Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 107)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு
மூலம் – இங்கு இவன் கைங்கர்யமொழியப் பண்ணும் வ்யாபாரங்களில் பகவதாஜ்ஞைக்குப் பொருந்தாதவை எல்லாம் ஏதேனுமொரு ப்ரதிகூல பலத்தைக் கொடுக்கும். பகவதனுஜ்ஞாதங்களான காம்யங்களில் ஸ்வர்க்க பச்வாத்யர்த்தங்க ளானவையெல்லாம் அநேக தோஷதுஷ்டங்களான அநுகூல ஆபாஸங்களைக் கொடுத்து அம்முகத்தாலே பாதகங்களாம். ஆகையாலே முமுக்ஷுவுக்கு த்ரைவர்காந் த்யஜேத் தர்மான் என்கிறபடியே ப்ரயோஜநாந்தர ஹேதுக்களைவிட்டு பக்தி தத்த்வ ஜ்ஞானங்களையும் பகவத் பாகவத ஸம்ருத்தியையும் பற்றச் செய்யும் காம்யங்களான பகவத் தர்மங்கள், ஸாதனமாக அநுஷ்டிக்கச் செய்தேயும் பந்தகங்களல்லாமையாலே உசிதமான கைங்கர்ய கோடியிலே சேர்ந்து கிடக்கும்.
– பகவத் கைங்கர்யம் அல்லாத செயல்களைச் செய்யும்போது, அவை ஸர்வேச்வரனுடைய ஆணைகளை மீறுவதாக உள்ளபோது, அந்தச் செயல்கள் ஏதேனும் தகாத விளைவுகளை உண்டாக்கும். பகவானின் ஆணைகளுக்கு உட்பட்ட செயல்களான சில காம்யகர்மங்கள் ஸ்வர்க்கம், பசு போன்றவற்றை அளித்து, இன்பம் பயப்பது போன்று தோன்றினாலும், அவை சில தகாத பலன்களையும் அளிப்பதாகும்; ஆகவே அவையும் பாதகங்களே ஆகும். ஆக, ஸ்ரீவிஷ்ணுபுராணம் - த்ரைவர்காந் த்யஜேத் தர்மான் – தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றுக்கு உபாயமாக உள்ள தர்மங்களைக் கைவிடவேண்டும் – என்பதற்கு ஏற்றபடி, மோக்ஷத்தில் விருப்பம் உள்ள முமுக்ஷு ஒருவன், மற்ற பலன்களை அளிக்கக் காரணமாக உள்ள செயல்களைக் கைவிட்டு, பக்தி மற்றும் உண்மையான ஞானம் ஆகியவற்றை அளிக்கவல்ல செயல்களையும், பகவத் பாகவத மேன்மையை வளர்க்கும் செயல்களையும் செய்தல் வேண்டும். இவையும் மோக்ஷம், ஞானம் என்பதான விருப்பங்களின் அடிப்படையில் உள்ள செயல்களுக்கு உபாயமாக உள்ளபோதிலும், ஸம்ஸார பந்தத்தை உண்டாக்காது என்பதால், கைக்கொள்ள ஏற்றதான கைங்கர்யங்கள் என்றே ஆகின்றன.