Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 109)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு
மூலம் – ஸர்வம் பரவசம் துக்கம் இத்யாதிகள் தனக்குப் ப்ராப்தமல்லாத க்ஷுத்ர விஷயத்திலே கர்மபலமாக வருகிற பாரவச்யம் துக்க காரணமென்கின்றன. பகவத் பாகவத விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆத்மா அபிமான அநுகுண புருஷார்த்த வ்யவஸ்தையாலே நிரதிசய ப்ரீதிகாரணம். இங்கு ததீயரென்கிறது ததீயத்வ வ்யவஸாய ரஸமுடையவர்களை. நாரங்களாலே விசிஷ்டனான நாராயணனைப் பற்றக் கைங்கர்யத்தை அபேக்ஷிக்கும்போது விசேஷணங்களான நாரங்களையும் பற்றக் கைங்கர்யம் அபேக்ஷிக்கப்பட்டதா மென்னுமிடம் ந்யாய ஸித்தமாகையாலே இங்கே ததீய கைங்கர்யம் ஸித்திக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள். இப்படி விசேஷணத்வமே ப்ரயோஜனமானால் நார சப்தார்த்தங்களாக இங்கு விவக்ஷிதங்களான ப்ரஹ்மாதி தேவதாந்தரங்களையும் பகவத் த்வேஷிகளையும் பச்வாதிகளையும் பற்றக் கைங்கர்யாபேக்ஷை பண்ணிற்றாம். நரபதியைப் பற்றக் கைங்கர்யத்தை அபேக்ஷித்தான் என்றால் நரரைப் பற்றக் கைங்கர்யம் அபேக்ஷிதமாகாதாப் போலே இங்கும் ந்யாய மாத்ரத்தால் நாரங்களைப் பற்றக் கைங்கர்யாபேக்ஷை ஸித்தியாது. ஆனபின்பு ப்ரமாண முகத்தாலே ஸ்வாமியினுடைய அபிமதம் செய்ய அபேக்ஷிக்கிறானாகையாலே அவனுக்குப் ப்ரியதமராயிருக்கிற சேஷத்வ ஞானமுடைய அநந்ய ப்ரயோஜனரைப் பற்றக் கைங்கர்யம் அபேக்ஷிதமாமித்தனை. அநுபாவ்யதையிலும் நார சப்தார்த்தமான ஸர்வமும் ப்ரவிஷ்டமாமென்னுமிடமும் ப்ரமாண பலத்தாலே வந்ததத்தனை.
– தன்னுடைய ஸ்வரூபத்திற்கு ஏற்கத் தகாததாகவும், பூர்வ கர்மவினைகளின் காரணமாக வருவதும் ஆகிய தாழ்ந்தவர்களைச் சார்ந்திருத்தல் என்னும் நிலையானது, துக்கத்திற்கான காரணமாகிறது என்பதை மநுஸ்ம்ருதி (4-160) – ஸர்வம் பரவசம் துக்கம் – மற்றவர்க்கு வசப்பட்டிருத்தல் என்பது துக்கத்தின் காரணம் – என்றது காண்க. பகவானுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் வசப்பட்டிருத்தல் என்பதே ஆத்ம ஸ்வருபத்தை நன்கு அறிந்த ஒருவனுக்கு உன்னதமான புருஷார்த்தம் என்பதால், அவ்விதம் பகவானையும் அடியார்களையும் சார்ந்திருத்தல் என்னும் நிலையானது, எல்லையற்ற மகிழ்ச்சிக்கான காரணமாகிறது. இங்கு “ததீயர்” என்றால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதில் எல்லையற்ற ஆசை கொண்டவர்கள் ஆவர். நாரங்கள் என்பதான ஜீவாத்மாக்களுடன் கூடிய நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பதை விண்ணப்பம் செய்யும்போது, அவனுடன் கூடி உள்ள ஜீவாத்மாக்களுக்கும் கைங்கர்யம் செய்ய விரும்புதல் நேரடியான நியாயம் என்பதால், அவனுடைய அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பது இயல்பாகவே ஸித்திப்பதாகும் என்று சிலர் கூறுவர். ஆனால், இந்த ந்யாயத்தின்படி அனைத்து ஜீவாத்மாக்களும் நாராயணனுடன் கூடியுள்ள நாரங்கள் என்பதால், அனைவருக்கும் கைங்கர்யம் செய்தல் என்பதை விண்ணப்பித்தால், “நார” என்னும் பதம் மூலம் கூறப்படும் நான்முகன் போன்ற மற்ற தெய்வங்கள், பகவானிடம் விரோதம் காண்பிப்பவர்கள், விலங்குகள் போன்ற அனைத்திற்கும் கைங்கர்யம் செய்தலை விண்ணப்பித்தல் என்றாகிவிடும் அல்லவோ? மக்களின் பதியாகிய அரசனுக்குச் சேவை செய்ய விரும்பினால், அந்த மக்களுக்கும் சேவை செய்தல் என்பது அவசியம் இல்லை என்னும் ந்யாயம் போன்றே, இங்கும் நாரங்களான அனைவருக்கும் கைங்கர்யம் செய்ய விண்ணப்பித்தல் என்பது பொருந்தாது. ஆகவே ஒருவன் தனது எஜமானனாகிய நாராயணனுக்கு எது மகிழ்வை அளிக்கும் என்று அறிந்து அதன்படி தகுந்த ப்ரமாண வாக்கியங்களின் அடிப்படையில் கைங்கர்யம் செய்ய விரும்பும்போது, யார் நாராயணனுக்கு ப்ரியமாக உள்ளனரோ (அல்லது நாராயணனிடம் ப்ரியமாக உள்ளனரோ) அல்லது நாராயணனுக்கு மட்டுமே அல்லாது வேறு யாருக்கும் அடிமையாக இல்லாமல் உள்ளனரோ அல்லது நாராயணன் அல்லாமல் வேறு பலன் ஏதும் இல்லை என்று உள்ளனரோ, இப்படிப்பட்டவர்களுக்கும் கைங்கர்யம் செய்யவே விரும்புகிறான். அவனை அனுபவிக்க முழுத் தகுதி உள்ள முக்தி பெற்ற நிலையிலும், “நார” என்னும் பதம் மூலம் உணர்த்தப்படுவதான அங்குள்ள ஆனந்தங்கள் போன்ற பலவும் பகவத் அனுபவத்திலேயே அடங்கிவிடுவதைக் காண்பிக்கப் பல ப்ரமாண வாக்கியங்கள் உள்ளன.