Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 8)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ப்ரபத்தி மந்த்ரங்களில் த்வயமே முதன்மையானது என்பதற்கான காரணம்

மூலம் – இதின் அர்த்தத்தை ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண, பகவச் சாஸ்த்ராதிகளில் ப்ரஸித்தமானபடியே, ஸதாசார்ய ஸம்ப்ரதாய க்ரமத்தாலே கத்யத்திலே விவரித்தருளினார். எங்ஙனேயென்னில் – “பகவந் நாராயணாபிமதாநுரூப ஸ்வரூப ரூப” என்று தொடங்கி, ஸ்ரீமச்சப்த அபிப்ரேதத்தை அருளிச் செய்தார். “அகில ஹேய ப்ரத்யநீக” இத்யாதியாலே, ஸ்வரூப – ரூப – குண – விபூதிகளைப் பரக்க அருளிச் செய்கையாலே, நாராயண சப்தார்த்தம் வ்யாக்யாதமாயிற்று. முற்படப் பிராட்டியைச் சொல்லச் செய்தே, புருஷகாரத்வ நிர்வாஹார்த்தமாக விபூதி மத்யத்தில் நிலை தோற்றுகைக்காக, மீண்டும் நாரயண சப்த வ்யாக்யானத்திலும் அருளிச் செய்தார். அநந்தரம், “ஸ்ரீமந்நாராயண” என்று பலோபாய வாக்யங்களில் ப்ரயுக்தமான வ்யாக்யேய சப்தத்தை உபாதாநம் பண்ணி யருளினார். “ப்ரபத்யே” என்கிறவிடத்தில் உத்தமனாலே விவக்ஷிதமான அதிகாரி விசேஷம் “அநந்ய சரண: அஹம்” என்று விவ்ருதமாயிற்று. “த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே” என்கையாலே, சரணௌ என்கிற சப்தமும், சரண சப்தமும், க்ரியா பதமும், ப்ரதர்சிதமாயிற்று. அநந்தரம், “த்வயம்” என்று வ்யாக்யேயத்தைப் பூர்ணமாக நிர்தேசித்தார்.

– த்வயத்தின் ஆழ்பொருள் குறித்து வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், பாஞ்சராத்ரம் போன்ற பலவற்றிலும் விரிவாகக் கூறப்பட்டது போன்றே எம்பெருமானார் தன்னுடைய ஆசார்ய வழியில் நிலை நின்றவராக, தான் அருளிச் செய்த சரணாகதி கத்யத்தில் த்வயத்தின் ஆழ்பொருளை விளக்கினார். எப்படி என்று காண்போம். சரணாகதி கத்யத்தில் - பகவந் நாராயணா அபிமத அநுரூப ஸ்வரூப ரூப – ஸ்ரீமந்நாராயணனின் ஸ்வரூபத்திற்கு இனிமையாக உள்ளவளும், ரூபத்திற்குப் பொருத்தமாக உள்ளவளும் – என்று தொடங்குவதன் மூலம் “ஸ்ரீமந்” என்னும் த்வய மந்த்ரத்தின் முதல் பதத்தினுடைய பொருளை அருளிச்செய்தார். தொடர்ந்து, அகில ஹேய ப்ரத்யநீக – தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக உள்ளவன் – என்பதன் மூலம் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி குறித்து அருளிச்செய்தார்; இதனால் த்வயத்தில் உள்ள “நாராயண” என்னும் பதம் விளக்கப்பட்டதாயிற்று. பெரியபிராட்டியைக் குறித்து தொடக்கத்திலேயே உரைத்தாலும், “நாராயண” என்னும் பதத்தினை விளக்கும்போது, விபூதிகளை அருளிச்செய்வதன் நடுவில், அவளுடைய புருஷகாரத்தன்மையை (சிபாரிசு செய்யும் தன்மை) உணர்த்தும் பொருட்டும் “ஸ்ரீவல்லபா” என்றார். தொடர்ந்து பலன் மற்றும் அதனைப் பெறுவதற்கான உபாயம் ஆகியவற்றைக் கூறும் வரியில் உபயோகிக்கப்பட்ட “ஸ்ரீமந்நாராயண” என்பதை விளக்கினார். த்வயத்தில் உள்ள “ப்ரபத்யே” என்னும் பதம் மூலம் சரணம் அடையும் அதிகாரியைக் கூறுவதான தன்மை நிலையை (first person singular), கத்யத்தில் “அநந்ய சரண: அஹம் – மற்ற புகலிடம் இல்லாமல் உன்னிடம் சரணம் புகும் நான்” என்றார். கத்யத்தில் - த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே – உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளில் நான் சரணம் அடைகிறேன் – என்பதன் மூலம் த்வயத்தில் உள்ள “சரணௌ, சரணம், ப்ரபத்யே” என்னும் மூன்றும் விளக்கப்பட்டன. தொடர்ந்து த்வயம் என்னும் பதத்தை உரைத்து, அதனையும் விளக்கினார்.