Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 123)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தைக் குறித்து நன்றாக அறிந்தவனுக்கு வரும் மேன்மை

மூலம் - இத்திருமந்த்ரத்தில் பாஹ்யகுத்ருஷ்டி மதங்களால் கலக்கவொண்ணாத தெளிவுடையவனை ப்ரஜ்ஞா ப்ராஸாதமாருஹ்ய ஹ்யசோச்ய: சோசதோ ஜநாந் பூமிஸ்தானிவ சைலஸ்தோ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ: ப்ரபச்யதி என்கிறது. “ஜ்ஞாநேந ஹீந: பசுபி: ஸமாந:” என்கிறவிடத்தில் ஞானமென்கிறதுவும் இத்தெளிவை. இப்படித் தெளிந்தவன் ந ப்ரஹ்ருஷ்யதி ஸம்மானே நாவமாநே அநுதப்யதே கங்காஹ்நத இவாக்ஷோப்யோ ய: ஸ பண்டித உச்யதே என்கிறபடியே மாநாவமாநாதிகளிற் கலங்கான். இத்திருமந்த்ரத்தில் யதார்த்த ஞானமும் நிஷ்டையுமுடையவனை ஆதரிக்கும் தேசத்திலும் யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்பிக்ஷ தஸ்கரா: என்கிறபடியே ஒரு தோஷமும் வாராது. இச் ச்லோகத்தால் ராகாதி ரோகாந் ஸததாநுஷக்தாந் அசேஷகாய ப்ரஸ்ருதாநசேஷாந் ஔத்ஸுக்ய மோஹாரதிதாந் ஜகாந யோ அபூர்வ வைத்யாய நமோஸ்து தஸ்மை என்று ஆயுர்வேத வித்துக்கள் ப்ரதாந வ்யாதிகளாக எடுத்த ராகாதிகளும், ஸத்துக்களுக்கு ஸ்ரீயென்று ஓதப்பட்ட ஞான ஸம்பத்தினுடைய ஸங்கோசமும், பாஹ்யதஸ்கரர்க்கு நிலமல்லாத ஆத்மாபஹாராதிகளைப் பண்ணும் மாஹாதஸ்கரரான அஹங்காராதிகளும் நடையாடாவென்றதாயிற்று.

திருமந்த்ரத்துக்கு வேறுவிதமாகப் பொருள் உரைக்கும் மதங்களின் மற்ற கருத்துக்களால் மயங்காமல் உள்ளவனை மஹாபாரதம் சாந்திபர்வம் (150-11) - ப்ரஜ்ஞா ப்ராஸாதமாருஹ்ய ஹ்யசோச்ய: சோசதோ ஜநாந் பூமிஸ்தானிவ சைலஸ்தோ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ: ப்ரபச்யதி – திருமந்த்ரத்தின் ஆழ்பொருள் ஞானம் என்னும் மேல்மாடியில் ஏறியவனும், தன்னைக் குறித்து எதற்கும் சிறிதும் கவலைப்படாதவனும் ஆகிய ஞானம் உள்ள ஒருவன், இப்படிப்பட்ட ஞானம் இல்லாதவர்களை, மலையில் நிற்கும் ஒருவன் கீழே உள்ளவர்களை மிகவும் சிறிய உருவத்தில் காண்பது போன்று, காண்கிறான் – என்றது. நரஸிம்ஹபுராணத்தில் (16-13) - ஜ்ஞாநேந ஹீந: பசுபி: ஸமாந: - ஞானம் அற்றவன் விலங்குகளுக்குச் சமம் - என்று “ஞானம்” என்னும் பதம் மூலமாக, திருமந்த்ரம் குறித்த இத்தகைய தெளிவான ஞானமே கூறப்பட்டது. இப்படியாகத் திருமந்த்ரம் குறித்த தெளிவான ஞானம் உள்ளவன், மஹாபாரதம் உத்யோகபர்வம் (32-33) - ந ப்ரஹ்ருஷ்யதி ஸம்மானே நாவமாநே அநுதப்யதே கங்காஹ்நத இவாக்ஷோப்யோ ய: ஸ பண்டித உச்யதே – மற்றவர்கள் தன்னைப் புகழும்போது மகிழாமலும், இகழும்போது வருந்தாமலும் நின்று, கங்கையின் ஆழத்தில் உள்ள நீர் போன்று கலங்காமல் நிலையாக உள்ளவன் பண்டிதன் எனப்படுகிறான் – என்பதற்கு ஏற்ப, தனக்கு உண்டாகும் புகழ்ச்சி மற்றும் அவமானம் ஆகியவற்றால் கலங்கமாட்டான். இப்படிப்பட்ட திருமந்த்ரத்தைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிந்தவனும், அதிலேயே நிலையாக நிற்பவனும் ஆகிய ஒருவனைப் போற்றிக் கொண்டாடும் இடத்திற்கு, நாரதீயம் (1-20) - யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்பிக்ஷ தஸ்கரா: - திருமந்த்ரத்தைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிந்தவனும், அதிலேயே நிலையாக நிற்பவனும் ஆகிய ஒருவனை ஆதரிக்கும் இடத்தில் வ்யாதி (ஆசை), பஞ்சம் (ஞானம் இன்மை), திருடர்கள் (அஹங்காரம், மமகாரம்) இருக்கமாட்டனர் – என்று கூறுவதற்கு ஏற்ப, எந்தவிதமான தோஷமும் உண்டாகாது. மேலும் இந்த நாரதீய ச்லோகம் வேறொரு கருத்தையும் உணர்த்துகிறது; ராகாதி ரோகாந் ஸததாநுஷக்தாந் அசேஷகாய ப்ரஸ்ருதாநசேஷாந் ஔத்ஸுக்ய மோஹாரதிதாந் ஜகாந யோ அபூர்வ வைத்யாய நமோஸ்து தஸ்மை – எப்போதும் உள்ளதும், சரீரம் முழுவதும் பரவியதும், அளவு கடந்த மகிழ்ச்சி – அறியாமை – மனநிறைவின்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதும் ஆகிய ராகம் (ஆசை) போன்ற நோயை, அடியுடன் அழிக்கவல்ல அதிசயமான வைத்தியனான பகவானுக்கு நமஸ்காரம் – என்று ஆயுர்வேதத்தை நன்றாக அறிந்தவர்கள், முதன்மையான நோயாகக் கூறிய ஆசை போன்றவையும், ஸாதுக்களுக்குச் செல்வம் என்று கொண்டாடப்படும் ஞானம் என்னும் செல்வத்தின் குறைவும், காணும் பொருள்கள் அனைத்தையும் திருடுகிறவர்கள் போன்று ஸர்வேச்வரனுடைய ஆத்மாவைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் அஹங்காரம் போன்ற திருடர்களும், திருமந்த்ரத்தைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிந்தவனும், அதிலேயே நிலையாக நிற்பவனும் ஆகிய ஒருவனைப் போற்றிக் கொண்டாடும் இடத்தில் இருக்கமாட்டனர் என்று கருத்து.