Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 10)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

மூலம் – மேல் அர்த்தக்ரமத்தாலே முற்பட நமஸ்ஸாலே ப்ரார்த்திக்கிற அநிஷ்ட நிவ்ருத்தியை வ்யாக்யானம் பண்ணி, பின்பு இங்குள்ள பரபக்த்யாதி புருஷார்த்த பூர்வகமாகச் சதுர்த்யந்த பதங்களில் விபக்த்யபிப்ரேதமான பரமபுருஷார்த்த லாபத்தை வெளியிட்டருளினார். இப்படி அநுஷ்டிதோபாயனான அதிகாரி விஷயத்தில் இங்கும் அங்கும் உள்ள ஸித்தியைப் பற்றச் சரமச்லோகத்தில் உத்தரார்த்தத்திற்படியே ஸ்வாபாவிக தயார்த்தமான பகவதபிப்ராயம் இருக்கும்படியைத் தத்வ்யஞ்ஜக பகவத் வாக்ய ப்ரக்ரியையாலே அருளிச் செய்து காட்டினார். ஆகையாலே கத்யத்தில் அருளிச் செய்ததெல்லாம் த்வயத்தில் விவக்ஷிதம். இது “த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா” என்கிற பாசுரத்தாலும் ஸூசிதம்.

– அடுத்து த்வயத்தில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ள வரிசைப்படி எடுக்காமல், அந்த மந்த்ரத்தினுடைய பொருளின் அடிப்படையில் சொற்களை எடுத்து, நமக்கு விருப்பம் இல்லாதவற்றை விலக்கவேண்டும் என்னும் விண்ணப்பத்தை ப்ரார்த்திகின்ற “நம:” என்பதை வ்யாக்யானம் செய்தார். தொடர்ந்து, பரபக்தி மற்றும் புருஷார்த்தத்தை முன்னிறுத்துவதான “நாராயணாய” என்னும் நான்காம் வேற்றுமை உள்ள சொல்லின் இறுதியில் காணப்படும் “ஆய” என்பதன் மூலம் கூறப்படுவதான வாழ்வின் மிகவும் உயர்ந்த இலக்கை (பகவானை அடைதல் மற்றும் அவனுக்குக் கைங்கர்யம் செய்தல்) விளக்கினார். அதனைத் தொடர்ந்து, அதிகாரி விஷயத்தில் இங்கு வாழும்போதும், பரமபதம் அடைந்த பின்னரும் வெளிப்படுவதும், சரமச்லோகத்தின் இரண்டாவது வரியில் உள்ளதும் ஆகிய பகவானுடைய தயை நிறைந்த தன்மையை, அதனை வெளிப்படுத்தும் பகவானுடைய சொற்களாலேயே அருளிச்செய்தார். ஆகவே சரணாகதி கத்யத்தில் அருளிச்செய்தவை அனைத்துமே த்வயத்திலும் அறியப்பட வேண்டும் என்றே கூறப்பட்டதாகும். இது, சரணாகதி கத்யம் - த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா – த்வயத்தின் ஆழ்பொருளை எண்ணியபடி மட்டும் அல்லாமல், அதனையே எப்போதும் உச்சரித்தபடி உள்ள நீ – என்பதன் மூலம் அறியப்படும்.