Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 101)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

இரண்டு வாக்கியமாகக் கொண்ட மூன்று கருத்துக்கள்

மூலம் – (4) இவ்விரண்டு வாக்யமான யோஜநை தன்னிலே திருமந்த்ரம் முழுக்க ஸபரிகர ஆத்மஸமர்ப்பணபரம் என்றும் அநுஸந்திப்பார்கள். அப்போது ப்ரணவத்தில் மகாரம் ப்ரதமாந்தமேயாக அமையும். ஹவி:ஸமர்ப்பண ந்யாயத்தாலே நிருபாதிகமான ஆத்மஹவிஸ்ஸு நிருபாதிக தேவதையாய் அகாரவாச்யனான நாராயணனுக்கே பரமாக ஸமர்ப்பிதம் என்றதாயிற்று. இப்படி நிருபாதிகமான ஆத்மயாகத்தில் “நம:” என்று தன்னோடு தன் துவக்கறுத்து எனக்கு பரமல்லேன் என்றதாயிற்று. “இதமிந்த்ராய, ந மம” என்னுமாப்போலே இங்கும் பரஸம்பந்த விதியிலும் ஸ்வஸம்பந்த நிஷேதத்திலும் ப்ரவ்ருத்தமாகையாலே வாக்ய த்வயமும் ஸப்ரயோஜநம். இந் நமஸ்ஸு ஸமர்ப்பணந் தன்னிலும் பரநிரபேக்ஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கையிலே தத்பரமாகவுமாம். வேறொருத்தருக்கும் பரமன்று, எனக்கும் பரமன்று என்று வாக்ய த்வயாபிப்ராய மாகவுமாம். திருமந்த்ரம் ஆத்மநிவேதனபரமென்னுமிடத்தை நித்யத்திலே “மூலமந்த்ரேண ஸ்வாத்மாநம் தேவாய நிவேத்ய” என்று அருளிச்செய்தார். இப்படி ஸ்ரீவைகுண்ட கத்யத்திலும் ஸ்ரீமதா மூலமந்த்ரேண மாமைகாந்திக ஆத்யந்திக பரிசர்யாகரணாய பரிக்ருஹ்ணீஷ்வேதி யாசமாந: ப்ராணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் என்று இவ்வர்த்தம் தர்சிதம்.

– திருமந்த்ரத்தை இரண்டு வாக்கியங்களாகக் கொள்ளும்போது ஒரு சிலர் திருமந்த்ரம் முழுவதும் ஆத்மஸமர்ப்பணத்தை அதன் அங்கங்களுடன் விவரிப்பதாகக் கொள்வார்கள். இவ்விதம் கொண்டால் ப்ரணவமான “ஓம்” என்பதில் உள்ள “ம்” என்பது முதல் வேற்றுமையில் கொள்ளப்படும். இவ்விதம் உள்ளபோது ஹவி:ஸமர்ப்பண ந்யாயத்தின் (யாகத்தின் இந்த்ரனுக்கு உரிய அவிர்பாகம் அளிக்கப்படும்போது – இதம் இந்த்ராய ந மம – இது இந்த்ரனுக்காக, எனக்காக அல்ல – என்று கூறப்படுவதைக் காணலாம். இங்கு அவிர்பாகத்தை “இதம் = இது” என்று முதல் வேற்றுமையில் குறித்தது காண்க. இவ்விதம் சமர்ப்பணம் செய்யப்படும் பொருளை முதல் வேற்றுமையில் உரைத்து ஹோமம் செய்தல் ஹவி:ஸமர்ப்பண ந்யாயம் என்று கூறப்படுகிறது) காரணமாக, திருமந்த்ரமானது “எந்தவிதமான காரணமோ அல்லது கட்டுப்பாடோ இன்றி இந்த ஆத்மாவானது ‘அ’ என்னும் சப்தம் மூலம் கூறப்படுபவனும் இயல்பான எஜமானனாக உள்ளவனும் ஆகிய நாராயணனுக்கு அளிக்கப்படுகிறது” என்னும் பொருளை அளிப்பதாகும். இவ்விதம் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி ஆத்மசமர்ப்பணம் செய்யும் யாகத்தில், “நம” என்னும் பதம் “என்னைக் காக்கும் பொறுப்பு இனி என்னைச் சேர்ந்தது அல்ல” என்னும் பொருளை அளிப்பதாகிறது. “இதமிந்த்ராய, ந மம – இது இந்த்ரனுக்கு உரியது, எனக்கு உரியது அல்ல” என்று இரண்டு வாக்கியங்களாகக் கூறுவது போன்று, இங்கும் திருமந்த்ரத்தில் உள்ள இரண்டு வாக்கியங்களும் அவசியமாகிறது; முதல் வாக்கியம் ஸர்வேச்வரனுடனான ஸம்பந்தத்தைக் கூறுவதாகவும், இரண்டாவது வாக்கியம் தன்னுடைய ரக்ஷகத்தில் தன்னுடனான தொடர்பை நீக்குவதைக் கூறுவதாகவும் கொள்ளவேண்டும். மேலும் இங்குள்ள “நம” என்பதுடன் கூடிய சமர்ப்பணம் என்பது ஸர்வேச்வரன் அல்லாமல் தான் தனித்து எதனையும் செய்பவன் அல்லன் என்பதையும் உரைப்பதாகிறது. இரண்டு வாக்கியங்களின் பொருள் – “என்னைக் காப்பாற்றும் பொறுப்பு என்பது ஸர்வேச்வரனுக்கு அல்லாமல் வேறு யாருக்கும் இல்லை, அது என்னுடையதும் அல்ல” – என்பதாகும். திருமந்த்ரம் ஆத்மசமர்ப்பணத்தை உணர்த்துகிறது என்பதை எம்பெருமானார் தன்னுடைய நித்யத்தில் - மூலமந்த்ரேண ஸ்வாத்மாநம் தேவாய நிவேத்ய – மூலமந்த்ரத்தால் ஆத்மாவை எம்பெருமானுக்குச் சமர்ப்பணம் செய்து – என்றார். மேலும் இதே கருத்தை ஸ்ரீவைகுண்டகத்யத்தில் (சூர்ணை 4) - ஸ்ரீமதா மூலமந்த்ரேண மாமைகாந்திக ஆத்யந்திக பரிசர்யாகரணாய பரிக்ருஹ்ணீஷ்வேதி யாசமாந: ப்ராணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் – “ஸர்வேச்வரனே! உனக்கு மட்டுமே இடைவிடாமல் கைங்கர்யம் செய்யும்பொருட்டு என்னை ஏற்பாயாக” என்று விண்ணப்பித்து, வணங்கி, மிகவும் மேன்மையுள்ளதான திருமந்த்ரத்தால் தன்னுடைய ஆத்மாவை ஸர்வேச்வரனுக்குச் சமர்ப்பிக்கவேண்டும் – என்று கூறியதைக் காணலாம்.