Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 97)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

ஒரு வாக்கியமாகக் கொண்ட இரண்டு கருத்துக்கள்

மூலம் – (1) ஏகவாக்யமானபோது “தஸ்ய வாசக: ப்ரணவ:” இத்யாதிகளிற்படியே “ப்ரணவ ப்ரதிபாத்ய ஸ்வபாவ விசிஷ்டாய நாராயணாய நம:” என்று அந்வயமாம். இப் ப்ரணவம்தானே நாமமாகவற்றாய் நிற்க அவ்யக்தார்த்தத யோங்கார: கேவலம் நைவ ஸாதக: என்று சாண்டில்யாத்யுக்த ப்ரக்ரியையாலே வ்யாபக மந்த்ரங்களில் நாமாந்தரம் வ்யக்தயர்த்தம். இந்த யோஜநாவிசேஷம் அஹிர்புத்ந்யாத்யுக்தமான ஸ்தூலாநுஸந்தான ப்ரகாரத்தைப் பார்த்தால் உபாயபரம். இப்படியானாலும் ஸ்வரூப புருஷார்த்தங்கள் இதிலே அந்தர்கதங்கள்.

– (முதல் கருத்து) திருமந்த்ரம் ஒரு வரி என்று கொள்ளப்படும்போது, யோகஸூத்ரம் (1-27) - தஸ்ய வாசக: ப்ரணவ: - ஸர்வேச்வரனைக் கூறும் சொல் ப்ரணவம் – என்பதற்கு ஏற்ப, “ப்ரணவம் மூலம் தனது ஸ்வபாவம் வெளிப்படுகின்றவனாகிய நாராயணனுக்கு நமஸ்காரம்” என்று திருமந்த்ரத்திற்குப் பொருள் உண்டாகிறது. ப்ரணவம் என்பதே அவனுடைய திருநாமமாக உள்ளபோதிலும், நாராயணன் என்று மற்றும் ஒரு திருநாமத்தையும் கூறுவதன் காரணம் தெளிவாக விளக்குவதற்கே ஆகும் (அதாவது “ஓம் நமோ நாராயணாய” என்பதில் “ஓம்” என்பதே அவனுடைய திருநாமத்தைக் கூறுகையில், தனியாக மீண்டும் “நாராயண” என்பது அவசியமோ என்பதற்கு விடை அளிக்கிறார்). சாண்டில்ய ஸ்ம்ருதி (5-71) - அவ்யக்தார்த்தத யோங்கார: கேவலம் நைவ ஸாதக: - ப்ரணவம் தெளிவான பொருள் உடையது அல்ல என்பதால் அது ஸர்வேச்வரனை விளக்கிக் கூறும் திறன் கொண்டது அல்ல – என்று கூறுவதால், வ்யாபக மந்த்ரங்களில் (அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம் போன்றவை) திருநாமம் காணப்படுவது தெளிவாக்கவே ஆகும். இப்படியாக அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை போன்றவற்றிலும் காணப்படுவதான விளக்கங்கள் மூலம், திருமந்த்ரம் உபாயம் என்று தெளிவாகத் தேறுகிறது.