Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 106)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு
மூலம் – த்ரைகுண்யம் ஷட்குணாத்யம் ச த்விதான்னம் பரிகீர்த்திதம் த்ரைகுண்யமன்னம் பத்தானாம் இதரேஷாமதேதரத் என்கிற ஷட்குணாத்யமான அன்னமாவது பகவத் குணாநுபவம், அதடியாக வருகிற போக்யதம கைங்கர்ய விசேஷங்களாகவுமாம். “போகமாத்ர ஸாம்யலிங்காச்ச” என்கிறபடியே முக்ததசையில் பரமஸாம்யம் போகத்திலும் ஜ்ஞாநத்திலுமாகையால் அப்போதும் ஸ்வரூபாநுபந்தியான சேஷத்வத்துக்கும் இதின் பலமான கைங்கர்யத்துக்கும் விரோதமில்லை. முமுக்ஷு தசையிலும் முக்தி தசையிலும் உண்டான அஹங்க்ரஹம் சரீராத்மபாவத்தாலே என்று பாஷ்யாதிகளிலே ஸமர்த்திதமாகையால் இவ்வஹங்க்ரஹம் பரார்த்த காஷ்டையடியாக வந்ததிறே. இப்படி முக்த தசையில் வரும் கைங்கர்யம் ஸ்வத:ப்ராப்தமாய் த்வந்த்வரஹிதமாய் நிரந்தரமாய் அநவச்சிந்நமாயிருக்கும். முமுக்ஷு தசையில் ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பண்ணும் கைங்கர்யம் ஸ்க்ருத விசேஷோபாதிகமாய் த்வந்த்வதிதிக்ஷாயுக்தமாய் நித்ராதிகளாலே அந்தரிதமாய் அவச்சிந்ந ரஸமாயிருக்கும்.
– லக்ஷ்மீ தந்த்ரம் - த்ரைகுண்யம் ஷட்குணாத்யம் ச த்விதான்னம் பரிகீர்த்திதம் த்ரைகுண்யமன்னம் பத்தானாம் இதரேஷாமதேதரத் – அன்னம் என்பது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களால் ஆனது அல்லது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களால் ஆனது என்று இருவகைப்படும்; முதலாவது வகை பந்தப்படுத்தப்பட்ட ஜீவாத்மாக்களுக்கும், இரண்டாவது வகை முக்தர்களுக்கும் உடையதாகும் – என்று கூறுவது காணலாம். இங்கு ஆறுவகையான தன்மைகள் கொண்ட அன்னம் என்பது பகவானின் ஆறு குணங்களையும் அனுபவித்தல், அந்த அனுபவம் மூலமாக வருகின்ற இன்பமும் கைங்கர்யமும் ஆகும். ப்ரஹ்மஸூத்ரம் (4-4-21) - போகமாத்ர ஸாம்யலிங்காச்ச - ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடனான ஒற்றுமையைக் கூறுவதால், ஜகத்வ்யாபாரம் (ஸ்ருஷ்டி முதலான செய்கைகள்) இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐச்வர்யம் ஆகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, முக்தி அடைந்த நிலையில் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் ஞானம், ஆனந்தம் போன்றவற்றில் மட்டுமே ஒற்றுமை உண்டு என்று கொள்ளவேண்டும். அப்படிக் கொண்டாலும், தனது இயல்பாகவே ஜீவாத்மா ஸர்வேச்வரனுக்கு அடிமை என்பதிலும், அதன் காரணமாக அவன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதிலும் எந்த விரோதமும் இல்லை. முக்தி பெறவேண்டும் என்னும் ஆசையுடன் கூடிய நிலையிலும், முக்தி அடைந்த நிலையிலும், “நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன்” என்னும் எண்ணமானது, “நான் ப்ரஹ்மத்தின் சரீரம் ஆவேன்” என்று எண்ணுதலே ஆகும் என ஸ்ரீபாஷ்யத்திலும் மற்ற க்ரந்தங்களிலும் கூறப்பட்டது. ஆகவே “நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன்” என்னும் எண்ணமானது, ஜீவாத்மா என்னும் சரீரம் அதன் ஆத்மாவாகிய ப்ரஹ்மத்தையே அண்டி உள்ளது என்றும், ப்ரஹ்மத்தின் கைங்கர்யத்திற்காகவே உள்ளது என்றும் உள்ள தன்மையாலேயே தோன்றுகிறது. முக்தி அடைந்த நிலையில் உண்டாகும் பகவத் கைங்கர்யம் என்பது ஆத்மாவுக்கு அதன் இயல்பான தன்மையாலேயே ஏற்படுகிறது; அது சுக-துக்கம் போன்று இரட்டையாக வரும் நிலைகள் அற்றதாக உள்ளது; எப்போதும் உள்ளதாகவும், எல்லையற்ற ஆனந்தம் உண்டாக்குவதாகவும் உள்ளது. ஆனால் முக்தி அடையவேண்டும் என்னும் ஆசையுடன் கூடிய நிலையில் (உயிர் வாழும்போது), தன்னுடைய பலனுக்காகச் செய்கின்ற பகவத்கைங்கர்யங்கள் அனைத்துமே முற்பிறவிகளில் செய்த புண்ணியகர்மங்களுடைய பலனால் உண்டானவையாகவும், சுக-துக்கம் போன்று இரட்டையாக வரும் நிலைகளுடன் கூடியதாகவும், உறக்கம் போன்ற தடைகளுடன் கூடியதால் அளவுள்ள ஆனந்தம் அளிக்கவல்லதாகவும் மட்டுமே இருக்கும்.