Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 126)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தின் பெருமைகள்

மூலம் – (iii) யஸ்ய யாவாம்ச்ச விச்வாஸ: தஸ்ய ஸித்தச்ச தாவதீ ஏதாவாநிதி நைதஸ்ய ப்ரபாவ: பரிமீயதே என்கையாலே, தந்தம் விச்வாஸ தாரதர்ம்யத்துக்கு ஈடாக ஸித்தி தாரதர்ம்யம் உண்டானாலும், மஹாவிச்வாஸமுடையார் பக்கல் இத்திருமந்த்ரம் அநவச்சிந்ந ப்ரபாவமாயிருக்கும். இச்ச்லோகத்தில், இன்னாரால் பரிச்சேதிக்க வொண்ணாதென்று விசேஷியாமையாலே “நர நாரணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்” என்கிறபடியே, இத்திருமந்த்ரத்துக்குப் ப்ரவர்த்தகனுமாய்ப் ப்ரதிபாத்யனுமாயிருக்கிற ஸ்வத: ஸர்வஜ்ஞனான நாராயணன் தானும் இதின் ப்ரபாவத்தைப் பரிச்சேத யோக்யமன்றென்று அறியுமத்தனை. இம்மந்த்ரத்துக்கு த்ரஷ்டாவுமாய் தேவதையுமானவன் பக்கலிலே இத்தை ஸார்த்தமாகப் பெற்ற திருமங்கையாழ்வார் “அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம்” என்றருளிச்செய்தார்.

– நாரதீயம் (1-14) - யஸ்ய யாவாம்ச்ச விச்வாஸ: தஸ்ய ஸித்தச்ச தாவதீ ஏதாவாநிதி நைதஸ்ய ப்ரபாவ: பரிமீயதே – ஒருவனுக்குத் திருமந்த்ரத்தில் எந்த அளவு விச்வாஸம் உள்ளதோ, அந்த அளவு அவனுக்கு அதனால் பலன் கிட்டும்; அதன் பெருமையை “இந்த அளவு” என்று அளவிட இயலாது – என்று கூறுவதற்கு ஏற்ப, அவரவர்களுடைய விச்வாஸத்திற்கு ஏற்ப, திருமந்த்ரம் பலன் அளிக்கவல்லது என்றாலும், மஹாவிச்வாஸத்துடன் உள்ளவர்கள் விஷயத்தில் திருமந்த்ரம் அளிக்கவல்ல பலனை அளவிட இயலாதபடியே இருக்கும். இந்த நாரதீய ச்லோகத்தில், திருமந்த்ரத்தின் ப்ரபாவத்தை இன்னாரால் அளவிட்டுக் கூற இயலும் என்று யாரையும் குறிப்பிட்டுக் கூறாத காரணத்தால், பெரியதிருமொழி (10-6-1) - நர நாரணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் – நரனாகவும் நாராயணனாகவும் பதரிகாச்ரமத்தில் நின்று சாஸ்த்ரங்களை ஒத்துள்ள திருமந்த்ரத்தைச் சுருக்காமல் உரைத்தவன் – என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தத் திருமந்த்ரத்தை உபதேசித்தவனும், இத்திருமந்த்ரத்தால் கூறப்படுபவனும் ஆகிய அனைத்தும் அறிந்த நாராயணன், தானே முயன்றாலும், திருமந்த்ரத்தின் பெருமையை அளவிட்டுக் கூறத் தகுதி அற்றவன் என்று தேறுகிறது. இப்படிப்பட்ட உயர்ந்த இத்திருமந்த்ரத்தின் குருவும் தேவதையாகவும் உள்ள நாராயணனிடமிருந்தே இதன் ஆழ்பொருளைக் கற்றுணர்ந்த திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகம் (4) - அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் – அந்தணர்களின் செல்வமான வேதாந்த சாஸ்த்ரத்தில் காணப்படும் ஸர்வேச்வரனை, திருமந்த்ரத்தால் என்றும் மறக்காமல் அனுபவித்தால், நல்வாழ்வு பெறலாம் – என்று அருளிச்செய்தமை காண்க.