Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 25)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“ஸ்ரீ” சப்தத்தின் ஆறு பொருள்களையும் த்வயத்தின் இரு பகுதிகளிலும் கொள்ளவேண்டிய முறை
மூலம் – இவ்வ்யுத்பத்திகள் எல்லாவற்றிலும் உள்ள வைபவத்தைக் கணிசித்து, “ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தார். பட்டரும் நிரூபாதிக மங்கலத்வத்தை நினைத்து “ஸ்ரீரஸி யத:” என்றார். இவ்வர்த்தங்களில் ஈச்வரனுடைய உபாய பாவத்துக்கு உபயுக்தங்களானவை பூர்வகண்டத்திலும் ப்ராப்யதைக்கு உபயுக்தமானவை உத்தரகண்டத்திலும் அநுஸந்தேயங்கள்.
– இப்படியாக உள்ள ஆறுவிதமான பொருள்களாலும் பெரியபிராட்டிக்கு உள்ள எல்லையற்ற வைபவத்தை எண்ணியே ஸ்வாமி ஆளவந்தார் சதுச்ச்லோகியில் (1) - ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம் - உன்னுடைய திருநாமமும் “ஸ்ரீ” என்று உள்ளது. இப்படிப்பட்ட உன்னை நான் எவ்விதம் புகழ்வேன் – என்றார். ஸ்வாமி பராசரபட்டர், பெரியபிராட்டியுடன் ஸர்வேச்வரனுக்கு உள்ள இயற்கையான தொடர்பு காரணமாகவே அவனுக்கு அனைத்து மங்களங்களும் உண்டாவதை எண்ணியே ஸ்ரீகுணரத்னகோசத்தில் (29) - ஸ்ரீரஸி யத: - உன்னுடைய ஸம்பந்தம் காரணமாக அல்லவோ அவன் மங்களங்கள் நிறைந்துள்ளான் – என்றார். த்வய மந்த்ரத்தில் உபாயத்தைக் கூறுவதான முதல் வரியில் உள்ள “ஸ்ரீ” என்னும் சொல், உபாயமாக இருப்பதற்கு அவசியமான குணங்களைக் கூறும்; பலனைக் கூறுவதான இரண்டாவது வரியில் உள்ள “ஸ்ரீ” என்னும் சொல், பலனாவதற்கு அவசியமான குணங்களைக் கூறும் என்று கொள்க.