Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 20)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்

மூலம் – இப்படி இவளுக்கு ஸர்வேச்வரன் திருவடிகளில் கடகத்வம் பஹு ப்ரமாண ஸித்தமாகையால், இங்கும் இவ்விவக்ஷை கொள்ள உசிதம். இப்படிப் புருஷகாரபூதையுமாய் ஸித்தோபாய விசேஷணமுமாய்க் கொண்டு ஆச்ரயிக்கப்படும். “ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம்”, “ஸ்வத: ஸ்ரீஸ்த்வம் விஷ்ணோ: ஸ்வமஸி” என்கிற ச்லோகங்களின்படியே ஆதித்யாதிகளுக்குப் ப்ரபாதிகள் போலே அதிசய காரிணியாய்க் கொண்டு ஸித்தோபாயத்தை ஆச்ரயித்திருக்கும். எல்லோர்க்கும் ஸேவ்யையாய் ஸர்வேச்வரனை ஸேவித்திருக்கும் என்று பொருளானபோது எல்லார்க்கும் ஸ்வாமினியாய், “காந்தஸ் தே புருஷோத்தம:”, “சேஷித்வே பரம: புமாந்” என்கிறபடியே அவனுக்குச் சேஷமான நிலை சொல்லிற்றாம். “ஜகத் ஸமஸ்தம் யதபாங்க ஸம்ச்ரயம்” இத்யாதிகளிற்படியே எல்லா வஸ்துக்களாலும் ஆச்ரயிக்கப்பட்டு எல்லாவற்றையும் தான் ஆச்ரயித்திருக்குமென்று பொருளானபோது நாராயணாதி சப்தங்கள் ச்ரியபதிக்குச் சொல்லுங் கட்டளையை விஷ்ணுபத்நிக்கும் சொல்லிற்றாம். ஸ்ரீபாஷ்யகாரரும் “பகவந்நாராயண” என்கிற நேரிலே “பகவதீம் ஸ்ரீயம்” என்று அருளிச்செய்தார்.

– இப்படியாக இவளுக்கு நம்மை ஸர்வேச்வரனுடைய திருவடிகளில் கொண்டு சேர்ப்பிக்கும் தன்மை உண்டு என்பது பல ப்ரமாண வாக்கியங்கள் மூலம் தெளிவாகிறது என்பதால், இக்கருத்தையே இங்கும் கொள்ளவேண்டும். ஆகவே இவள் பகவானிடம் நமக்காகச் சிபாரிசு செய்பவள் என்றும், ஸித்தோபாயத்தின் (ஸர்வேச்வரன்) ஒரு குணம் என்றும் கொள்ளப்பட்டு அனைவராலும் அண்டப்படுகிறாள். ஆக, ஸ்ரீகுணரத்னகோசம் (28) - ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ரவதநே - சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? – என்றும், ஸ்ரீகுணரத்னகோசம் (31) - ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி - மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய் – என்றும் உள்ள ச்லோகங்களுக்கு ஏற்ப, சூரியனுக்கு எவ்விதம் அதன் க்ரணங்கள் உள்ளனவோ அது போன்று, ஸித்தோபாயமான ஸர்வேச்வரனுக்கு மேன்மையைச் செய்பவளாக அவனை அண்டியுள்ளாள். அனைவராலும் வணங்கப்படும் அவள், ஸர்வேச்வரனை வணங்கியபடி உள்ளாள் என்று பொருளாகும்போது, அனைவருக்கும் எஜமானியாக உள்ள நிலையும், சதுச்லோகி (1) - காந்தஸ் தே புருஷோத்தம: - உனது ப்ரியமான கணவன் புருஷோத்தமன் என்று விளங்குபவன் – என்றும், ஸ்ரீகுணரத்னகோசம் (22) – சேஷித்வே பரம: புமாந் – உனக்குப் பலவிதங்களிலும் உதவிட உன்னுடைய எஜமானனாகிய ஸ்ரீரங்கநாதன் உள்ளான் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, இவள் ஸர்வேச்வரனுக்கு உட்பட்டவளாக உள்ள நிலையும் புலப்படுகிறது. ஸ்தோத்ரரத்னம் (37) - ஜகத் ஸமஸ்தம் யதபாங்க ஸம்ச்ரயம் – இந்த உலகம் முழுவது எந்த ஒரு பிராட்டியின் கடைக்கண் நோக்கை ஆதாரமாகக் கொண்டு அண்டி நிற்கிறதோ – என்பது போன்ற வரிகளுக்கு ஏற்ப, அனைத்து வஸ்துக்களாலும் அண்டப்பட்டுள்ளவள் என்று பொருளாகும்போது, நாராயண பதம் மூலம் “அவனை அனைத்தும் அண்டியுள்ளன, அவன் அனைத்தின் உள்ளும் உள்ளான்” என்று கூறுவது போன்றே, விஷ்ணுபத்னியாகிய இவளுக்கும் கொள்ளலாம். சரணாகதி கத்யத்தில் எம்பெருமானார், “பகவந் நாராயண” என்று தொடங்கும் பகுதியில், “பகவதீம் ஸ்ரீயம்” என்று அருளிச் செய்தார்.