Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 17)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்

மூலம் – இவற்றில் அர்த்த ஸ்வபாவமாவது – ஈச்வரனைப்போலே பித்ருத்வாநுரூபமான ப்ரதாபோஷ்மலத்வம் கலசாதே மாத்ருத்வ ப்ரயுக்தங்களான வாத்ஸல்யாதிகள் அதிசயித்து “ந கச்சிந் ந அபராத்யதி”, “க: குப்யேத்வா நரோத்தம”, “மர்ஷயாமீஹ துர்பலா” என்கையே ஸ்வபாவமாயிருக்கையும், வால்லப்யாதிசயத்தாலே இவளை முன்னிட்டால் அவன் மறுக்கமாட்டாதொழிகையும், இவ்வர்த்த ஸ்வபாவத்தாலே இவளைப் பற்றுவார்க்குப் புருஷகாராந்தர அபேக்ஷையுண்டாய், அநவஸ்தை வராது.

– மேலே கூறப்பட்ட நிக்ஷேபரக்ஷை ச்லோகத்தில் “அர்த்த ஸ்வபாவம் = பிராட்டியின் இயல்பான தன்மை” என்றால் – தந்தையைப் போன்ற ஸர்வேச்வரனின் பாசத்தில் ஆண்களுக்கே உரிய கண்டிப்புத்தன்மை உள்ளது போன்று இவளிடம் காணப்படாமல், தாய்க்கு மட்டுமே உரியதான வாத்ஸல்யம் முதலியவையே இவளுடைய தன்மையாக உள்ளது என்பதாகும். இராமாயணம் யுத்தகாண்டம் (116-44) - ந கச்சிந் ந அபராத்யதி – தவறுகள் செய்யாதவன் யாரும் இல்லை – என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (116-38) - க: குப்யேத்வா நரோத்தம – தனது அரசனுடைய கட்டளைக்கு இணங்கி நடக்கும் அரக்கிகள் குறித்து யார் கோபம் கொள்வார்கள் – என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (116-40) - மர்ஷயாமீஹ துர்பலா – அரக்கிகளுக்கு உண்டாகும் துன்பத்தை என்னால் பொறுக்க இயலாது – என்றும் உரைப்பதே பிராட்டியின் தன்மையாக உள்ளது. இவள் அவனுடைய மிகுந்த அன்புக்கு உரியவள் என்பதால், இவளை முன்னிறுத்தினால், நமக்காக இவள் செய்யும் சிபாரிசை அவனால் மறுக்க இயலாது. இப்படியாக உள்ள இவளுடைய தன்மை காரணமாக, இவள் நமக்காகப் பரிந்து பேசுவதற்காக, நாம் வேறு யாரிடமும் சிபாரிசுக்குச் செல்லவேண்டாம். இப்படியாக சிபாரிசு செய்யும் விஷயத்தில், இவளிடம் சென்றுவிட்டால், சிபாரிசுக்கான முடிவற்ற நிலை (ஒருவரிடம் சிபாரிசு செய்ய மற்றவரிடம் செல்லுதல், அந்த மற்றவரிடம் சிபாரிசு செய்ய வேறு ஒருவரிடம் செல்லுதல் என்று இப்படியே எண்ணற்றவர்களிடம் செல்லுதல்) உண்டாகாது.