Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 26)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“ஸ்ரீ” என்பதன் அடுத்துள்ள “மதுப்” விகுதியின் (suffix) பொருள்
மூலம் – ஸ்வாம்யுபாய உபேயச்ச ஸ்வரூபாதி ஸமர்ப்பண ப்ரதித: ப்ரதி ஸம்பந்தீ ஸ்ரீமாந் நிகம சக்ஷுஷாம் “ஸ்ரீமாந்” என்று பொதுவிலே சொன்னாலும் ப்ரமாணாநுஸாரத்தாலே இங்கு ஸ்ரீய:பதியென்றபடி. ஸாமந்யமாகத் தோற்றின ஸம்பந்தம், ஸ்ரீதிபலத்தாலே விசேஷிதம். ஸர்வருக்கும் ஆச்ரயணீயையாய், ஜகந்மாதாவான இவளுக்குப் பதியென்னவே பரத்வமும் ஸௌலப்யமும் தோற்றும். இங்குப் பிராட்டியை விசேஷித்து எடுக்கையாலே நார சப்தார்த்தங்களான வஸ்த்வந்தரங்களிற் காட்டில் வ்யுத்பத்தியும், விசேஷணமாக நிர்த்தேசிக்கையாலே யதா ப்ரமாணம் பதிபாரார்த்தமும் ஸூசிதம். பூம நிந்தா ப்ரசம்ஸாஸு நித்ய யோகே அதிசாயநே ஸம்ஸர்க்கே அஸ்தி விவக்ஷாயாம் பவந்தி மதுபாதய: என்று அநேகார்த்தமாயிருந்ததேயாகிலும் இங்கு மதுப் உபயோக விசேஷத்தாலே ப்ரமாண ஸித்தமான நித்யயோகத்தைச் சொல்லுகிறது. விக்ரஹத்தில் ப்ரஹ்மசர்யாவஸ்தையிலுமுள்பட “க்ருஷ்ணாஜிநேந ஸம்வ்ருண்வந் வதூம் வக்ஷ: ஸ்தலாலயாம்” என்னும்படியிறே நித்யயோகமிருப்பது.
ஸ்வாம்யுபாய உபேயச்ச ஸ்வரூபாதி ஸமர்ப்பண ப்ரதித: ப்ரதி ஸம்பந்தீ ஸ்ரீமாந் நிகம சக்ஷுஷாம் – வேதங்கள் என்னும் கண்களைக் கொண்டு அறிபவர்களுக்கு, அவர்கள் தங்களைக் காப்பாற்றும் பொறுப்பு போன்றவற்றைச் ஸர்வேச்வரனுக்குச் சமர்ப்பணம் செய்யும்போது, அவன் ஸ்வாமியாகவும் உபாயமாகவும் பலனாகவும் இருந்தபடி அடையவேண்டிய இலக்காகிறான் – என்பது அறிக. “ஸ்ரீமாந்” என்னும் பதமானது “ஸ்ரீயுடன் தொடர்பு உள்ளவன்” என்று பொதுவான பொருளை அளித்தாலும், வேதங்கள் என்னும் ப்ரமாணம் மூலம், அந்தப் பதமானது “பெரியபிராட்டியின் கணவன்” என்பதையே உணர்த்துகிறது. ஆக பொதுவாகத் தோன்றும் ஸம்பந்தம் என்பது வேதங்களுடைய பலம் காரணமாகக் குறிப்பிட்ட ஸம்பந்தத்தை உணர்த்துவதாகிறது. அனைத்து உயிர்களும் அண்டி நிற்பவளாய், அனைத்து உலகங்களின் தாயாய் உள்ள பெரியபிராட்டியின் நாயகன் என்னும்போது அவனுக்கு எஜமானத்தன்மையும் ஸௌலப்யமும் வெளிப்படுகிறது. “ஸ்ரீமந்நாராயண” என்பதில் “நார” என்னும் சப்தத்துடன் “ஸ்ரீ” என்னும் சப்தம் இணைக்கப்பட்டாலும், அவளைச் சிறப்பித்துக் கூறுவதால், அவளுக்கும் “நார” என்னும் பதம் மூலம் கூறப்படும் மற்ற வஸ்துக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வெளிப்படுகிறது. மேலும் “ஸ்ரீமாந்” என்பதன் மூலம் இவளை அவனுடைய தன்மையாகக் கூறுவதால், தகுந்த ப்ரமாணம் மூலம், இவளுடைய இருப்பு என்பது தனது கணவனாகிய அவனுக்காகவே ஆகும் என்பது வெளிப்படுகிறது. அஷ்டாத்யாயீ வார்த்திகம் (5-2-94) - பூம நிந்தா ப்ரசம்ஸாஸு நித்ய யோகே அதிசாயநே ஸம்ஸர்க்கே அஸ்தி விவக்ஷாயாம் பவந்தி மதுபாதய: - “மதுப்” போன்ற விகுதிகள் மிகுதி, பழிப்பு, புகழ்ச்சி, எப்போதும் கூடியிருத்தல், சிறப்பாக இருத்தல், சம்பந்தம் போன்ற பல பொருள்களை அளிப்பதாகும் – என்பதற்கு ஏற்ப “மதுப்” என்னும் விகுதியானது பலவிதமான பொருள்களை அளிப்பதாக உள்ளபோதிலும், இங்கு ப்ரமாணங்கள் மூலமாக, அந்த விகுதியானது “எப்போதும் கூடியிருத்தல்” என்னும் பொருளையே அளிக்கிறது. இந்தச் சேர்த்தியானது அவன் ப்ரஹ்மச்சாரியாக (வாமனாவதாரம்) வந்தபோதிலும், க்ருஷ்ணாஜிநேந ஸம்வ்ருண்வந் வதூம் வக்ஷ: ஸ்தலாலயாம் – தனது திருமார்பில் எப்போதும் உள்ளவளை, மான் தோல் கொண்டு மூடி வந்து – என்பதற்கு ஏற்ப, உள்ளது என்று அறியலாம்.