Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 111)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு
மூலம் – (7) இங்ஙனன்றிக்கே ப்ரணவம் ஸ்வரூப பரமாய் நமஸ்ஸிலே அநிஷ்ட நிவ்ருத்தி ப்ரார்த்தனையாய் அநிஷ்டம் நிவர்த்தித்தால் வரும் புருஷார்த்தத்தை நாராயணாய ஸ்யாம் என்று கணிசிக்கிறதாகவுமாம். இந்நமஸ்ஸுக்கும் இப்படி த்வயத்தில் நமஸ்ஸுக்குப் போலே விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனையிலே தாத்பர்யமான யோஜநா விசேஷமும், ப்ரணவோதித தச்சேஷ பாவோஹம் நிஜகர்மபி: அஹங்கார மமத்வாப்யாம் அபிபூதோப்யத: பரம் தச்சேஷத்வாநுஸந்தான பூர்வ தச்சேஷவ்ருத்திக: பூயாஸமித்யமும் பாவம் வ்யநக்தி நம இத்யத: என்று பட்டர் நித்யத்திலே ப்ரதர்சிதம். ஆகையாலே “அஹம் ந மம ஸ்யாம்” என்றாதல் “ந மம கிஞ்சித் ஸ்யாத்” என்றாதல் வாக்யாந்வயமாய். இத்தாலே “அஸ்ய ஜீவாத்மநோ அநாத்யவித்யா ஸம்சித புண்யபாபரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸுர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேச க்ருத தத்தத் ஆத்மாபிமான ஜனித அவர்ஜநீய பவபய வித்வம்ஸநாய” என்றும், “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்றும் சொல்லுகிற அவித்யா கர்ம ததுபய வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தாதி ரூபமான ஸர்வாநிஷ்டமும் அத்யந்த நிவ்ருத்தமாக வேணுமென்று அபேக்ஷித்ததாயிற்று.
– இவ்விதம் அல்லாமல் திருமந்த்ரத்தை மூன்று வாக்கியங்களாகக் கொண்டால், ப்ரணவம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தை விளக்குவதாகவும், “நம:” என்பது விருப்பம் அல்லாதவற்றை நீக்கித் தரவேண்டும் என்னும் ப்ரார்த்தனையாகவும், இவ்விதம் விருப்பம் அல்லாதவை நீங்கியதன் காரணமாகக் கிட்டும் புருஷார்த்தம் என்பது நாராயணாய ஸ்யாம் – நாராயணனுக்காக இருக்கக் கடவேன் – என்பதால் உணர்த்தப்படுவதாகவும் உள்ளது. த்வய மந்த்ரத்தில் உள்ள “நம:” என்பது எவ்விதம் தடைகளை நீக்க உதவும் விண்ணப்பம் ஆகிறதோ அதே போன்று திருமந்த்ரத்திலும் உள்ளது என்பதைக் கீழே காணப்படும் ஸ்வாமி பராசரபட்டரின் நித்யம் என்னும் க்ரந்தத்தில் உள்ள வரிகள் மூலம் அறியலாம் - ப்ரணவோதித தச்சேஷ பாவோஹம் நிஜகர்மபி: அஹங்கார மமத்வாப்யாம் அபிபூதோப்யத: பரம்; தச்சேஷத்வாநுஸந்தான பூர்வ தச்சேஷவ்ருத்திக: பூயாஸமித்யமும் பாவம் வ்யநக்தி நம இத்யத: - “ப்ரணவத்தில் கூறப்பட்டது போன்று அடியேன் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ளேன். என்னுடைய கர்மங்களின் விளைவால் இதுவரை ‘நான், என்னுடையது’ என்பதான அஹங்காரம் மற்றும் மமகாரங்களால் பீடிக்கப்பட்டிருந்தேன். இனி அவனுக்கு மட்டுமே அடிமை என்று கொண்டு, அவனுக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்வேன்” என்னும் பொருளையே “நம:” என்பது கூறுகிறது – என்றது காண்க. ஆகவே “அஹம் ந மம ஸ்யாம் – நான் என்னுடைய அடிமை அல்லன்” அல்லது “ந மம கிஞ்சித் ஸ்யாத் – நான் சிறிதளவும் என்னுடையவன் அல்லன்” என்பது போன்ற வாக்கியங்கள் “எனக்குத் தடைகள் இல்லாமல் போகட்டும்” என்னும் விண்ணப்பத்தையே குறிப்பதாகின்றன. இதன் மூலம் வேதார்த்த ஸங்க்ரஹம் - அஸ்ய ஜீவாத்மநோ அநாத்யவித்யா ஸம்சித புண்யபாபரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸுர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேச க்ருத தத்தத் ஆத்மாபிமான ஜனித அவர்ஜநீய பவபய வித்வம்ஸநாய – எல்லையற்ற காலமாக தொடர்ந்தபடி உள்ள அறியாமை காரணமாக ஜீவாத்மாவுக்குப் புண்ணிய பாவங்கள் ரூபமாகக் கர்மங்கள் உண்டாகின்றன; இந்தக் கர்ம வெள்ளம் காரணமாக நான்முகன் உள்ளிட்ட தேவர்கள், மனிதர்கள், விலக்குகள், தாவரங்கள் என்பதான நான்குவிதமான சரீரங்களில் ஜீவன் ப்ரவேசிக்கிறான்; பின்னர் அந்தந்த சரீரங்களில் உள்ளதற்கு ஏற்ப, தான் அந்தச் சரீரமே என்று எண்ணியவனாக, விலக்க இயலாத ஸம்ஸார பயத்தை அடைகிறான் – என்றும், திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப வருவதான “அறியாமை, கர்மம்” என்னும் இரண்டும், இந்த இரண்டின் காரணமாக உண்டாகும் ருசியும், இந்த உலகத்துடன் கொள்ளும் தொடர்பு காரணமாக உண்டாகும் அனைத்துவிதமான விருப்பம் அற்ற நிலைகளும் அடியுடன் நீங்கவேண்டும் என்னும் விருப்பத்தைக் கூறியதாயிற்று.