Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 100)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இரண்டு வாக்கியமாகக் கொண்ட மூன்று கருத்துக்கள்
மூலம் – இப்படி வாக்ய த்வயமானால் திருமந்த்ரம் முழுக்க ஸ்வரூபபரம். இந்த ஸ்வரூபபர யோஜனையைப் பற்ற “திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்டனாவாய்” என்று பூர்வர்கள் அருளிச் செய்தார்கள். பிறக்கையாவது ஸ்வரூபஜ்ஞானம் பிறக்கையாலே “அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன்” என்கிற முன்பற்ற நிலை கழிகை. அதாவது, தன் இசைவாலும் அநந்யசேஷனாய், அநந்யாதீனனாய், அதடியாக அநந்யப்ரயோஜநனாய், அநந்யசரணனாகை. வளருகையாவது – அதிகார விசேஷாநுரூப கர்த்தவ்ய விசேஷ விஷய ஜ்ஞாந விசேஷத்தாலே உபாய பரிக்ரஹம் பண்ணுகை. த்வயைக நிஷ்டனாகையாவது – த்வயாநுஸந்தானத்தாலே உபாயாந்தரத்திலும் ப்ரயோஜநாந்தரத்திலும் துவக்கற இதில் சொன்ன உபாயத்திலும் ப்ரயோஜனத்திலும் ப்ரதிதிஷ்டிதனாகை. இப்படித் திருமந்த்ரமும் த்வயமுங்கூட ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களைக் காட்டுகின்றன.
– இவ்விதம் திருமந்த்ரம் என்பது இரண்டு வாக்கியமாகக் கொள்ளப்பட்டால், அது ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை விளக்குவதாகிறது. இவ்விதம் திருமந்த்ரம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை விளக்குவதாகக் கொள்ளும்போது பூர்வர்கள், “திருமந்த்ரத்தில் பிறந்து, த்வயத்தில் வளர்ந்து, த்வயத்திலேயே நிலைநிற்க வேண்டும்” என்பார்கள். இங்கு பிறப்பு என்றால் ஆத்மஸ்வரூபத்தைக் குறித்த ஞானம் உண்டாதல் என்பதும், அதன் முன்பிருந்த நிலை நீங்குதலும் ஆகும். இதனைத் திருச்சந்தவிருத்தத்தில் (64) - அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன் – என்றது காண்க. அதாவது தான் பகவானுக்கு அல்லாமல் வேறு யாருக்கும் அடிமை இல்லை, பகவானுக்கு மட்டுமே வசப்பட்டவன், இதன் காரணமாக எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் இருத்தல், அவன் அல்லாமல் மற்ற யாரிடம் சரணம் புகாமல் இருத்தல் போன்ற நிலைகளில் தன்னுடைய முழுமனதுடன் இருத்தல் என்று கருத்து. “த்வயத்தில் வளர்தல்” என்றால் – ஒரு குறிப்பிட்ட செயலை அதற்கான தகுதியை அடைந்த பின்னரே செய்யவேண்டும் என்னும் ஞானம் அடைந்த பின்னர், அந்தச் செயலை உபாயமாகக் கொள்ளுதல் ஆகும். “த்வயத்தில் நிலைநிற்பது” என்றால் – த்வயத்தை மட்டுமே எப்போதும் எண்ணியபடி, அதனையே உபாயமாகக் கொண்டு, அதன் மூலம் கிட்டப்படும் பலனைக் குறித்து நன்றாக அறிந்து, இப்படிப்பட்ட உபாயம் மற்றும் பலன் ஆகியவை அல்லாமல் வேறு எதிலும் செல்லாமல், இதில் மட்டுமே நிலையாக இருத்தல் ஆகும். இப்படியாக திருமந்த்ரம் மற்றும் த்வயம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஆத்மஸ்வரூபம், உபாயம் மற்றும் உபாயத்தின் பலன் ஆகியவற்றை உணர்த்துகின்றன.