Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 127)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரம் அனைத்து பலன்களையும் அளித்தல்
மூலம் – எட்டுமாமூர்த்தி எண் கண்ணன் எண்டிக்கு எட்டிறை எண் ப்ரக்ருதி எட்டு மாவரைகளீன்ற எண் குணத்தோன் எட்டெணுமெண் குண மதியோர்க்கு எட்டு மாமலர் எண் சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம் எட்டு மாகுணம் எட்டெட் டெணுங்கலை எட்டிரத மேலனவும் எட்டுனமே ஸர்வகாரணபூதனுமாய் அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதானுமான ஸர்வேச்வரனுக்கு ப்ரதிபாதகமான திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்திக்கும் மஹாமதிகளுக்கு ஆத்மகுணாதிகளிலும் அஷ்டைச்வர்யாதிகளிலும் யதா மநோரதம் துர்லபமாயிருப்பது ஒன்றுமில்லையென்கிறது. (எட்டு மாமூர்த்தி) – ஆகாசாதி பூதங்களைந்தும் சந்த்ராதித்யர்களும், யஜமாநனும் தனக்கு மூர்த்திகளாக வரம் பெற்று அஷ்டமூர்த்தியென்று பேர் பெற்ற ருத்ரன். (எண் கண்ணன்) – சதுர்முகனாகையாலே எட்டுக் கண்ணுடைய ப்ரஹ்மா. (எண்டிசைக்கு) – எட்டு திக்குகள். (எட்டு இறை) – இந்த்ராதிகளான எட்டு திக்பாலகர்கள். (எண் ப்ரக்ருதி) – அவ்யக்த மஹதஹங்காராதிகளான எட்டுத் தத்த்வங்கள். (எட்டு மாவரைகள்) – எட்டுக் குலபர்வதங்கள். (ஈன்ற எண் குணத்தோன்) – இவையெல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்த குணாஷ்டக விசிஷ்டனான பரமாத்மா. இவனுக்கு எட்டு குணங்களென்கிறது கர்மவச்யத்வ ஜரா மரண சோக க்ஷுத் பிபாஸைகளன்றிக்கே ஒழிகையும், நித்யங்களான போக்யங்களையுடைனாகையும், நினைத்தது முடிக்க வல்லனாகையும். (எட்டெணுமெண் குண மதியோர்க்கு) – இப்படிப்பட்ட ஸர்வேச்வரனுக்கு ப்ரதாந மந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தை ஸார்த்தமாகக் கேட்டு அநுஸந்திக்கும் அஷ்டாங்க புத்தியுடைய அநந்யரான ப்ரதிபுத்தர்க்கு. புத்திக்கு எட்டு அங்கங்களாவன – க்ரஹணம் தாரணம் சைவ ஸ்மரணம் ப்ரதிபாதநம் ஊஹ: அபோஹ: அர்த்தவிஜ்ஞானம் தத்த்வஜ்ஞானோ ச தீ குணா: என்கிறவை
– அனைத்து உயிர்களுக்கும் காரணமாக உள்ளவனும், தாழ்ந்தவை அனைத்திற்கும் எதிர்த்தட்டாக உள்ளவனும், அனைத்துவிதமான திருக்கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனைக் கூறுவதான திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை எப்போதும் சிந்தித்தபடி உள்ள கூர்மையான புத்தி கொண்டவர்களுக்கு ஆத்மகுணங்கள், எட்டுவிதமான ஐச்வர்யங்கள் போன்ற பலவும், அவர்கள் அவற்றை வேண்டும் என்று விரும்பினால் கிட்டுவது கடினமல்ல; அவர்களுக்குக் கிட்டாதது ஏதும் இல்லை. (எட்டு மாமூர்த்தி) – பூமி, நீர், அக்னி, காற்று, ஆகாயம் என்பதான பஞ்சபூதங்கள், சந்த்ரன், சூரியன், யஜ்ஞங்களை இயற்றும் யஜமானன் ஆகிய எட்டு பேரும் தனது சரீரங்களாக இருத்தல் வேண்டும் என்று வரம் வாங்கிய காரணத்தால், இவற்றைத் தனது சரீரமாகக் கொண்டுள்ள ருத்ரன். (எண் கண்ணன்) – நான்கு முகங்கள் உள்ளதால், ஒரு முகத்திற்கு இரண்டு கண்கள் வீதம், எட்டு கண்கள் கொண்ட நான்முகன். (எண்டிசைக்கு) – எட்டு திசைகள். (எட்டு இறை) – எட்டு திசைகளுக்குத் தேவதைகளான இந்த்ரன் முதலான திக்பாலகர்கள். (எண் ப்ரக்ருதி) – அவ்யக்தம், அஹங்காரம், மஹத் மற்றும் பஞ்சபூதங்கள் ஐந்து என்பதான எட்டு தத்துவங்கள். (எட்டு இறை) – இந்த்ரன், அக்னி, யமன் நிர்ருதி , வருணன், வாயு, ஸோமன் (அல்லது குபேரன்) மற்றும் ஈசானன் என்னும் எட்டு திக்பாலகர்கள். (எட்டு மாவரைகள்) – ஹிமவான், நிஷதம், விந்த்யம், மால்யவான், பாரியாத்ரகம், மந்தரம், மலயம் மற்றும் மேரு என்னும் எட்டு பர்வதங்கள். (ஈன்ற எண் குணத்தோன்) – இவை அனைத்தையும் படைத்த எட்டுவிதமான குணங்கள் பொருந்தியதால் தனித்து விளங்கும் பரமாத்மா. பரமாத்மாவின் எட்டு குணங்கள் – கர்மபந்தம், வயோதிகம், மரணம், சோகம், பசி, தாகம் போன்றவை இல்லாமை, எப்போதும் இருக்கின்ற இன்பத்தை உடையவன் மற்றும் எண்ணியதை முடிக்கவல்லவன் என்பவையாகும். (எட்டெணுமெண் குண மதியோர்க்கு) – இப்படிப்பட்ட ஸர்வேச்வரனைக் குறித்துக் கூறும் மந்த்ரங்களில் முதன்மையாக உள்ளதான திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை, அதன் ஆழ்பொருளுடன் அறிந்து, அதனை எப்போதும் சிந்தித்தபடி உள்ள எட்டுவிதமான அங்கங்களுடன் கூடிய புத்தியைக் கொண்டவர்களும், மற்ற எதனையும் நாடாமல் இதனை மட்டுமே சிந்தித்தபடி உள்ளவர்களுக்கு. இங்கு புத்திக்கு உள்ள எட்டுவிதமான அங்கங்கள் – காமந்தகீயம் (1) - க்ரஹணம் தாரணம் சைவ ஸ்மரணம் ப்ரதிபாதநம் ஊஹ: அபோஹ: அர்த்தவிஜ்ஞானம் தத்த்வஜ்ஞானோ ச தீ குணா: - விஷயங்களைப் சட்டென்று உணர்தல், மனதில் அதனை நிலைநிறுத்தல், மீண்டும் மீண்டும் அதனைச் சிந்தித்தல், மற்றவர்களுக்கு உணர்த்துதல், மற்றவர்கள் கூறாதவற்றை அறிதல், மற்றவர்கள் கூறியவற்றில் அவசியம் அல்லாதவற்றை விலக்குதல், விஷயங்களை உள்ளது உள்ளபடி தெளிவாக அறிதல், அவற்றின் உண்மைகளை உணர்தல் – என்பவை ஆகும்.