Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 9)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
வ்யாக்யானம் – அடியிலேயாதல் முடிவிலேயாதல் “த்வயம்” என்று நிர்த்தேசியாதே இவ்வளவிலே சொல்ல வேண்டுவானென்? என்னில், உபாய ப்ராப்யங்களில் இங்கு ப்ரதாநபூதன் ஸ்ரீமானான நாராயணனாகையாலே இரண்டு இடத்திலும் கிடக்கிற ஸவிசேஷண நாராயண சப்தம் வ்யாக்யாதமாய் நின்றவளவிலே இம்மந்த்ரத்துக்குப் ப்ரதிபாத்யமான ஸாத்யோபாயத்தோடே கூடப் ப்ரதாநோபாயமும் ப்ரதாந ப்ராப்யமும் வ்யாக்யாதமென்று தோற்றுகைக்காக இங்கே “த்வயம்” என்று அருளிச் செய்தார். அநந்தரம், “பிதரம் மாதரம்” என்று தொடங்கி ஜிதந்தாவிசேஷ பகவத்கீதாதி ஸ்திதமான ஸம்வாத வாக்ய முகத்தாலே அநந்ய ப்ரயோஜனனாய் அநந்யோபாயனாய்க் கொண்டு உபாய பரிக்ரஹம் பண்ணினபடியையும், சரண்ய ஸ்வபாவாநுஸந்தான பூர்வகமாக அபராத க்ஷமணம் பண்ணுகிறபடியையும், த்வயத்துக்கு ஸமுதிதார்த்தமாக அருளிச் செய்தார்.
– “சரணாகதி கத்யத்தின் தொடக்கத்தில் அல்லது இறுதியில் ‘த்வயம்’ என்ற பதத்தை நேரடியாகக் கூறாமல், நடுவில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் மட்டும் ஏன் கூறவேண்டும்?”, என்று கேட்கலாம். இதற்கு விடை அளிப்போம். இலக்கை அடைவதற்கான உபாயம் மற்றும் அந்த உபாயத்தால் அடையப்படும் இலக்கு ஆகிய இரண்டுமே ஸ்ரீமந்நாராயணனே ஆகிறான். த்வயத்தில் இரண்டு இடங்களில் வருவதான, “ஸ்ரீ” என்னும் அடைமொழியுடன் கூடிய “நாராயண” என்னும் பதம் குறித்து கத்யத்தில் முன்பே (தொடக்கத்திலேயே) கூறப்பட்டது. ஆகவே, த்வயத்தில் கூறப்படுவதான ஸாத்யோபாயம் என்னும் ப்ரபத்தியுடன் சேர்ந்து, இலக்கை அடைவதற்கான உபாயம் மற்றும் அந்த உபாயத்தால் அடையப்படும் இலக்கு ஆகியவையும் கத்யத்தில் விளக்கப்பட்டன என்பதை உணர்த்தும்விதமாக இங்கு “த்வயம்” என்னும் சொல்லை உபயோகித்தார். அடுத்து “பிதரம் மாதரம்” என்று தொடங்கும் கத்ய பகுதியில், ஜிதந்தே ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீமத்பகவத்கீதை போன்றவற்றில் இதே கருத்தை உணர்த்தவல்ல வரிகளைக் குறிப்பிட்டு, த்வயத்தின் மூலம் உணர்த்தபடும் ஆழ்பொருளை விளக்கினார்; அது என்னவென்றால் – உபாயமான ப்ரபத்தியை ஸ்ரீமந்நாராயணன் அல்லாமல் வேறு எந்தவிதமான இலக்கைக் குறித்தும் கைக்கொள்ளாமை, ஸ்ரீமந்நாராயணன் அல்லாமல் மற்ற எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ளாமை, ரக்ஷகனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வபாவத்தை மனதில் நிறுத்தி அவன் நம்முடைய அனைத்துவிதமான குற்றங்களையும் பொறுக்கும் தன்மையை எண்ணியபடி இருத்தல் – ஆகியவை ஆகும்.