Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 18)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்

மூலம் – “அநுஷ்டானமாவது” – ப்ரஹ்லாத விஷயத்தில் ப்ரேமாதிசயத்தாலே ப்ரதிகூல விஷயத்திற் பிறந்த சீற்றத்தின் கனத்தைக் கண்டு அணுக அஞ்சின ப்ரஹ்மாதிகள் இவளைச் சரணமாகப் பற்றி இவள் முன்னிலையாக ஸ்ரீந்ருஸிம்ஹ ரூபனான ஸர்வேச்வரனைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணினார்களென்று புராண ப்ரஸித்தம். “ஸீதாம் உவாசாதிசயா ராகவம் ச மஹாவ்ரதம்”, “ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம்” இத்யாதிகளிலும் கண்டுகொள்வது.

மேலே கூறப்பட்ட நிக்ஷேபரக்ஷை ச்லோகத்தில் “அநுஷ்டாநம் = சான்றோர்களின் நடத்தைகள்” என்றால் – ப்ரஹ்லாதன் மீது கொண்ட ப்ரேமை காரணமாக, அவனுடைய விரோதியான ஹிரண்யன் மீது கொண்ட சீற்றத்தைக் கண்டு, நான்முகன் உள்ளிட்ட அனைவரும் நரஸிம்ஹ ரூபம் எடுத்த ஸர்வேச்வரனை அணுக அஞ்சினர். அப்போது மஹாலக்ஷ்மியைச் சரணம் புகுந்த அவர்கள், அவளை முன்னிறுத்தி நரஸிம்ஹனை அண்டி நின்று துதித்தனர் என்பதைப் புராணங்களில் காணலாம். இதனை, இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-2) - ஸீதாம் உவாசாதிசயா ராகவம் ச மஹாவ்ரதம் – லக்ஷ்மணன் சீதையையும் உயர்ந்த ஸங்கல்பம் கொண்ட இராமனையும் நோக்கி உரைத்தான் – என்றும், இராமாயணம் அயோத்யாகாண்டம் (15-6) - ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் – சீதையின் முன்னிலையில் லக்ஷ்மணன் இராமனிடம் உரைத்தான் – என்றும் உள்ள வரிகளிலும் காணலாம்.