Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 27)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸர்வேச்வரனுடன் பிராட்டி உள்ள நித்யயோகம் குறித்த வாதங்களுக்குச் சமாதானமும் காரணமும்
மூலம் – (1) அப்ருதக்ஸித்த வஸ்துவுக்கு “ஸ்ரீமாந்” என்று மத்வர்த்தீய ப்ரத்யய ஸாபேக்ஷமாக ஸாமாநாதிகரண்யம் கூடுமோ என்றும், (2) ப்ருதக்ஸித்தமாகில் “கீர்த்தி: ஸ்ரீவாக்ச நாரீணாம்” என்றும், “பூவில் வாழ் மகளாய்” என்றும் மத்வர்த்தீய ப்ரத்யய நிரபேக்ஷமாக ஸாமாநாதிகரண்யம் கூடுமோ என்றும் சிலர் சொல்லும் சோத்யங்கள் இரண்டும் மந்தங்கள். எங்ஙனேயென்னில் “தத் குணஸாரத்வாத்து தத் வ்யபதேச: ப்ராஜ்ஞவத்” என்கிற ந்யாயத்தாலே, ஜ்ஞாநகுணத்தையிட்டு ஆத்மாவை ஜ்ஞாநமென்று சொல்லலாயிருக்கச் செய்தே, ஜ்ஞாநவாந் என்று மத்வர்த்தீய ப்ரத்யயாந்விதமாகவும் ஸாமாநாதிகரண்யம் உண்டாகிறாப்போலே இங்கும் குறையில்லை. ஆகையால், மத்வர்த்தீய ப்ரத்யய மாத்ரத்தைக் கொண்டு, ப்ருதக்ஸித்தமென்று நிச்சயிக்கப் போகாது. “நரபதிரேவ ஸர்வே லோகா:” இத்யாதிகளிற்போலே, விவக்ஷாந்தரம் ஸம்பாவிதமானவிடத்தில், இப் ப்ரத்யயமில்லாத ஸாமாநாதிகரண்யத்தைக் கொண்டு, ப்ருதக்ஸித்தமன்றென்னவு மொண்ணாது. ஆன பின்பு, விசதமாகப் ப்ரதிபாதிக்கும் ப்ரமாணாந்தரங்களைக் கொண்டு இவ் வஸ்து ஸ்திதியிருக்கும்படி தெளியப் ப்ராப்தம்.
– இங்கு இரண்டுவிதமான ஆக்ஷேபங்களை சிலர் எழுப்புகின்றனர். அவையாவன: (1) ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க இயலாதபடி உள்ளதும், ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்னும்படி உள்ளது ஆகிய இரண்டு பொருள்களை இணைக்க “மதுப்” என்ற விகுதியைப் பயன்படுத்த இயலாது (உதாரணமாக சூரிய ஒளியை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள சூரியன் என்பதிலிருந்து ஒளியைப் பிரிக்க இயலாது. ஆக இங்கு “மதுப்” விகுதியைச் சேர்க்க இயலாது). ஆனால் பிரிக்க முடிந்த இரண்டு வஸ்துக்களை “மதுப்” கொண்டு இணைக்கலாம் (உதாரணமாக, “நீலச்சட்டை அணிந்த சிறுவன்”. இங்கு “நீலச்சட்டை” மற்றும் “சிறுவன்” ஆகிய இரண்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கும்). ஆக இங்கு “ஸ்ரீமாந்” என்பதில் மதுப் விகுதி உள்ளதால், “ஸ்ரீ” என்பதை நாராயணனிடமிருந்து பிரிக்க இயலும் என்று தேறுகிறது. இது பொருந்தாது. (2) “ஸ்ரீ”யை நாராயணனிடமிருந்து பிரிக்க இயலும் என்றும், அவன் இல்லாதபோது அவள் தனித்திருக்கலாம் (சீதை இராமனை விட்டுப் பிரிந்து இருந்தாள்) என்றும் கூறி, “ஸ்ரீ” என்பதை “பகவான்” என்னும் பதத்துடன் “மதுப்” விகுதியுடன் இணைக்காமல் சேர்க்க இயலாது என்று கூறினால், இதுவும் பொருந்தாது. காரணம், கீதையில் (10-34) - கீர்த்தி: ஸ்ரீவாக்ச நாரீணாம் – பெண்களில் கீர்த்தி தேவியாகவும், லக்ஷ்மியாகவும், வாக் தேவதையாகவும் நானே உள்ளேன் – என்றும், திருவாய்மொழியில் (6-3-6) - பூவில் வாழ் மகளாய் – தாமரையில் வஸிக்கும் மஹாலக்ஷ்மியாய் உள்ள என் பரஞ்சுடரே – என்றும் கூறியது காண்க. இந்த இரண்டு எதிர்வாதங்களும் பொருந்தாதவை ஆகும். எப்படி? “மதுப்” என்னும் விகுதி உள்ளதால் மட்டுமே அதனால் இணைக்கப்பட்ட இரண்டு பொருள்களையும் பிரிக்க இயலுமா இயலாதா என்று கூற முடியாது. உதாரணமாக ப்ரஹ்மஸூத்ரம் (2-3-29) - தத் குணஸாரத்வாத்து தத் வ்யபதேச: ப்ராஜ்ஞவத் – ஜீவனுக்கு ஞானம் என்னும் குணமே சாரமாக உள்ளதால் ஜீவனே ஞானம் எனப்படுகிறான்; ஸர்வேச்வரனுக்கு ஆனந்தம் என்னும் குணமே சாரமாக உள்ளதால் அவனே ஆனந்தம் எனப்படுகிறான் என்று கூறுவது போல – என்பது காண்க. இங்கு ஜீவனுக்கும் ஞானத்திற்கும் பிரிக்க இயலாத ஸம்பந்தம் இருந்தாலும், “ஞானவான் – ஞானம் கொண்டவன்” என்று ஜீவனைக் கூறுவதைக் காணலாம். இதே போன்று இங்கும் கொள்வதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. ஆகவே, “மதுப்” என்னும் விகுதி உள்ளதால் மட்டுமே அதனால் இணைக்கப்பட்ட இரண்டு பொருள்களையும் பிரிக்க இயலுமா இயலாதா என்று கூற முடியாது. மேலும் ஓர் உதாரணம் காண்போம். நரபதிரேவ ஸர்வே லோகா: - அரசனே நாட்டில் உள்ள அனைத்தும் – என்னும் வாக்கியத்தில் “லோகா:” என்பதைத் தொடர்ந்து “மதுப்” விகுதி இல்லாத காரணத்தினால், அரசனுக்கும் நாட்டிற்கும் பிரிக்க இயலாத தொடர்பு உள்ளது, அரசன் இல்லாமல் நாடு இருக்க முடியாது என்று கூற முடியாது அல்லவோ? ஆகவே “மதுப்” என்னும் விகுதி உள்ளதால் ஸம்பந்தம் உள்ளதா இல்லையா என்று ஆராயாமல், தகுந்த ப்ரமாணங்களைக் கொண்டே இப்படியாக உள்ள ஸம்பந்தங்களைத் தீர்மானிக்கவேண்டும்.