Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 117)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்

மூலம் – (8) இப் புருஷார்த்த ப்ரார்த்தனை இச்சாமாத்ரமாயிருக்கை யன்றிக்கே கோப்த்ருத்வவரண ரூபையாகையாலே சேஷம் உபலக்ஷிதமாகவுமாம். அப்போது திருமந்த்ரம் ஸ்வரூபோபாய ப்ரதாநமாயிருக்கும். அயந சப்தத்தில் கரண வ்யுத்பத்தியாலே ஈச்வரனுடைய உபாயத்வமும் ஸித்திக்கும்.

– (8) புருஷார்த்தத்தை வேண்டுதல் என்பது தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ப்ரார்த்தனை அல்ல, ஸர்வேச்வரனிடம் தன்னை சரணாகதனாக ஏற்கவேண்டும் என்று விண்ணப்பித்தலே ஆகும் என்பதால் – அதற்கான அங்கங்கள் வெளிப்படையாகக் கூறப்படாமல், மறைமுகமாக உள்ளது. இவ்விதம் கொள்ளும்போது திருமந்த்ரமானது ஸ்வரூபம் மற்றும் உபாயத்தைக் கூறுவதாகும் (மற்ற உபாயத்தை இயற்ற இயலாத எனக்கு, அந்த உபாயத்தின் இடத்தில் நின்று எனக்கு விருப்பம் அல்லாதவற்றை விலக்கவேண்டும்; எனக்கு விருப்பமான கைங்கர்யத்தையும் அளிக்கவேண்டும்). “நாராயணாய” என்பதை “நாராணாம் அயநம் யேன” என்று பிரிக்கும்போது, ”அயந” என்னும் பதம் “உபாயம்” என்னும் பொருளை அளிப்பதாகும்.