Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 4)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயம் என்னும் பெயர் வரக் காரணம் மற்றும் த்வயத்திற்கு முழுமையான அதிகாரியும்
மூலம் – இம்மந்த்ரம் “ஸ ப்ராதுச் சரணௌ காடம்”, “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா” என்கிற ச்லோகத்தில் விவக்ஷிதமான உபாய உபேய ரூபமான அர்த்த த்வயத்தைப் ப்ரதிபாதிக்கையாலே “த்வயம்” என்று பேர் பெற்றது. இப்படியிருக்கையால் உபாயாந்தரங்களிலும் உபேயந்தரங்களிலும் துவக்கற்றவன், இம்மந்த்ரத்துக்குப் பூர்ணாதிகாரி. இம்மந்த்ரம், வாரண ஸமர்ப்பணங்களை அடைவே ப்ரதிபாதிக்கையாலே த்வயமென்று சொல்லப்படுகிறது என்றும் சிலர் சொல்லுவார்கள். இப்படி “ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந்” இத்யாதி மந்த்ராந்தரத்திலும் த்வய சப்த ப்ரயோகத்துக்கு இவையே நிமித்தம்.
– த்வயமானது (த்வயம் என்றால் இரண்டு) இந்த “த்வயம்” என்னும் பெயரை அடைந்தது எப்படி என்றால்: இராமாயணம் அயோத்யாகாண்டம் (2-31-2) - ஸ ப்ராதுச் சரணௌ காடம் – லக்ஷ்மணன் தனது மூத்தவனாகிய இராமனின் திருவடிகளில் சீதையின் முன்னிலையில் விழுந்து உரைக்கத் தொடங்கினான் – என்றுள்ள ச்லோகத்தைத் தொடர்ந்து, இராமாயணம் அயோத்யாகாண்டம் (2-31-27) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா – நீ வைதேகியுடன் சேர்ந்து இந்த மலையின் குகைகளில் இன்பமாக இருப்பீராக; உங்களுக்கு வேண்டிய அனைத்து கைங்கயங்களையும் நான் செய்வேன் – என்று கூறுவதன் மூலம் வெளிப்படுவதான உபாயம் மற்றும் உபேயம் (வழி மற்றும் பலன்) ஆகியவற்றை, தானும் வெளிப்படுத்துவதால் ஆகும். மற்ற உபாயங்களிலும், மற்ற பலன்களிலும் பற்று இல்லாதவனே இந்த த்வயத்திற்கான தகுதி உள்ளவன் ஆவான். தன்னைக் காப்பவனைப் போற்றுவதும், தனது பாரத்தை அவனிடம் சமர்ப்பணம் செய்வதும் என்றுள்ள இரண்டையும் இந்த மந்திரம் வெளிப்படுத்துவதால் இது “த்வயம்” என்று பெயர் பெற்றது என சிலர் கூறுவர். ஸ்ரீமந்நாராயண! ஸ்வாமிந் ந அநந்ய சரணஸ்தவ சரணௌ சரணம் யாத: தவ ஏவ அஸ்மி அஹம் அச்யுத – மஹாலக்ஷ்மியுடன் கூடிய நாராயணா! எனது ஸ்வாமியே! எனக்கு வேறு யாரும் சரணம் என்று அண்டுவதற்கு இல்லை, நீ மட்டுமே எனக்கு அடைக்கலம் ஆவாய், அடியார்களை நழுவவிடாதவனே! – என்பது போன்றுள்ள மந்திரங்களில் கூறப்படுவது போன்றே, இங்கும் பொருள் கொள்ளப்படவேண்டும்.