அறியலாம். இவர்கள் இருவருமாகச் சேர்ந்துள்ள நிலையானது உபாயமாக நிற்கும்போதும், உபாயத்தைக் கைக்கொண்டவுடன் பலன் அளிக்கும்போதும் வெளிப்படுவதைத் திருவுள்ளத்தில் கொண்டே நம்மாழ்வார் பின்வருமாறு அருளிச்செய்தார்: திருவாய்மொழி (6-10-10) - அகலகில்லேன் இறையும் என்றும் அலர்மேல்மங்கை உறை மார்பா திருவாய்மொழி (4-9-10) - ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப திருவாய்மொழி (7-9-11) - இங்குமங்கும் திருமாலன்றி இன்மை கண்டு இத்தகைய சேர்க்கை குறித்த எண்ணமானது எந்தவிதமான சந்தேகமும் இன்று ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அண்டுவதற்கு மிகவும் அவசியமான காரணமாகும். நாராயண என்னும் பதத்தின் பொருள்