Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 15)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்
மூலம் – அவற்றில் அபேக்ஷித பதாந்தரங்கள் ஔசித்யத்தாலும் அவ்வோ ப்ரமாண பலத்தாலும் விசேஷித்து அறியவேண்டும். அவ்விடத்தில் ஸ்வோஜ்ஜீவநார்த்திகளாலே ஆச்ரயிக்கப்படுமென்றும், இவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக ஸர்வேச்வரனை ஆச்ரயித்திருக்கும் என்றும் பொருளானபோது, பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ: கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந: என்கிறபடியே, ஸாபராதரானவர்கள் பக்கல் ஸ்வயம் ஹ்தைஷியாய், தண்டதரனான ஸர்வேச்வரனுடைய சீற்றத்தை ஆற்றி, அவனுடைய ஸஹஜ காருண்யம் இவர்களுக்கு உஜ்ஜீவகமாம்படி பண்ணிக் கொடுக்கையால் மாத்ருத்வ ப்ரயுக்த வாத்ஸல்யாதிசயத்தாலே புருஷகாரபூதையாய் நிற்கிற ஏற்றம் சொல்லிற்றாம். “அவிஜ்ஞாதா” இத்யாதிகளிற்போலே இங்கு, “விஸ்மார்ய” என்றதுக்கும், “அல்லி மலர் மகள் போக மயக்குகள்” இத்யாதிகளுக்கும் ஸதா ஸர்வஜ்ஞனான ஈச்வரனுடைய நிக்ரஹாபிஸந்தி நிவ்ருத்தியிலே தாத்பர்யம்.
– [ச்ரீயதே = அடையப்படுபவள், ச்ரயதே = அடைபவள், ச்ருணோதி = கேட்பவள், ச்ராவயதி = கேட்க வைப்பவள், ச்ருணாதி = விலக்குபவள், ச்ரீணாதி = உண்டாக்குபவள்]. இங்கு காணப்படும் இந்த ஆறு தாதுக்களுடைய பொருளானது சுருக்கமாக உள்ளதால், அந்தந்த தாதுக்களுடன் அவசியமான சொற்களைச் சேர்த்துக் கொண்டும், ப்ரமாணங்களுக்கு ஏற்பவும் பொருள் கொள்ளவேண்டும். இவற்றில் முதலில் தாங்கள் (ஸம்ஸாரத்திலிருந்து) பிழைக்கவேண்டும் என்று விரும்பும் சேதநர்களால் அடையப்படுபவள் என்றும், அவர்களை பிழைக்கச் செய்யும்பொருட்டு ஸர்வேச்வரனை (அவர்களுக்காகப் பரிந்து உரைக்க) தான் அண்டுகிறாள் என்றும் கூறும்போது, இந்த ச்லோகத்தை நினைவு கூறவேண்டும் : ஸ்ரீகுணரத்னகோசம் (52) - பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ: கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந: - அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய் – என்பதாகும். ஆக, ஸர்வேச்வரன் தவறுகள் செய்த சேதநர்களுக்கு, அவர்களைத் திருத்தும் விதமாகத் தண்டனை அளிக்க முற்படும்போது, அவனை இவள் அண்டி, அவனுடைய சீற்றத்தைத் தணித்து, அவனிடம் இயல்பாகவே உள்ளதான கருணை என்பது சேதநர்கள் கரையேற உதவும்படியாகச் செய்கிறாள். இதன் மூலம், சேதநர்களுடைய தாயாக உள்ளதன் காரணமாக எழுகின்ற வாத்ஸல்யத்தின் மிகுதியால், இவள் சிபாரிசு செய்பவளாக உள்ள மேன்மை உரைக்கப்பட்டது. இந்த ச்லோகத்தில் கூறப்படும் “விஸ்மர்ய = மறக்கும்படி” என்பதும், திருவாய்மொழி (3-10-8) - அல்லி மலர் மகள் போக மயக்குகள் – என்பதும், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் (483) – அவிஜ்ஞாதா – அடியார்களுடைய குற்றங்களைக் காணாதவன் – என்பதற்கு ஏற்ப, அனைத்தும் அறிந்த ஸர்வேச்வரனுடைய “தவறுகளின் காரணமாகத் தண்டித்தல்” என்ற நிலையை நீக்குதல் என்பதை அடியொட்டியே உள்ளன என்று அறியவேண்டும்.