Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 94)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தின் ஆழ்பொருளை அறிவதால் உண்டாகும் நன்மைகள்

மூலம் – இப்படியே ரக்ஷகனான ஸ்ரீய:பதியைப் பற்ற விச்வாஸமாந்த்யமும், ரக்ஷகாந்தராந்வேஷணமும், “த்வம் மே அஹம் மே” என்று பிணக்கும், நிருபாதிக அந்ய சேஷத்வ ப்ரமமும், தேவதாந்தர ப்ராவண்யமும், தத்பக்த ஸம்ஸர்கமும், மற்றுமுள்ள அஸேவ்யஸேவா ருசியும், தேஹாத்ம ப்ரமாதிகளும், ஸ்வதந்த்ராத்ம ப்ரமாதிகளும், ஸ்வார்த பரிக்ரஹமும், பாகவதாபசாரமும், ஆகிஞ்சந்ய விஸ்ம்ருதியும், ஸம்ஸாராநுவ்ருத்தி ருசியும், ஆத்மநாசாதி பயமும், அஸதாசார ருசியும், சத்ரு மித்ராதி விபாக நிரூபணமும், பாந்தவாந்தர பரிக்ரஹமும், ப்ரயோஜநாந்தர ருசியும், பரம ப்ரயோஜன வைமுக்யமும், மற்றும் ஸ்வநிஷ்டா விரோதிகள் ஒன்றும் பின்னாடாது.

– (திருமந்த்ரத்தை அநுஸந்திப்பதால் விளையும் நன்மைகளைத் தொடர்கிறார்) மகாலக்ஷ்மியின் நாயகனான ஸர்வேச்வரன் காப்பாற்றுவான் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில் தளர்வு, வேறு யாரேனும் காப்பாற்றுவார்களா என்ற தேடுதல், “நீ எனக்கு உரியவன்” என்று ஸர்வேச்வரன் கூறுகையில் “நான் எனக்கே உரியவன்” என்று மறுத்தல், மற்றவர்களுக்கு எந்தவிதமான காரணமும் இன்றி அடிமையாக இருத்தல் என்னும் மயக்கம், மற்ற தேவதைகளிடம் விருப்பம் கொள்ளுதல், அந்த தேவதைகளின் பக்தர்களிடம் ஈடுபாடு கொள்ளுதல், நம்முடைய கைங்கர்யத்தை ஏற்கத் தகுதி அற்றவர்களுக்குக் கைங்கர்யம் செய்தல், சரீரமே ஆத்மா என்ற மயக்கம், ஆத்மா சுதந்திரமானது என்னும் மயக்கம், நமக்காகச் சொத்து சேர்த்தல் முதலிய செயல்களில் ஈடுபாடு, பாகவதர்களிடம் அபசாரப்படுதல், நம்மிடம் கரையேற எந்தவிதமான முதலீடும் இல்லை என்பதை மறத்தல், ஸம்ஸாரத்தில் உழன்றபடி இருப்பதில் ஆர்வம் காண்பித்தல், ஆத்மா அழிந்துவிடும் என்று அச்சம் கொள்ளுதல், தகாதவற்றைச் செய்வதில் ஆர்வமாக இருத்தல், நண்பர்கள் விரோதிகள் என்று பாரபக்ஷம் பார்த்தல், மற்ற பலன்களில் ஈடுபாடு உண்டாதல், ஸர்வேச்வரனை அடைதல் என்னும் உயர்ந்த குறிக்கோளை மறத்தல், தன்னுடைய குறிக்கோளில் நிலைநிற்பதைத் தடுக்கும் விரோதிகள் என்று எதுவும் அருகில் அண்டாது.