Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 6)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் பெருமை
மூலம் – ஆஸ்திகனுக்கு இம்மந்த்ரத்தினுடைய ஸமுதாய ஜ்ஞாந பூர்வக ஸக்ருதுச்சாரணமே உத்தாரகமென்னுமிடம் சாஸ்த்ர ஸித்தம். இம்மந்த்ரத்தை “யேந கேநாபி ப்ரகாரேண த்வய வக்தா த்வம்” என்று மந்த்ராந்தங்களிற்காட்டில் வ்யாவ்ருத்தி தோற்ற அருளிச்செய்தார். அவசேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாந் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹ த்ரஸ்தைர் ம்ருகைரிவ நாம்நஸ்தே யாவதீ சக்தி: பாப நிர்ஹரணே ஹரே ச்வபசோபி நர: கர்தும் க்ஷமஸ்தாவந்ந கில்பணம் இத்யாதிகளிலே திருநாம ஸங்கீர்த்தந மாத்ரத்தினுடைய ப்ரபாவம் இருக்கும்படி கண்டால் சரண்ய சரணாகதி தத் பலவிசேஷங்களைப் பூரணமாய் ப்ரகாசிப்பிக்கிற இம்மந்த்ர விசேஷத்தினுடைய ஸக்ருதுச்சாரண மாத்ரத்தளவிலும் உள்ள ப்ரபாவம் ச்ருத்யாதி ப்ரமாண பலத்தாலே ஸுக்ரஹம். இப் ப்ரபாவ நிபந்தநத்தையும் இங்கே ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது. இப்படிப்பட்ட ரஹஸ்யதமார்த்தங்களில் ஹேது நிரூபணம் பண்ணக்கடவதன்று, சாஸ்த்ரத்தைக் கொண்டு விச்வஸிக்குமத்தனை என்னுமிடம் மஹாபாரதாதிகளிலே, தேவகுஹ்யேஷு சாந்யேஷு ஹேதுர்தேவி நிரர்தக: பதிராந்தவதேவாத்ர வர்த்திதவ்யம் ஹிதைஷிணா இத்யாதிகளாலே சொல்லப்பட்டது.
– த்வய மந்த்ரத்தின் முழுப்பொருளை உணர்ந்து, இதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒருவன் இதனை ஒருமுறை உச்சரித்தாலே, இது அவனை கரையேற்றும் என்பது சாஸ்த்ரங்களால் தெளிவாக அறியலாம். மற்ற மந்த்ரங்களைக் காட்டிலும் இதற்கு உள்ள வேறுபாட்டினை எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் - யேந கேநாபி ப்ரகாரேண த்வய வக்தா த்வம் – எந்த விதத்தில் த்வய மந்த்ரம் உச்சரிக்கப்பட்டாலும் – என்றார். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-8-19) - அவசேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாந் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹ த்ரஸ்தைர் ம்ருகைரிவ – தன்னை அறியாமல் ஒருவன் ஸர்வேச்வரனுடைய திருநாமத்தை உச்சரித்தாலும், சிங்கத்தைக் கண்டு பயந்து அந்தக் காட்டில் உள்ள விலங்குகள் ஓடுவது போன்று, அவனுடைய பாவங்கள் அனைத்தும் அவனிடமிருந்து ஓடுகின்றன – என்றும், விஷ்ணுஸ்ம்ருதி (6) - நாம்நஸ்தே யாவதீ சக்தி: பாப நிர்ஹரணே ஹரே ச்வபசோபி நர: கர்தும் க்ஷமஸ்தாவந்ந கில்பணம் – ஸர்வேச்வரா! பாவங்களை நீக்கவல்லதான உன்னுடைய திருநாமத்திற்கு உள்ள சக்தியின் அளவுக்குப் பாவங்களைச் செய்ய, நாய் இறைச்சி உண்பவனால் கூட இயலாது – என்றும் உள்ள வரிகளில் திருநாம ஸங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது என்று அவனுடைய ப்ரபாவம் உரைக்கப்பட்டுள்ளது; இப்படி உள்ளபோது - அனைவரும் சரணம் புகுகின்றபடி உள்ள அவனைக் குறித்தும், சரணாகதி குறித்து, அதன் பலனைக் குறித்தும் முழுவதுமாக உரைக்கவல்லதான த்வய மந்த்ரத்தினை ஒருமுறை உச்சரித்தாலே போதுமானது என்று இதன் ப்ரபாவத்தை கூறுகின்ற ச்ருதி வாக்கியங்கள், அவையே ப்ரமாணங்கள் என்பதால் எளிதாக அறியக்கூடிய விதத்தில் உள்ளன. த்வய மந்த்ரத்தின் ப்ரபாவத்திற்கான காரணம் குறித்து தகுந்த ப்ரமாணங்கள் மூலமும், அவரவர்களுடைய ஸம்ப்ரதாயம் மூலமும் எளிதாக அறியலாம். ஆனால் இவ்விதம் இதன் ப்ரபாவத்தினுடைய காரண விளக்கத்தினை ஆராய்தல் முறையல்ல. இதன் ப்ரபாவம் குறித்து சாஸ்த்ரங்கள் கூறுவதன் அடிப்படையில் விச்வாசத்துடன் ஏற்றே ஆகவேண்டும். இந்தக் கருத்தினை, மஹாபாரதம் அநுசானிகபர்வம் (228-60) - தேவகுஹ்யேஷு சாந்யேஷு ஹேதுர்தேவி நிரர்தக: பதிராந்தவதேவாத்ர வர்த்திதவ்யம் ஹிதைஷிணா – தேவரஹஸ்யங்கள் மற்றும் உள்ள ரஹஸ்யங்கள் ஆகியவற்றின் காரணத்தை ஆராய்தல் பயனற்றதே ஆகும். தன்னுடைய நன்மையை விரும்பும் ஒருவன், இது போன்ற விஷயங்களில் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் இருத்தல்வேண்டும் – என்றது காண்க.