Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 19)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்
மூலம் – லோகத்ருஷ்டியாவது, அந்த:புர பரிஜனத்தை அபராத பூயஸ்தையுண்டானாலும், ராஜாக்கள் அல்பங்களான ப்ரஸாநங்களாலே க்ஷமிக்கக் காண்கை. இவ்வர்த்தம் “மாதர் லக்ஷ்மி யதைவ மைதில ஜந:” என்கிற ச்லோகத்திலும் விவக்ஷிதம். குரூக்தியாவது, நம்மாழ்வார் முதலான ஆசார்யர்களுடைய “அகலகில்லேன்” முதலான பாசுரங்கள். இவற்றுக்கு மூலமான ஸூக்தவிசேஷ ரூபைகளான ச்ருதிகளையும் கண்டு கொள்வது. இவையடியாக வந்த ஸ்ம்ருதிகளான, “வாச: பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந்நியத: ச்ரியம்” இத்யாதிகளான சௌநகாதி வாக்யங்கள்.
மேலே கூறப்பட்ட நிக்ஷேபரக்ஷை ச்லோகத்தில் “லோகத்ருஷ்டி = உலக வழக்கம்” என்றால் அரசர்கள், தங்களுடைய அந்தப்புரத்தில் பணியாற்றுபவர்கள் மிகுந்த குற்றம் செய்தாலும், அவர்களுக்குச் சிறிய தண்டனை மட்டுமே அளிப்பதைக் காணலாம். இதனை ஸ்ரீகுணரத்னகோசம் (51) - மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம் த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச - தாயே! ஸீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம். உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை, “உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம். அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம். இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம் – என்பதில் காணலாம். மேலே கூறப்பட்ட நிக்ஷேபரக்ஷை ச்லோகத்தில் “குரூக்தி = பூர்வர்களின் அருளிச்செயல்களில்” என்றால், நம்மாழ்வார் முதலான ஆசார்யர்கள் அருளிச்செய்த திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லேன் – போன்ற பாசுரங்கள் ஆகும். மேலும் ஸ்ரீஸூக்தம் முதலான வடிவங்களில் உள்ள ச்ருதிகளையும் இவ்விஷயத்தில் உதாரணம் கொள்ளாலாம். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு வந்த சௌநக ஸம்ஹிதை - வாச: பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந்நியத: ச்ரியம் – அனைத்து சொற்களின் பொருளாக உள்ள பரம்பொருளை அடையவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன், மஹாலக்ஷ்மியைச் சரணம் புகவேண்டும் – போன்ற ஸ்ம்ருதிகளையும் காண்க.