Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 7)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்தி மந்த்ரங்களில் த்வயமே முதன்மையானது என்பதற்கான காரணம்
மூலம் – இம்மந்த்ரத்திலே விவக்ஷிதமான ஆத்மஸமர்ப்பணம் ஸர்வோபாதி விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரஹ்மணி ந்யஸேத் ஏதத் த்யானம் ச யோகச்ச சேஷோந்யோ க்ரந்த விஸ்தரித: இத்யாதிகளாலே ப்ரகரணாந்தரங்களிலும் ஸ்துதிக்கப்பட்டது. “ஏதத் ஜ்ஞாநம் ச ஜ்ஞேயம் ச” என்று பாடாந்தரம். இச்ச்லோகம் ஸ்வரூப ஸமர்ப்பண பரமானாலும் இங்கு சொல்லுகிற பரஸமர்ப்பணம், ததநுப்ரவிஷ்டம். இஸ்ஸமர்ப்பணத்துக்கு நிவேதயீத ஸ்வாத்மாநம் விஷ்ணாவாமலதேஜஸி ததாத்மா தந்மநா: சாந்த: தத் விஷ்ணோரிதி மந்த்ரத: என்று வ்யாஸ ஸ்ம்ருத்யாதிகளிலும் ச்வேதாச்வதராதிகளிலும் சொன்ன மந்த்ராந்தரங்கள் இப்படி சரண்ய சரணாகதி தத் பலங்களை விசதமாகப் ப்ரகாசிப்பியாது. திருமந்த்ரத்திலும் இவை மூன்றும் ஸங்க்ஷிப்தங்கள். ஆகையாலே ப்ராப்ய ப்ராபக விசேஷங்களை ஸம்பூர்ணமாகப் ப்ரகாசிப்பிக்கிற இத் த்வயமே, ப்ரபத்தி மந்தரங்கள் எல்லாவற்றிலும் ப்ரதானம்.
– த்வய மந்த்ரத்தின் மூலம் உணர்த்தப்படுவதான ஆத்ம சமர்ப்பணம் என்பது, தக்ஷ ஸ்ம்ருதி (7-21) - ஸர்வோபாதி விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரஹ்மணி ந்யஸேத் ஏதத்த்யானம் ச யோகச்ச சேஷோந்யோ க்ரந்த விஸ்தரித: - அவித்யை போன்றதான அனைத்துவிதமான உபாதிகளும் நீங்கப்பெற்ற ஆத்ம ஸ்வரூபத்தை ப்ரஹ்மத்திடம் அர்ப்பணிக்க வேண்டும். இதுவே பக்தியோகம் மற்றும் அதன் அங்கமான கர்மயோகமும் ஆகும். மற்ற அனைத்தும் க்ரந்தங்களை (நூல்களை) பெரிதாக்குபவை மட்டுமே ஆகும் – போன்ற வாக்கியங்களால் கொண்டாடப்படுகிறது; இந்த வரியில் உள்ள “சேஷோந்யோ க்ரந்த விஸ்தரித:” என்பதற்குப் பதிலாக, ஏதத் ஜ்ஞாநம் ச ஜ்ஞேயம் ச – இதுவே உண்மையானதும், அடையப்பட வேண்டியதும் ஆகிய ஞானம் ஆகும் – என்றும் படிப்பர். இந்த ச்லோகம் ஆத்ம ஸமர்ப்பணத்தைக் கூறுவதாக உள்ளபோதிலும், நம்முடைய பாரங்களைச் சமர்ப்பித்து நம்மைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்தல் என்பதும், இதிலேயே அடங்குகிறது. வ்யாஸ ஸ்ம்ருதி - நிவேதயீத ஸ்வாத்மாநம் விஷ்ணாவாமலதேஜஸி ததாத்மா தந்மநா: சாந்த: தத் விஷ்ணோரிதி மந்த்ரத: - தோஷங்கள் ஏதும் இல்லாத தேஜஸ் கொண்ட மஹாவிஷ்ணுவிடம், அவனுடைய சரீரமாக நின்று, அவனிடம் மட்டுமே ஈடுபாடுடைய மனதுடன் கூடியவனாகவும், மற்ற எதிலும் நாட்டம் அற்றவனாகவும் நின்று, தனது ஆத்மாவை “தத் விஷ்ணோ:” என்ற மந்த்ரத்தால் சமர்ப்பணம் செய்யவேண்டும் – என்றும், ச்வேதாஸ்வதர உபநிஷத்தில் (6-18) – யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை தை ஹ தேவமாத்ம புத்தி ப்ரகாசம் முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே – எந்த ஸர்வேச்வரன் தன்னுடைய திருநாபியிலிருந்து நான்முகனைப் படைத்து, அவனுக்கு வேதங்கள் மூலமாக மற்ற அனைத்தையும் படைக்கும் திறனை அளித்தானோ, தன்னைக் குறித்த ஞானத்தைத் தனது கருணையால் மலரும்படிச் செய்கிறானோ, அவனை, மோக்ஷத்தை விரும்பும் நான் சரணம் அடைகிறேன் – என்றும் உள்ள வரிகளில், த்வய மந்த்ரம் போன்று, சரணம் புகத்தக்க ஸர்வேச்வரனைக் குறித்தும், சரணாகதி குறித்தும், சரணாகதியால் உண்டாகவல்ல பலன் குறித்து தெளிவாகக் கூறப்படவில்லை. திருமந்த்ரத்தில் கூட இந்த மூன்று விஷயங்கள் குறித்து மிகவும் சுருக்கமாகவே கூறப்பட்டது. ஆகவே அடையப்படவேண்டிய இலக்கு, அடைவதற்கான உபாயம் ஆகிய இரண்டையும் தெளிவாக உரைக்கின்ற இந்த த்வய மந்த்ரமே, ப்ரபத்திக்கான மற்ற மந்த்ரங்களைக் காட்டிலும் முதன்மையானது ஆகும். சரணாகதி கத்யத்தில் த்வயத்தின் பொருளை விளக்குதல்