Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 120)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
பத்தாவதாக உள்ள கருத்துக்கு வேதாந்த சாஸ்த்ரம் அதிகமாகப் பொருந்துதல்
மூலம் – இந்த யோஜநைக்கு வேதாந்த சாஸ்த்ரத்தில் தத்த்வோபாய புருஷார்த்தங்களை நிரூபித்த க்ரமத்தோடு சேர்த்தியுண்டு. எங்ஙனேயென்னில் – முதல் இரண்டு அத்யாயத்தாலே பராவரதத்த்வங்களைத் தெளிவித்துத் த்ருதீயத்தாலே பராவரதத்த்வங்களோடே கூடின உபாயம் சொல்லிச் சதுர்த்தத்தாலே பலம் சொல்லியிறே சாரீரக சாஸ்த்ரம் தலைக்கட்டிற்று. அங்கு முதல் இரண்டு அத்யாயத்திற் சொன்ன பராவரதத்த்வ ஸ்வரூபமும், நான்காம் அத்யாயத்திற் சொன்ன பலமும் ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கும் துல்யம். மூன்றாம் அத்யாயத்தில் வைராக்ய பாதத்திலும், உபலிங்க பாதத்திலும் சொன்ன ஸம்ஸார தோஷமும் சரண்யனுடைய ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநத்வமும் முமுக்ஷுவான இவனுக்கு அவச்யம் ஜ்ஞாதவ்யம். மூன்றாம் பாதத்தில் உபாயமாகச் சொன்ன உபாஸந பேதங்களை அவற்றுக்கு அதிகாரிகளானவர்கள் அநுஷ்டிக்கக் கடவர்கள். அகிஞ்சனனான அதிகாரி தனக்கு அவறின் அருமையைக் கண்டு “நாநா சப்தாதி பேதாத்”, “விகல்போ அவிசிஷ்ட பலத்வாத்” என்கிற அதிகரணங்களிற் சொன்ன கட்டளையிலே வித்யாந்தர வ்யாவ்ருத்தமாய் அவை கொடுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்குமிடத்தில் நிரபேக்ஷமுமான ந்யாஸத்தையே பற்றக் கடவன். நான்காம் பாதத்திற் சொன்ன வர்ணாச்ரம தர்மங்களை உபாஸநநிஷ்டன் “ஸஹகாரித்வேந ச” என்கிறபடியே வித்யாபரிகரமாக அநுஷ்டிக்கும். ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டன் “விஹிதத்வாத் ஆச்ரமகர்ம அபி” என்கிறபடியே பகவதாஜ்ஞா ஸித்தமென்று ஸ்வயம் ப்ரயோஜனமாக அநுஷ்டிக்கும். இப்படியானால் சாரீரகத்திற் சொன்ன ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களெல்லாம் ஸ்ரீமதஷ்டாக்ஷராந்த:ஸ்தங்கள். இதில் அர்த்த பஞ்சகாதிகள் கிடக்கிற வகுப்பெல்லாம் கீழே சொன்னோம்.
– மேலே இறுதியாகக் கூறப்பட்ட (பத்தாவது) கருத்துக்கு வேதாந்த சாஸ்த்ரத்தில் தத்வம், உபாயம், புருஷார்த்தம் ஆகியவற்றுக்கான விளக்கங்களுடன் ஒற்றுமை உண்டு. எப்படி? ப்ரஹ்மஸூத்திரத்தின் முதல் இரண்டு அத்யாயங்களில் உயர்ந்த தத்வம் (ப்ரஹ்மம்), ப்ரஹ்மத்தைக் காட்டிலும் தாழ்ந்த தத்வம் ஆகியவற்றைத் தெளிவாக்கிய பின்னர், மூன்றாம் அத்யாயத்தில் உபாயத்தைக் கூறி, அதற்கான அதிகாரிகளின் தகுதி மற்றும் அங்கங்கள் விளக்கப்படுகின்றன. நான்காம் அத்யாயத்தில் ப்ரஹ்மத்தை அனுபவித்தல் என்னும் பலன் கூறப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. முதல் இரண்டு அத்யாயங்களில் கூறப்பட்டதான உயர்ந்த தத்வம் மற்றும் தாழ்ந்த தத்வம் ஆகியவற்றின் ஸ்வரூபம் மற்றும் நான்காம் அத்யாயத்தில் கூறப்பட்டதான பலன் ஆகிய இரண்டும், ப்ரபத்தியை நேரடியான சுதந்திர உபாயமாகக் கொண்டவனுக்கு ஒன்றே ஆகும். ஸம்ஸாரத்தில் உள்ள தோஷங்களை விளக்குவதான மூன்றாம் அத்யாயத்தில் உள்ள வைராக்ய பாதம் மற்றும் உபயலிங்க பாதம் ஆகிய இரண்டிலும் கூறப்பட்டவையும், அனவரும் சரணம் அடையும்படியாக உள்ள ஸர்வேச்வரனுடைய தாழ்வுகள் அனைத்திற்கும் எதிர்த்தட்டாக உள்ள தன்மை மற்றும் திருக்கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ள தன்மை ஆகியவையும், முமுக்ஷு அவசியம் அறிந்து கொள்ளவேண்டியதாகும். மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் பாதத்தில் உபாயமாகக் கூறப்பட்ட பலவிதமான உபாஸனைகள், பக்தியை உபாயமாகக் கொண்ட அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டியதாகும். இத்தகைய பக்தியைக் கைக்கொள்ளச் சக்தியற்றவனும், மற்ற எந்தவிதமான உபாயங்களும் அற்ற ஒருவன், இத்தகைய பக்தி உபாயங்கள் அனைத்தும் அவனால் கைக்கொள்ள இயலாதவை என்று உணர்ந்து, ப்ரஹ்மஸூத்ரம் (3-3-56) - நாநா சப்தாதி பேதாத் – ப்ரஹ்மவித்யைகளுடைய பெயர்கள் வேறுபட்டுள்ளதால் அவை வெவ்வேறானவை – என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (3-3-57) - விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் – ப்ரஹ்மவித்யைகள் அனைத்தும் மோக்ஷம் மட்டுமே பலனாக உள்ளதால் அவற்றில் எதனை வேண்டுமானாலும் கைக்கொள்ளலாம் – என்றும் கூறப்படுவதான வித்யைகள் மற்றும் அவற்றின்பலனாகிய மோக்ஷம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டதான ந்யாஸத்தை (சரணாகதி) மட்டுமே உபாயமாகக் கொள்ளக்கடவன். நான்காம் அத்யாயத்தில் கூறப்பட்டுள்ள உபாஸனையை (பக்தி) கைக்கொள்ளும் ஒருவன், தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களை ப்ரஹ்மஸூத்ரம் (3-4-33) - ஸஹகாரித்வேந ச – பக்தியோகம் செய்பவன் தனது வர்ணாச்ரம தர்மங்களை பக்தியோகத்தின் அங்கமாக இயற்றவேண்டும் – என்பதற்கு ஏற்ப, வித்யைக்கு அங்கமாக இயற்றக்கடவன். யார் ஒருவன் ப்ரபத்தியை நேரடி மார்க்கமாகக் கொள்கிறானோ அவன் தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களை, ப்ரஹ்மஸூத்ரம் (3-4-32) - விஹிதத்வாத் ஆச்ரமகர்ம அபி – ப்ரஹ்மவித்யைக்கு அங்கமாக உள்ள யஜ்ஞம் போன்ற கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளதால், அவை க்ருஹஸ்தாச்ரமத்தில் உள்ளவர்களாலும் இயற்றப்பட வேண்டியதே ஆகும் – என்பதற்கு ஏற்ப, அவை பகவானின் ஆணைகள் என்று கொண்டு, அந்தக் கர்மங்களுக்காக (எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல்) இயற்றக்கடவன். இவ்விதம் புரிந்துகொண்டால், சாரீரக சாஸ்த்ரத்தில் விளக்கப்பட்டுள்ள ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் ஆகியவை திருமந்த்ரத்திலும் பொதிந்துள்ளதை உணரலாம். இதில் உள்ள அர்த்தபஞ்சகம் குறித்து நான்காம் அத்யாயமான “அர்த்தபஞ்சகாதிகாரம்” கூறிற்று.