Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 99)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இரண்டு வாக்கியமாகக் கொண்ட மூன்று கருத்துக்கள்
மூலம் – (3) இவ்விரண்டு அநுஸந்தானமும் ப்ரதிஷ்டிதமாம்போது ஸ்வரூப விவேகம் வேணும். அதற்காக வாக்ய த்வயமாக அநுஸந்திக்கும்போது “அகார நாராயண சப்த வாச்ய ஸர்வதாரத்வாதி விசிஷ்டனானவனுக்கே நான் நிருபாதிக அநந்யார்ஹ சேஷபூதன், எனக்குரியேனல்லேன், ஒன்றைப்பற்ற நிருபாதிக ஸ்வாமியுமல்லேன், நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனுமல்லேன்” என்றதாம். அகார நாராயண சப்தங்களிரண்டும் பகவந்நாமமாகையாலே புநருக்தி வாராதோவென்னில், அப்போது வ்யுத்பத்தி விசேஷ ஸித்தமான அர்த்தவிசேஷத்தை விவக்ஷித்து ஒன்று விசேஷணமாகக் கடவது. அகார வாச்யனான நாராயணனுக்கு என்றும் புநருக்தி பரிஹரிக்கலாம். பகவச்சப்தமும் நாமதேயமாயிருக்க வாஸுதேவாதி சப்தத்தோடே ஸாமாநாதிகரணமாகா நின்றதிறே. ஸர்வ பீஜாக்ஷர வாச்யமான ஸர்வ காரணம் தேவதாந்தரமோவென்று சங்கியாதபடி நாராயணனென்று விசேஷிக்கையாலும் ஸப்ரயோஜனம். மந்த்ரங்களுக்குப் பதக்ரம் அத்யயந நியதம், அந்வயம் அர்த்தாநுகுணமாகக் கடவது.
– (பத்துவிதமான கருத்துக்களில் மூன்றாவது) மேலே கூறப்பட்ட இரண்டுவிதமான கருத்துக்களும் நன்றாகப் பதியும்போது, தன்னுடைய ஸ்வரூபம் குறித்து பிரித்தறியும் அறிவு அவசியமாகிறது. இதனால் திருமந்த்ரத்தை இரண்டு வாக்கியமாகப் பிரிக்கலாம் (முதல் வாக்கியமாக “ஓம் நாராயணாய” என்பதை “அ நாராயணாய உம்” என்றும், இரண்டாம் வாக்கியமாக “நமஸ்” என்றும் பிரிக்கலாம்). இவ்விதம் எண்ணும்போது, முதல் வாக்கியம் மூலம் “அ என்னும் பதம் மூலம் கூறப்படுபவனும், அனைத்தையும் தாங்கி நிற்பவனும் ஆகிய நாராயணனுக்கு மட்டுமே நான் இயற்கையாகவே அடிமை, மற்ற யாருக்கும் அடிமை அல்லன்” என்பது தேறுகிறது. இரண்டாவது வாக்கியம் மூலம் “நான் எனக்குக் கூட சொந்தமானவன் அல்லன், நான் எதற்கும் எஜமானன் அல்லன், எனக்கு எந்தவிதமான சுதந்திரமும் இல்லை” என்பது தேறுகிறது. இங்கு ஒரு சந்தேகம் எழலாம்; “அ மற்றும் நாராயண ஆகிய இரண்டுமே பகவானுடைய திருநாமங்கள் ஆகும். இவ்விதம் உள்ளபோது – அ நாராயணாய – என்பதன் மூலம் ‘கூறியது கூறல்’ என்பதான புநருக்தி தோஷம் உண்டாகாதோ எனக் கேட்கலாம். அந்தத் தோஷம் உண்டாகாது, காரணம் அவ்விதம் கொள்ளும்போது ஒரு திருநாமம் மற்றொன்றைச் சிறப்பிக்க வந்ததாகக் கொள்ளவேண்டும். அல்லது “அ நாராயணாய உம்” என்பதற்கு “அ என்னும் அக்ஷரத்தால் கூறப்படும் நாராயணனுக்கு நான் அடிமை” என்று பொருள் கொண்டால், புநருக்தி தோஷம் உண்டாகாது. “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” என்னும் மந்திரத்தில் “பகவான்” என்னும் அவனுடைய ஒரு திருநாமம், “வாஸுதேவன்” என்னும் அவனுடைய மற்றொரு திருநாமத்துடன் ஒரே வேற்றுமையில் படிக்கப்பட்டது அல்லவோ? அனைத்திற்கும் காரணமாக உள்ளவன் யார் என்னும் சந்தேகம் எழும்போது அனைத்து அக்ஷரங்களுக்கும் பீஜமாக உள்ள “அ” என்பதால் கூறப்படும் நாராயணனே ஆவான் என்னும்போது இரண்டுக்கும் தனித்தனியாகப் பயன் உள்ளது காண்க. ஒரு மந்திரத்தில் பதங்கள் அமைந்துள்ள வரிசை என்பது வேதத்தில் ஓதுகிறபடி ஆகும்; ஆனால் அந்தப் பதங்களை வரிசைப்படுத்திப் படித்தல் என்பது பொருள் அறியும் அடிப்படையில் ஆகும்.