Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 98)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ஒரு வாக்கியமாகக் கொண்ட இரண்டு கருத்துக்கள்
மூலம் – (2) பத்தாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந: இத்யாதிகளைப் பார்த்துப் ப்ராண்யாந்தர்கத சேஷவ்ருத்தி பரமாகவும் அநுஸந்திப்பார்கள். இவ் வ்ருத்தி விசேஷமும் ஸ்வரூபாநுஸந்தான பூர்வகம். இதுவும் க்ருதோபாயர்க்கு இவ்வளவு ரஸிக்கும் அவஸ்தையிலும் உபஜீவ்யம்.
– (இரண்டாம் கருத்து) மஹாபாரதம் சாந்திபர்வம் (344-45) - பத்தாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந: - கைகளைக் கூப்பியபடி, “நம:” என்று உச்சரித்து மகிழ்ந்து – போன்ற வாக்கியங்கள் மூலம், திருமந்த்ரமானது அடையவேண்டிய மோக்ஷத்தில் அடங்கியுள்ளதான ஸ்வயம் ப்ரயோஜனமாக உள்ள மனம், வாக்கு, சரீரம் கொண்டு செய்தலாகிற அடிமைத்தனத்தைக் காண்பிப்பதாகவும் உள்ளது. இத்தகைய கைங்கர்யம் என்பது, தான் ஸர்வேச்வரனுக்கு அடிமை என்று தனது ஸ்வரூபத்தை முதற்கண் அறிந்த பின்னரே உண்டாகவேண்டும். அல்லது, இந்தக் கைங்கர்யத்தால் பகவானுடைய உகப்பை அறிபவர்களால், இந்தக் கைங்கர்யமாகிற உபாயமானது (தங்களுடைய ஸ்வரூபத்தை அறியும் முன்பாகவே) கைக்கொள்ளப்படுகிறது.