Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 102)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இரண்டு வாக்கியமாகக் கொண்ட மூன்று கருத்துக்கள்
மூலம் – (5) வாக்யந்தோறும் ஒரு ப்ரார்த்தநா பதத்தை அத்யஹரித்துத் திருமந்த்ரம் முழுக்க த்வயத்தில் உத்தரகண்டம் போலே இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி ரூப புருஷார்த்த ப்ரார்த்தநா பரமாகவும் அநுஸந்திப்பார்கள். அப்போதும் ஸ்வரூபாநுஸந்தாநம் இதிலே அந்தர்கதம். ஸ்வரூபமாத்ர பரமானபோதும் புருஷார்த்த விசேஷம் ஸூசிதம். அதினுபாயமும் ப்ரார்த்தனையும் தத்தத் ப்ரமாண வசத்தாலே வரும். இம்மந்த்ரோத் பாத்யங்களான சேஷத்வஜ்ஞாநாதிகள் முன்பு ப்ராப்தங்களல்லாமையாலே இம்மந்த்ரம் முழுக்கப் ப்ராப்ய பரமென்றது அந்யபரம். எங்ஙனேயென்னில், ப்ராப்ய பரமென்றது ப்ராப்ய ப்ரதிபாதகம் என்றபடியன்று. சப்தத்தால் உத்பாத்யமான ஜ்ஞாநம் சப்தத்துக்குப் ப்ரதிபாத்யமன்றிறே.
– திருமந்த்ரத்தின் இரண்டு வாக்கியங்களிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு விண்ணப்பத்தை உரைப்பதாகக் கொள்ளலாம் (இப்படிக் கொண்டால் திருமந்த்ரம் – “அ” என்னும் அக்ஷரம் மூலம் கூறப்படும் நாராயணனுக்கு நான் கைங்கர்யம் செய்வேனாக, இதற்கு எந்தவிதமான தடையும் உண்டாகாமல் இருக்கட்டும் – என்ற பொருள் தருகிறது). இவ்விதம் கொண்டால் திருமந்த்ரம் முழுவதும் நாம் விரும்புவதை அளிப்பதாகவும், விருப்பம் இல்லாதவற்றை விலக்குவதாகவும் ஆகிறது என்று இரண்டு உயர்ந்த பலன்களை அளிப்பதாகக் கொள்வர். இவ்விதம் கொள்ளும்போதும் ஆத்மஸ்வரூபத்தின் தன்மையானது மறைமுகமாகக் கூறப்படுகிறது. மேலே மூன்றாவது சிந்தனையின்படி திருமந்த்ரமானது ஆத்மஸ்வரூபத்தை மட்டுமே விளக்குவதாகக் கொண்டாலும், மறைமுகமாக அது புருஷார்த்தத்தையும் குறிக்கிறது. திருமந்த்ரத்தின் உபாயமாகும் தன்மையும், அது விண்ணப்பமாகும் தன்மையும் ப்ரபத்திக்கான ப்ரமாண வாக்கியங்கள் மூலம் வெளிப்படுகின்றன. பொதுவாகவே இந்தத் திருமந்த்ரம் மூலம் உண்டாகின்ற ஆத்மஸ்வரூபம், உபாயம் மற்றும் புருஷார்த்தம் குறித்த ஞானங்கள், திருமந்த்ரத்தை அறிவதற்கு முன்பு உண்டாவதில்லை. ஆகவே இவற்றைக் குறித்த ஞானம் உண்டாதலே ப்ராப்யம் (அடையவேண்டிய இலக்கு) என்றும், இவற்றை உண்டாக்கும் திருமந்த்ரம், ப்ராப்யபரம் (இந்த மூன்றைக் குறித்த ஞானத்தை உண்டாக்குவதைத் தனது இலக்காகக் கொண்டது) என்றாகிறது. ஆனால் திருமந்த்ரம் இவற்றைக் குறித்த ஞானத்தை மட்டுமே உண்டாக்குகிறது அல்லாமல், அவற்றின் மூலம் பெறப்படும் ஞானத்தைக் குறிப்பதில்லை என்று அறியவேண்டும். அதாவது திருமந்த்ரமானது ஆத்மஸ்வரூபம், உபாயம் மற்றும் புருஷார்த்தத்தைக் குறிக்கிறது அல்லாமல், அவற்றின் மூலம் பெறப்படும் ஞானத்தைக் குறிப்பதில்லை (உதாரணமாக – “குடை” என்னும் சொல், இன்ன பொருள் என்ற அறிவை நமக்கு அளிக்கிறது. “குடை” என்னும் சொல்லை நாம் கேட்கும்போது, அந்தக் குடையைக் குறித்த அறிவையும் (அதன் பயன் என்ன போன்றவை) நாம் அடைகிறோம். ஆனால் “குடை” என்னும் சொல்லே அதனைக் குறித்த அறிவை நமக்கு அளிக்கிறது என்று கூற இயலாது அல்லவோ? அதாவது ஒரு சொல்லும், அந்தச் சொல் உச்சரிக்கப்படும்போது உண்டாகும் அறிவும் வெவ்வேறானவை ஆகும். “குடை”, “குடையைக் குறித்த அறிவு” ஆகிய இரண்டும் வெவ்வேறு ஆகும்).