Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 3)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயம் ச்ருதிகளில் உள்ளதாகும்

மூலம் – இது கடவல்லியிலே பிரியவோதிச் சேர்த்து அநுஸந்திக்க விதிக்கையாலும், பகவச்சாஸ்த்ரத்திலே ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதாதிகளிலே வர்ணோத்தாராதிகளும் பண்ணிப் ப்ரதிபாதிக்கையாலும் ச்ருதி மூலமான தாந்த்ரிக மந்த்ரம். இத்தைப் பூர்வாசார்ய வாக்யமென்று சிலர் சொன்னதுவும், ஆப்தர் உபதேசித்தாரென்று ஆதரிக்கைக்காகவாதல், பரமாசார்யனான ஸர்வேச்வரன் பகவச்சாஸ்த்ரத்திலே அருளிச் செய்கையாலேயாதல் ஆமத்தனை. இதுக்கு ருஷ்யாதிகளும் மூலமந்த்ராதிகளிற்போலே அபேக்ஷமாணர்க்கு மந்த்ர வ்யாகரணாதிகளிற்படியே கண்டு கொள்ளலாம்.

– கடவல்லி என்பதான உபநிஷத்தில் காணப்படும் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் த்வய மந்த்ரம் கூறப்பட்டுள்ளது. அவற்றுக்கு இடையே வேறு சில வாக்கியங்கள் காணப்பட்டாலும், மோக்ஷத்தை விரும்பும் ஒருவன், அந்த இரண்டு பகுதிகளையும் ஒரு மந்த்ரமாகச் சேர்த்துக் கொண்டு, இந்த மந்த்ரத்தை எப்போதும் எண்ணியபடி இருத்தல்வேண்டும் என்று கூறுகிறது. பாஞ்சராத்ரத்தில் உள்ள ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதை போன்றவற்றிலும், இந்த மந்த்ரத்தின் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எடுத்து, “முதல், இரண்டு” என்று வரிசையாக எண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே த்வயம் என்பது ச்ருதி மூலமாக பாஞ்சராத்திற்கு வந்து, அதன் மூலம் நமக்கு வந்தது என்று அறியவேண்டும். த்வயத்தை ஒரு சிலர் பூர்வாசார்யர்கள் உரைத்த வாக்கியம் என்றும் கூறுவர். இதன் காரணம் என்னவென்றால் – ஆசார்யர்கள் உபதேசித்தனர் என்று கூறினால், ஆசார்யர்களிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் இதனை மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடுவார்கள் என்பதாலும் அல்லது அனைவருக்கும் முதல் ஆசார்யனான ஸர்வேச்வரனாகிய நாராயணன் இதனைப் பாஞ்சராத்ரத்தில் அருளிச்செய்ததாலும் – ஆகும். இந்த மந்த்ரத்தின் ரிஷி யார், பீஜம் எது போன்றவற்றை மூலமந்த்ரங்களில் உள்ளது போன்று, இவற்றை அறிய விருப்பம் உள்ளவர்கள், மந்த்ரசாஸ்த்ரங்களிலும் இலக்கண நூல்களிலும் கண்டு அறியலாம்.